சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்று தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது. அதனால் இந்தியாவின் நிலைமை என்ன என்பது பற்றி நேற்று மத்திய சுகாதாத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
சீனாவில் ஒமிக்ரான் BF.7 மற்றும் BF.12 கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் அதே தொற்றுவகை பரவல் காணப்பட்டுள்ளது. அந்த வகையில், உயர்மட்ட மருத்துவர்கள் அமைப்பான இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ.), கொரோனா தடுப்பு நடவடிக்கையை உடனடியாகப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கூட்டத்தில் கொரோனா தொற்று பரவலின் சர்வதேச நிலை மற்றும் உள்நாட்டு நிலவரம் குறித்து அமைச்சருக்கு விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து பரிசோதனையை அதிகரிக்கவும் தொற்று தடுப்பு நடவடிக்கையை முறையாகப் பின்பற்றவும் அனைத்து மாநிலங்களிலும் தொற்று உறுதி செய்யப்படவேண்டும், அனைவரது மாதிரிகளையும் மரபணு மாற்றப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கண்காணிப்பை வலுப்படுத்தவும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா உத்தரவிட்டார்.
வேகமாகப் பரவக்கூடிய தொற்றின் எண்ணிக்கையை அடுத்து, பொது ஆலோசனையையும் ஐ.எம்.ஏ. வெளியிட்டது. அதில், வரவிருக்கும் கொரோனா அலையைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளைக் கோடிட்டுக் காட்டியது.
நம் நாட்டில் தற்போது வரை தீவிர பாதிப்பு ஏற்படவில்லை என்றபோதிலும் தேவையான மருந்துகளை கையிருப்பு வைத்திருக்க, கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
நெரிசலான இடங்களில் முகமூடிகளை அணியுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கும் அதே வேளையில், சமூக இடைவெளியைப் பேணுதல், சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது சானிடைசர்களால் கைகளைக் கழுவுதல் ஆகியவற்றை ஐ.எம்.ஏ. வலியுறுத்தியது.
அவசர மருந்துகள், ஆக்சிஜன் சப்ளை மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் கிடைக்க, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவதன் மூலம் 2021 இல் காணப்பட்டது போன்ற எந்தவொரு சூழ்நிலைக்கும் தயார்நிலையை உயர்த்துமாறு அரசாங்கத்தை ஐ.எம்.ஏ. வலியுறுத்தியது.
இந்த நிலையில் இந்திய பாரம்பரியத்தைக் காக்கும் பொருட்டு நடைபயணம் மேற்கொண்டுவரும் ராகுல் காந்தியை நடைபயணத்தை நிறுத்தும்படி மத்திய அமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழக மக்களுக்கு எதிர்ப்புச் சக்தி இருப்பதால் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்காது என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருந்து கொரோனாவிடமிருந்து காத்துக்கொள்வது நல்லது.