‘வாத்தி’ 8 நாட்களில் 75 கோடிக்குமேல் வசூல் || இயக்குநர் மகிழ்ச்சி
நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழில் வெளியாகும் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகும்போது அங்கேயும் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. அவருக்கென அங்கே தனியாக ரசிகர் வட்டமே உருவாகியுள்ளது. இந்த நிலையில் முதன்முறையாக ‘சார்’ என்கிற படம் மூலம் நேரடியாக தெலுங்கில் அடி எடுத்து வைத்துள்ளார் தனுஷ். தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரில் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி வெளியானது. இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, பாரதிராஜா, சாய்குமார், தணிகலபரணி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பல இடங்களில் தற்போதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது வாத்தி. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிக்குப் பக்கபலமாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குனர் உள்ளிட்ட வாத்தி படக்குழுவினர் சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி, உதவி திரைக்கதை ஆசிரியர் சதீஷ், ஒளிப்பதிவாளர் யுவராஜ், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நகைச்சுவை நடிகர் சாரா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இயக்குனர் வெங்கி அட்லூரி பேசும்போது, “இந்தப் படத்தின் கதையை நம்பி படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் வம்சி மற்றும் எனக்கு மிகப்பெரிய ஆதரவு தந்த தனுஷ் இருவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது வரை 8 நாட்களில் 75 கோடி நிகர தொகையாக வாத்தி வசூலித்துள்ளது. பத்திரிகை விமர்சனங்கள் மற்றும் படம் பார்த்தவர்களின் வாய்மொழி பாராட்டுகள் என பாசிட்டிவான விளம்பரம் கிடைத்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் வம்சி, படத்தின் வசூலை எண்ணிக்கொண்டிருப்பதால் இன்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.. வாத்தியைத் தமிழில் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து வெளியிட்ட லலித்குமார் சாரை இன்னும் பார்க்கவே முடியவில்லை. வாத்தி என்னுடைய கனவு திரைப்படம். இதில் தனுஷுடன் பணியாற்றும்போது அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டு இன்னும் நல்ல டெக்னிசியனாக மாறியுள்ளேன்” என்று கூறினார்.