பல கலாச்சாரங்களைக் கொண்ட நாடான கனடாவின் வளர்ச்சியில், இந்து சமூகத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. கனடாவில் நவம்பர் மாதம் இனி இந்துப் பாரம்பரிய மாதமாகக் கொண்டாடப்படும் என்று கனடா ஆளும் கட்சி எம்.பி. சந்திர ஆர்யா டிவிட்டரில் தகவல் தெரிவித்தார். நவம்பர் 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஓம் கொடியை ஏற்றித் தொடங்கி வைத்தார்.
“இன்று நான் நாடாளுமன்ற மலையில் இந்து புனித சின்னமான ஓம் கொண்ட கொடியை உயர்த்துவதன் மூலம் கனடாவின் தேசிய இந்துப் பாரம்பரிய மாதத்தின் வரலாற்றுத் தொடக்கத்தைக் குறித்தேன். Hindu Heritage Month ஆனது 830,000 இந்து-கனேடியர்களின் நமது நாட்டிற்கும் இந்து பாரம்பரியத்திற்கும் மனித குலத்திற்கு அளித்த பங்களிப்பை அங்கீகரிக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது” என்று ட்வீட் செய்துள்ளார்.
கனடா நாட்டில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகிறார்கள். அங்கு அதிக அளவில் வசிக்கும் மக்கள் தங்கள் மதம் தொடர்பாக ஒரு மாதத்தைத் தேர்வு செய்து அதனைப் பாரம்பரிய தினமாகக் கொண்டாடி வருகிறார்கள்.
அதன்படி கனடா நாட்டில் வாழும் சீக்கியர்கள் ஏப்ரல் மாதத்தை சீக்கிய பாரம்பரிய மாதமாகவும், யூதர்கள் மே மாதத்தையும், முஸ்லிம்கள் அக்டோபர் மாதத்தையும் அவரவர் மதப் பாரம்பரிய மாதமாகக் கொண்டாடி வருகிறார்கள்.
அந்த வகையில் இந்துக்களும் தங்களுக்கு ஒரு மாதத்தை இந்துப் பாரம்பரிய மாதமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது தொடர்பாக கனடா நாட்டின் ஆளும் லிபரல் கட்சி எம்.பி. சந்திர ஆர்யா இந்துப் பாரம்பரிய மாதம் கொண்டாடுவது தொடர்பான தனிநபர் தீர்மானத்தை கனடா நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார். இந்தத் தீர்மானம் கடந்த செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி நடந்த கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து நவம்பர் மாதம் இந்துப் பாரம்பரிய மாதமாகக் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டது.
இதனை சந்திர ஆர்யா, “கனடா நாட்டில் முதன்முறையாக இனி நவம்பர் மாதம் இந்துப் பாரம்பரிய மாதமாகக் கொண்டாடப்படும். இதையொட்டி கடந்த 1ஆம் தேதி நான் நாடாளுமன்றத்தில் ஓம் கொடி ஏற்றித் தொடங்கி வைத்தேன்” என்று கூறியுள்ளார்.
பாரம்பரிய மாதத்தின் நோக்கம் அறிவியல், கல்வி மற்றும் மருத்துவம், சட்டம், அரசியல், வணிகம், கலாச்சாரம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாட்டின் இந்து சமூகத்தின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைக் கொண்டாடுவதும், அங்கீகரிப்பதும் ஆகும்.
கனடாவில் உள்ள சுமார் 8 லட்சத்து 30 ஆயிரம் இந்துக்கள் இனி செப்டம்பர் மாதத்தை உற்சாகமாகக் கொண்டாடுவார்கள்.