ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட ஆறு பேரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இதனால் பல ஆண்டுகளுக்கு மேலாகச் சிறை தண்டனை அனுபவித்துவரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரும் விரைவில் சிறையில் இருந்து விடுதலையாவார்கள்.
தமிழக வரலாற்றில் கறுப்பு தினமாக இன்றளவும் இருந்துவரும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனையை அனுபவித்துள்ளனர். இவர்களின் விடுதலைக்காகப் பல முறை விடுதலை செய்யக்கோரியும் பொதுமன்னிப்பு வழங்கக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கல் திருப்பி அனுப்பப்பட்டன. இந்த நிலையில்தான் இவர்களுக்கு உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்பை வழங்கியிருக்கிறது.
1991ஆம் ஆண்டு தமிழகத்திற்கு வந்திருந்த ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவத்தினால் உயிரிழந்தார். இந்தக் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் கைது செய்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பல வருட பேராட்டங்களுக்குப் பிறகு இவர்களின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டைனையாகக் குறைக்கப்பட்டது. அதன் பிறகு பல போராட்டங்கள் நடத்தியும் மனுக்கள் அனுப்பியும் இவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கவில்லை. அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தொடர்ந்து தனது மகனை விடுதலை செய்யக்கோரி நாட்டின் உயரதிகாரிகள், நீதிமன்றம் மற்றும் தலைவர்களுக்குக் கோரிக்கை மனுக்களை அனுப்பிய வண்ணம் இருந்தார். இந்நிலையில், சில மாதங்களுக்குமுன் பேரறிவாளன் மட்டும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பேரறிவாளனைப் போன்று தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சிறையில் இருந்த மற்ற இரண்டு பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
பேரறிவாளனைப் போன்று மற்ற ஆறு பேரும் தங்களின் நிவாரணங்களைக் கேட்பதற்குத் தகுதியானவர்கள் என்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வு, ‘சிறையில் 30 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்துவரும் ஆறு பேரின் நடத்தையும் திருப்திகரமாக இருந்தது’ எனத் தெரிவித்திருக்கிறது.
அதனடிப்படையில் இந்த வழக்கில் சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ஏ.ஜி. ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஆறு பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் இவர்களுக்கான விடுதலை என்பது காலம் தாழ்த்தப்பட்டு வழங்கப்பட்ட நீதி என்று பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்தாலும் இந்தத் தீர்ப்பு ஆறு பேரின் வாழ்க்கையில் மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான மக்களுக்குக் கிடைத்த சிறந்த விடுதலையாகவே கருதவேண்டும்.