குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், காந்திநகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய பகுதிகளில் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதிலுமிருந்து சுமார் 15,000 விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள். 36 விளையாட்டுத் துறைகளில் பங்கேற்றுள்ளனர். இது இதுவரை இல்லாத மிகப்பெரிய தேசிய விளையாட்டுப் போட்டியாகும்.
இந்தப் போட்டிகளில் சனிக்கிழமை (1-10-2022) காந்திநகர் மைதானத் தில் நடந்த பெண்களுக்கான போல்வால்ட் (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) போட்டியில் தமிழக வீராங்கனை ரோஸி மீனா பால்ராஜ், 4.20 மீட்டர் உயரம் தாண்டி புதிய தேசிய சாதனை படைத்தார். இதன் மூலம் தங்கப் பதக்கத்தையும் அவர் தட்டிச் சென்றார்.
இதற்கு முன்பு 2014-ம் ஆண்டில் தமிழக வீராங்கனை வி.எஸ்.சுரேகா 4.15 மீட்டர் உயரம் தாண்டியதே தேசிய சாதனையாக இருந்தது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தச் சாதனையை சென்னையைச் சேர்ந்த 24 வயது ரோஸி மீனா முறியடித்துள்ளார்.
ரோஸி மீனா பால்ராஜ் முதலில் நேரக் குழப்பம் காரணமாக சென்னையில் இருந்து தனது ரயிலைத் தவறவிட்டார். தஞ்சாவூரில் உள்ள இசை ஆசிரியரான தந்தை பால்ராஜை அழைத்து ரயில் தவறவிட்டதைப் பற்றித் தெரிவித்தார். சில நிமிடங்களில் அவர் தந்தை பணம் கடன் வாங்கி விமான டிக்கெட்டை ஏற்பாடு செய்திருக்கிறார்.
“நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது, சென்னையில் பயிற்சி பெற்ற ஒரு இளம் வால்டர் எங்கள் இடத்திற்கு வந்தார். அந்த விளையாட்டு எப்படி இருந்தது என்பதை நான் முதன்முறை அப்போதுதான் பார்த்தேன். கம்பு வளைந்து, ஒரு நபரைக் காற்றில் அனுப்புவதற்குப் போதுமான ஆற்றலை உருவாக்க முடியும் என்று எனக்குத் தெரியாது,” என்று ரோஸி மீனா கூறினார்.
ரோஸி மீனா தனது தற்போதைய பயிற்சியாளர் மில்பர் பெர்ட்ரான்ட் ரஸ்ஸலை முதன் முதலில் சந்தித்தபோது, ரோஸி மீனா 5 அடிக்கு இரண்டு அங்குலம் குறைவாக இருப்பதால் அவர் கூட இந்த யோசனையில் மகிழ்ச்சியடையவில்லை. ஆனால் ரோஸி ஒருமுறை தன் மனதை ஏதோ ஒரு விஷயத்தில் வைத்தால் அவர் அதை எளிதில் அடையாமல் விட மாட்டார்.
“அவருடைய உயரம் ஒரு போல்வால்டருக்கு உகந்ததல்ல என்று நான் ரோஸியிடம் சொன்னேன். ஆனால் அது ஒரு தடையாக இருக்கும் என்று அவர் நினைக்கவில்லை. என்னுடன் விளையாட்டு குறித்து பத்து நிமிடம் பேசினார் ரோஸி. அவருடைய மன உறுதிதான் அவருக்குக் கற்றுக்கொடுக்கும்படி என்னை வற்புறுத்தியது,” என்று கூறுகிறார் முன்னாள் உடற்பயிற்சியாளரான ரஸ்ஸல்.
ஜிம்னாஸ்டிக்ஸ்ல் ஜூனியர் மட்டத்தில் பல பதக்கங்களை வென்றுள்ள பின்னணியில் ரோஸி இருந்ததால் போல்வால்ட்டுக்கு மாறுவது எளிதாக இருந்தது. ஆனால் 23 வயதில், முற்றிலும் புதிய விளையாட்டைக் கற்றுக்கொள்வது ஒரு புத்திசாலித்தனமான யோசனை யாகத் தெரியவில்லை என்றார் ரஸ்ஸல்.
“நான் எப்போதும் காற்றில் பயணிக்கும் ஒரு விளையாட்டைப் பழக விரும்பினேன். அதனால் தான் நான் ஜிம்னாஸ்டிக்ஸ் முயற்சித்தேன். ஜிம்னாஸ்டிக்ஸ் செய்யும்போது உயரத்தில் இருந்து விழுந்துவிடுவோமோ என்ற பயத்தை நான் ஏற்கெனவே கடந்திருந்தேன். எனவே அது வால்டிங்கில் பெரும் உதவியாக இருந்தது” என்று ரோஸி மீனா விளக்கினார்.
தனது இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு, சுரேகா மீண்டும் போட்டிக்கு திரும்பும் முயற்சியில் உடற்பயிற்சிக்காக ரஸ்ஸலிடம் வந்தார். “அவர் தேசிய சாதனையை முறியடித்தார். அது பயிற்சியைப் பற்றி தீவிரமாகச் சிந்திக்க எனக்கு நம்பிக்கையை அளித்தது. நான் உட்கார்ந்து விளையாட்டின் நுணுக்கங்களைப் படித்தேன் ”என்கிறார் ரஸ்ஸல், ஒரு முன்னாள் வால்டர்.
சென்னைக்கு மாறியதில் இருந்து நிலையான வருமானம் கிடைக்காமல் தவித்துக் கொண் டிருந்த ரோஸிக்கு, தமிழக வீராங்கனை வி.எஸ்.சுரேகாவின் நம்பிக்கை ஒளிக்கீற்று தெம்பாக அமைந்தது. 25 வயதுக்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களைப் பதிவு செய்வதில் இந்திய ரயில்வே தயக்கம் காட்டினாலும், ரோஸியின் விருப்பத்தை சுரேகா பரிந்துரைத்தார்.
“நான் ஏற்கனவே சில முறை விண்ணப்பித்தேன். என் வயதைக் காரணம் காட்டி அவர்கள் என் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர். ஆனால் சுரேகா அக்கா மிகுந்த முயற்சி எடுத்துள்ளார். அவர் என் திறமையில் நம்பிக்கை வைத்து என்னை நன்றாகச் செய்ய எப்போதும் ஊக்கப்படுத்தினார்,” என்கிறார் ரோஸி.
“நான் இப்போது எனக்காகப் பெரிய இலக்குகளை நிர்ணயிக்கவில்லை. அடுத்த ஒரு சர்வதேச நிகழ்வில் இந்தியாவுக்கு மேலும் பதக்கம் பெற்றுத்தர விரும்புகிறேன்” என்றார் ரோஸி மீனா.