மாபெரும் புத்தகக் காதலர்! நூலகக் கொடையாளர்! தீராப்பசி கொண்ட அறிவுத் தேடலர்! புத்தக அடுக்குகளுக்கு இடையே, தன்னைப் பொதித்துக் கொண்டவர்…
இப்படி எத்தனை வார்த்தைகளில் வடித்தாலும், அத்தனை வார்த்தைக்கும் சொந்தக் காரர், கீழப்பெரம்பலூர் மு.பாலகிருஷ்ணன்.
தஞ்சைப் பிரகதீஸ்வரர் ஆலயம் எனும் பெருவுடையார் கோயில் சிவபெருமான் பெயரிலேயே இந்த ஊரிலும் பிரகதீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. வரதராஜப் பெருமாள் கோயில் இருக்கிறது. ஊருக்குக் காவலாக ஊர் எல்லையில் யானைகள், குதிரைகள், காலாட்படைகளோடு ஐயனார் காவல் இருக்கிறார்.
ஊரைச் சுற்றி ஆலயங்கள் வீற்றிருக்கின்றன. ஊருக்கு வடக்கே வெள்ளாறும், ஊருக்குத் தெற்கே சின்னாறும் செழுமை சேர்த்து வருகின்றது. இதே ஊரில் தெய்வ ஆலயங்களுக்கு இடையே ஒரு அறிவுக்கோயில் எழுப்ப விரும்பிய ஒரு சாமானிய மனிதனின் சாதனை வாழ்க்கை பற்றி குறிப்பு இது…
மு.பாலகிருஷ்ணன், கீழப் பெரம்பலூர். அகவை 82.
அருகிலுள்ள திட்டக்குடி அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தவர். அறிவுத் தேடல் இளம் வயதிலேயே தொற்றிக்கொண்டு விட்டது.
மக்கள் வாழும் ஊரில் ஓர் அறிவுக் கோயில் உருவாக்குவதுதான் அவரது வாழ்நாள் லட்சியம். நூலகம் உருவாக்கப்பட வேண்டும். அனைவருக்கும் அறிவுப்பசி தீர தீர அமுது படைத்திட வேண்டும். நூலக ஆலயத்திற்கு அனைவரும் வருகை புரிந்து அறிவைப் பருக வேண்டும். எவருக்கும் தடையில்லாமல் வழங்கப்படுகின்ற அருள் அறிவே ஆகும். அந்த அறிவைப் பெற்றிட ஒரு நூலகம் உருவாக்கப்பட வேண்டிய, கனவு நிறைவேற்றப்பட வேண்டிய நாளும் வந்தது. தேவையான அளவில் இடம் இருந்தாலே அரசு ஒரு நூலகம் உருவாக்க முன்வரும் என்ற நிலையில் தனது சொந்த இடத்தில் 10 சென்ட் ஆக வாரி வழங்கினார். நூலகம் பெரிதாகக் கட்டப்பட வேண்டும் இன்று இல்லாவிட்டாலும் நாளை நூலகம் பெரிதாக மாறும். விரிவடை யும் ஊர் மக்கள் அனைவரும் ஒரு நாள் ஒன்று கூடுவார்கள். அந்த ஒன்று கூடும் நாளில் இடமில்லாமல் போய்விடக் கூடாது ஐந்து சென்ட் என்ன பத்து சென்ட் ஆக நிலத்தை அள்ளித் தந்தார் பாலகிருஷ்ணன்.
ஒரு அறிவுச் சமூகத்தில் பிறந்தவனின் தொலைநோக்குப் பார்வை ஒரு நூலகம் எதிர் காலத்தில் விரிவடையும். விரிவடைய வேண்டும். இந்தச் சமூகம் அறிவுடைச் சமூக மாக ஒரு நாள் மாறும். இந்தச் சமூகம் மாற்றம் அடைந்தே தீரும் என்ற தீராத லட்சியவாதி இப்படித்தான் சிந்திக்க முடியும். அவ்வழியே சிந்தித்தார்.
ஒரு நூலகம் உருவானது. ஒரு கனவு நனவானது.
அரசுப் பள்ளியின் எதிரில் இந்த நூலகம், மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது.
பள்ளிக்கூடம் என்பது பயிற்சிப் பட்டறை என்றால் எதிரில் அமைந்திருக்கும் வாழ்க்கைக் கல்வியின் கருவூலம் நூலகம்தானே.
நூலகம் திறப்பு விழா கண்டது. இன்று மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஊர்ப்புற நூலகத்தில் கல்வெட்டில் மாநில முதல்வர் முதற்கொண்டு, மாவட்ட ஆட்சியர் வரை அனைவர் பெயரும் உண்டு. அந்த இடத்தைக் கொடையளித்த அவரின் பெயர் இல்லை. அவர் நூலகமாகவே அவ்விடத்தில் குடியிருப்பதாலோ அவர் பெயரைக் குறிப்பிடாமலே விட்டுவிட்டார்கள்.
பத்திரிகை உள்ளிட்ட பணிகளுக்காகச் சில காலம் சென்னை பயணம் சென்றவர். சில பல பத்திரிகைகள், நூல் வெளியீடு என்று அறிவுக் களத்தில் பயணிக்கத் தொடங்கிய பாலகிருஷ்ணனுக்கு நூல்களைத் தேடித் தேடி வாசித்தல் என்பது தீராத வேட்கையாக தொடர்ந்து கொண்டிருந்தது. சென்னை பயணத்திற்கு பின்பு ஊரிலேயே வாழ்க்கை யைத் தொடர்ந்தார்.
நான்கு பிள்ளைகள் அனைவரையும், கல்வியில் சிறந்து விளங்க வைத்தார். மூதாதை யரின் சொத்து சின்னாற்றுப் படுகையில் விரிந்து இருந்தது.
நூல்களைச் சேகரிப்பது, வாசிப்பது, அதைப் பாதுகாப்பது, பகிர்ந்து கொள்வது என்று அறிவுத்தேடலின் உச்சநிலைக்குச் சென்றுவிட்டார்.
ஒரு கட்டத்தில் புத்தகமே சொத்தானது, சொத்தெல்லாம் புத்தகமானது.
விரிந்து கிடந்த விளைநிலமெல்லாம், வீட்டுக்குள் நூல்களாக விளைந்திருந்தன. அறிவு அறுவடையில் திளைத்துக் கிடந்தார்.
விரிந்து கிடந்த பெரும் தோட்டத்து வீடு ஒரு கட்டத்தில் நூலகமாகவே மாறிவிட்டது. நூலகத்தில் குடியேறிய வாசகனாகவே மாறிவிட்டார். நூல்களுக்கு நடுவே நாளும் வாழ்ந்து வரலானார். இன்றும் அந்த நூல்களுக்கு நடுவே வாழ்ந்து வருகின்றார். முதுமையின் காரணமாகச் சற்றே உடல் ஒடுங்கி இருக்கிறார். நிகழ்காலத்தில் பேசிக் கொண்டிருப்பவர் சற்றே கடந்த காலத்துக்கும் பயணப்பட்டு பழைய நினைவுகளோடு பேசத் தொடங்கி விடுகிறார்.
பெரம்பலூர் மாவட்டத்தின் பெரம்பலூர் நகருக்கு கிழக்குப் பகுதியில் அமர்ந்திருக்கின்ற முதல் ஊர் என்பதால் கிழக்குப் பெரம்பலூர் கீழப்பெரம்பலூராக அழைக்கப்படு வதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் பெரும் பிறையூர் என்பதாக அக்காலத்தில் அழைக்கப்பட்டு இருக்கலாம் என்று அவ்வூர் மக்கள் கருதுகிறார்கள். பெரும்பிறையூர் பிற் காலத்தில் பெரம்பலூராக மாறிவிட்டதாக இருக்கலாம். ஊர் பெயரின் விளக்கத்தை அவரே நமக்கு விரித்துரைக்கிறார்.
நினைவில் பதிந்திருக்கும் ஔவையாரின் ஆத்திச்சூடியை வரி தப்பாமல் ஒப்புவிக் கிறார். நினைவு மாறி மாறி வந்தாலும் விருந்தோம்பலுக்குக் குறைவில்லை. நம்மை உட்காரச் சொல்கிறார், நூல்கள் சூழ்ந்திருக்கும் கடலில் நம்மால் உட்கார இயல வில்லை.
ஒரு மாவட்டத்தின் கடைக்கோடியில் அமைந்திருக்கின்ற ஊர். களிமண் பூமி. மழைக் காலத்தில் சேற்றுக்குள் காலை வைத்தால், முழங்கால் வரைக்கும் புதைந்துவிடும். சின்னாற்றிலும், பெரியாற்றிலும் வெள்ளம் வந்தால் ஒரு தீவு போல ஊர் மாறிவிடும். அடிக்கடி சென்று வர போக்குவரத்து வசதி இல்லாத ஊர்.
இப்படிப்பட்ட ஊரில் இன்றைக்கு 82 வயதில் வாழ்ந்து வருபவர் தமது இளமையி லேயே அறிவு இவரைப் பற்றி கொண்டது. அறிவுக் கடலில் நீந்தியவர் புத்தகத் துடுப்புகளோடு பயணித்து வருகிறார்.
ஏதோ, ஒரு ஊரில் வியக்க வைக்கும் மனிதர்கள் பெரும் கனவுகளோடு தீராத அறிவு பற்றுதலுடன் புத்தகக் காதலோடு வாழ்ந்து வருகிறார்கள்.
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களை எவற்றையும் இடமாற்றி விடக்கூடாது, எவற்றையும் தொலைத்து விடக்கூடாது என்று கவனமாக இருக்கிறார். மழைக்காலத் தில் வெள்ளத்தில் நூல்கள் பரிதவிக்கின்றன. கரையான் பலவற்றை உணவாக்கிக் கொள்கின்றன. ஒருவருக்கு சுவாசக் குழலாகவும், உணவுக் குழலாகவும் அதன் வழியே அவருக்கு வாழ்வதற்குத் தேவையான அனைத்தும் அளிக்கப்பட்டு கொண் டிருந்தால் எவ்வாறு ஒருவர் வாழ்ந்து வருவாரோ அவ்வாறு வாழ்ந்து வருகிறார். இவற்றோடு தன்னைப் பிணைத்துக்கொண்ட, பிணித்துக்கொண்டவரை சிறு தொடர்பையும் அறுத்துவிட்டால் அவர் ஒடுங்கிப் போவார். எனவே அவர் குடும்பத்தவர்கள் அவரின் விருப்பப்படியே ஒத்துழைப்பு நல்கி வருகிறார்கள்.
அந்த ஊர் நூலகத்திற்கு அவரது பெயரையே சூட்டலாம். அதற்கு மேலான தகுதி உடையவர். இத்தனை ஈடுபாடு கொண்ட கொடை அளித்த அந்தக் குடும்பத்தில் இருவர் ஆசிரியர் பணிக்குத் தகுதி உடையவர்கள். ஒரு தனியார் பள்ளியில் அவரின் கடைசி இரு பிள்ளைகள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்குச் சரியான பணியை இந்த அரசு ஒதுக்கீடு செய்யலாம்.
கொண்டாடப்பட வேண்டிய பல மனிதர்கள், அவரின் குடும்பங்கள் கண்டுகொள்ளப்படாமலே இருந்து விடுகின்றன.
புத்தகங்கள் வாசிக்க மட்டும், அல்ல நேசிக்கவும் கற்றுத் தருபவை. இவர்களும் நேசிக்கும்பட வேண்டியவர்கள். நூலகங்கள் அறிவு கருவூலத்தின் அடையாளங்கள்.
கீழப்பெரம்பலூர், பாலகிருஷ்ணன் போன்றோர் என்றும் போற்றுதலுக்கு உரியவர்கள்.
மகன் சுரேஷ்குமார் – 9940725884
மகள் விமலா – 9952811206