உலக அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் சாதனையாளர்கள் உருவாகி வருகின்றனர். இதில் சில போட்டிகள் பார்ப்போரை மலைக்க வைக்கும் வகையில் அமையும். அப்படி ஒரு போட்டி தான் ‘ஸ்டிராங் மேன்’ போட்டி. அதாவது உலக இரும்பு மனிதன் எனப்படும் இந்தப் போட்டியில் பங்கேற்பவர், தனது எடையைவிட பல மடங்கு எடை கொண்ட பொருளைத் தூக்குவார். உலகின் பல நாடுகளில் நடைபெறும் இந்தப் போட்டி இந்த ஆண்டு முதன்முறையாக இந்தியாவில் நடைபெற உள்ளது.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் வருகிற 26-ந் தேதி இந்தப் போட்டி நடக்கிறது. ஏழு நாடுகளைச் சேர்ந்த சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டிக்கு இந்தியாவில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தேர்வாகி உள்ளார்.
பண்டைத் தமிழர்களின் வீரத்தினை நினைவூட்டும் விதமாக இள வட்டக்கல் தூக்கும் போட்டிகள் தமிழகத்தில் பண்டிகைகளை ஒட்டி நடைபெறுவது வழக்கம். அப்போது தன் எடையைவிட பன்மடங்கு அதிக எடை கொண்ட உருண்டையான கல்லை இளைஞர்கள் தூக்குவர். சில பகுதிகளில் அப்படி இளவட்டக் கல்லைத் தூக்குபவருக்குத் தங்கள் மகளை மணமுடித்து வைக்கும் பழக்கம் பண்டைக்காலத்தில் இருந்தது.
இப்படிப்பட்ட போட்டியில் இளம்பெண்களும் கலந்துகொண்டு இளவட்டக் கல்லைத் தூக்கியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட போட்டிதான் வெளிநாட்டில் ‘ட்ராங்கமேன்’ என்கிற பெயரில் நடக்கிறது.
“உலகின் வலிமையான மனிதர் யார்?” என்ற பெயரில் 1977ஆம் ஆண்டில் உலகின் வலிமையான மனிதர் போட்டி நிறுவப்பட்டது. அப்போதிருந்து, World Strong Man போட்டியில் உலகம் முழுவதும் இருந்து கலந்துகொண்டு வெல்பவருக்கு சாம்பியன்களாக முடிசூட்டப்படுகிறது.
இந்தப் போட்டி நிறுவப்பட்டதிலிருந்து, ஸ்ட்ராங்மேன் உலகளாவிய பங்கேற்புடன் உண்மையான உலகளாவிய விளையாட்டாக மாறியுள்ளது. இது இன்றைய தலைமுறையில் தரம் வாய்ந்த போட்டியாளர்களை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் நடைபெற உள்ள இந்த ஸ்ட்ராங் மேன் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூர் அருகே உள்ள தாமரை குட்டிவிளை பகுதியைச் சேர்ந்த கண்ணன் கலந்துகொள்ள இருக்கிறார். இவர் உடற்பயிற்சியாளராக உள்ளார். இவர் பலமுறை காரைத் தூக்குவது, லாரியை இழுப்பது போன்ற பல சாதனைகளைச் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில்தான் உலக ‘ஸ்டிராங் மேன்’ (இரும்பு மனிதன்) போட்டிக்கு கணணன் தேர்வாகியுள்ளார். 40 வயதாகும் கண்ணனுக்குத் திருமணமாகி மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் கலந்துகொள்வது பற்றி கண்ணன் கூறும்போது: “நான் 2019-ம் ஆண்டு தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று 3-வது இடத்தைப் பிடித்துள்ளேன். தற்போது ஏழு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் ‘உலக ஸ்டிராங் மேன்’ போட்டிக்கு 85 கிலோ எடைப் பிரிவில் தேர்வாகி உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. போட்டியில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்” என்றார் நம்பிக்கையாக.
இந்தப் போட்டி லாக் பிரஸ், யோக்வாக், டயர் பிளிப், ஸ்டோன் என நான்கு பிரிவுகளாக நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர் ‘உலக ஸ்டிராங் மேன்’ பட்டம் வெல்வார்.
தமிழகத்தைச் சேர்ந்த கண்ணன் உலக ஸ்ட்ராங் மேனாக வெற்றிபெற வாழ்த்துவோம்.