நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு உயிரக் காப்பாற்ற முன்வந்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு
திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான கலைப்புலி எஸ்.தாணு, சென்னை காவேரி மருத்துவமனையில் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 33 வயது பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளார். கணவனை இழந்த அந்தப் பெண், கடந்த இரண்டு வருடங்களாக இடைநிலை நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது அவரது நுரையீரலில் காயங்களை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது அவர் இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார். மேலும் தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தில் (TRANSTAN) பதிவும் செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் அந்தத் தகவலைக் கேள்விப்பட்டு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நோயாளியின் மருத்துவ சிகிச்சைக்காக அவரது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் 27 அக்டோபர் 2022, அன்று வழங்கினார். சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் ஐயப்பன் பொன்னுசாமி மற்றும் காவேரி மருத்துவமனையின் மனநல மருத்துவர் யாமினி கண்ணப்பன் ஆகியோர், நோயாளியின் குடும்பத்தினர் சார்பாக இந்தத் தொகையைப் பெற்றுக்கொண்டதோடு, அவரது உன்னதச் செயலுக்கு நன்றியும் தெரிவித்தனர். காவேரி மருத்துவமனை இந்த மாற்று அறுவை சிகிச்சைக்கான மொத்த செலவை மானியமாக வழங்கியுள்ளதுடன் மேலும் பல்வேறு நன்கொடையாளர்களிடமிருந்து நிதி திரட்டவும் திட்டமிட்டுள்ளது.