2023ஆம் ஆண்டை சர்வதேச சிறு தானியங்கள் (தினை) ஆண்டாக அறிவித்திருக்கிறது ஐ.நா.சபை. அதுவும் இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, எதிர்வரும் 2023ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் சிறு தானியங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்களிடையே மக்காச்சோளம் தவிர்த்து, இதர சிறுதானியங்கள் உற்பத்தியை உயர்த்தவும், பயன்பாட்டினை அதிகரிக்கவும் பல்வேறு வகையான விளம்பரப் பணிகளை மேற்கொள்வதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்றது.
சிறுதானியத்தை வழிமொழிந்த ஒன்றிய அரசு
பாராளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுபோது அந்தக் கூட்டத்தில் தினை மற்றும் விளையாட்டுகளுடன் தொடர்புடைய ஆலோசனைகள் முக்கிய இடத்தைப் பிடித்தது. இது குறித்து பிரதமர் மோடி மேலும் கூறுகையில், “மத்திய அரசின் வேண்டுகோளின் பேரில் 2023ம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக ஐ.நா அறிவித்துள்ளது. ஊட்டச்சத்து அதிகம் உள்ள தானியங்கள் மக்களின் விருப்பமான உணவாக மாற்ற வேண்டும்.
தற்போது இந்தியா தலைமையில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தினை உணவு வகைகள் மெனுவில் இடம்பெறும். அங்கன்வாடிகள், பள்ளிகள், வீடுகள் மற்றும் அரசு ஆகியவற்றிலும் திணை பயன்படுத்தலாம்.
எம்.பி.க்கள் தாங்கள் நடத்தும் கூட்டங்களில் தினைப் பொருட்களை பயன்படுத்தலாம். இந்திய விவசாயிகளில் 85 சதவிகிதத்திற்கும் மேலானோர் சிறு விவசாயிகள் என்ற பிரிவில் உள்ளதால், இந்தத் தானியங்களின் நுகர்வு அதிகரிப்பது அவர்களுக்கு நிதி உதவியாக இருக்கும். தற்செயலாக, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் மதிய உணவை வழங்குகிறது. அந்த மெனுவில் தினை வகைகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுதானியங்களின் நன்மை
சிறுதானியங்களை நவதானியங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. சிறுதானியங்களில் பெரும்பாலானவை குறுகிய காலத்தில் பயிரிடப்பட்டு 65 நாட்களுக்குள் விளைச்சலுக்கு வருபவை.
ஒவ்வொரு சிறுதானியமும் தனித்தனி மணத்தையும், சுவையையும் மற்றும் அளவினையும் கொண்டுள்ளது. நம் முன்னோர்கள் உண்ணும் உணவிலேயே சத்துக்களையும் பெற்றனர். நோய்களையும் குணமக்கினர். ஆனால் இன்று அதிவேகத்தில் வளர்ந்து வரும் நாம் மட்டுமல்லாது நம்முடைய குழந்தைகளும், இளைஞர்களும் மறந்தே உணவு என்ற நிலைக்கு ஆளாகிவிட்டனர். இதற்குக் காரணம் நாகரிகம் என்ற பெயரில் நாம் பின்பற்றி வரும் வெளிநாட்டுக் கலாச்சாரமும் உணவு முறைகளுமே.
ஊட்டச்சத்து நிறைந்தது சிறுதானியங்கள்
உடலின் சரியான செயல்பாட்டிற்குத் தேவையான பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் சிறுதானியங்களில் நிறைந்துள்ளன. இரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் இரத்த ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கத் தேவைப்படும் இரும்புச்சத்து மற்றும் செம்பு (காப்பர்) ஆகியன நிறைந்த அளவில் உள்ளன. மேலும் சிறுதானியங்களில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் பாஸ்பரஸ் உள்ளது. இந்தத் தாதுக்கள் அனைத்துத் தாவர ஊட்டச்சத்துடன் சேரும்போது அனைத்து வகையான நோய்களுக்கும், புற்றுநோய்களுக்கும் எதிராக ஒரு வல்லமைமிக்கப் பாதுகாப்பை உடலில் உருவாக்குகிறது. சிறுதானியங்களில் அதிக அளவு T இரும்புச்சத்து உள்ளது. எனவே இது இரத்தசோகையைக் (Anemia) குணப்படுத்த உதவுகிறது. சிறுதானியங்களில் கால்சியமும் உள்ளது. எனவே சிறுதானியங்களை வழக்கமான முறையில் உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்புகளை வலுவடையச் செய்கிறது.
செயலில் இயங்கிய தமிழக அரசு
2023ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா.சபையால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டே அதற்கான முன்னேற்பாடுகளை தொடங்கிவிட்டது தமிழக அரசு.
சிறுதானியங்கள் உற்பத்தியை உயர்த்தவும், பயன்பாட்டினை அதிகரிக்கவும் மக்கள் மத்தியில் விளம்பரம் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அதோடு ரேஷன் கடைகளில் விரைவில் ராகி, கம்பு, திணை உள்பட சிறுதானியங்கள் விற்பனை செய்ய தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளதாவும், அதன்படி, அவை, பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்து உள்ளது. இதுவும் இந்தாண்டு நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.