சென்னையில் அண்ணாநகர் முக்கிய பகுதி. அதில் உள்ள அண்ணா டவர் அந்தப் பகுதி மக்களுக்கு மகிழ்விக்கும் பூங்காவாகவும் உடற்பயிற்சிக்கு ஏற்ற இடமாகவும் இருந்தது.135 அடி உயரம் கொண்ட அந்த கோபுரத்தின் உச்சியில் இருந்து பொதுமக்கள் சென்னையின் அழகைப் பார்த்து ரசித்து வந்தனர். அதே நேரத்தில ஒரு சிலர் டவரில் ஏறி நின்று குதித்து தற்கொலை செய்யும் இடமாகவும் மாறியிருந்ததால் தற்காலிகமாக முடியிருந்தார்கள். அதை தமிழக அரசு தற்போது புனரமைக்கப்பட்டு வருகிற 26ஆம் தேதி திறக்க உள்ளனர். அது பற்றிய ஒரு பார்வை.
சென்னையில் பரபரப்பான பகுதியாகவும் முக்கிய பகுதியாகவும் பல இருந்தாலும் அதில் அண்ணாநகர் முக்கியமானது. வசதியானவர்கள், பிரபலங்கள் என்று பலர் அண்ணாநகரில் வசிக்கிறார்கள். அண்ணாநகருக்கு இது மட்டும் காரணமல்ல, அண்ணாநகருக்கு கூடுதல் அழகு சேர்ப்பது அண்ணா டவர் பூங்காதான். இதற்கு நீண்ட வரலாறு உண்டு.
அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த சமயம் 1968ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக உலக வர்த்தக கண்காட்சியை நடத்தத் திட்டமிடப்பட்டது. இந்தக் கண்காட்சியை ஒட்டி அண்ணாநகரில் அமைக்கப்பட்டதுதான் அண்ணா டவர் பூங்கா.
சென்னை நகரம் பெரிய அளவில் வளர்ச்சி அடையாத காலத்திலேயே இந்த அண்ணா டவர் அண்ணாந்து பார்க்கும் வகையில் கட்டப்பட்டிருந்தது. இந்த கோபுரம் 135 அடி உயரத்தில் 12 மாடிகளுடன் பிரமாண்டமாகக் காட்சியளிக்கும். இந்தக் கோபுரத்தின் மீதேறி நின்று பார்த்தால் சென்னையின் அழகை பார்த்து ரசிக்கலாம்.
இந்தப் பூங்கா பொதுமக்களின் பொழுதுபோக்கு சரணாலயமாகவும், குழந்தைகள் குதூகலித்து விளையாடும் இடமாகவும், முதியவர்கள் அமைதியாக அமர்ந்து கலந்துரையாடவும் சிறந்த இடமாக இருக்கும்.
குழந்தைகளுக்கு விளையாட்டுடன் கல்வி அறிவையும் வளர்க்கும் வகையி A B C D என்று ஆங்கில எழுத்துக்கள் வடிவில் உள்ள ஏற்ற இறக்கத்தில் குழந்தைகள் ஏறி இறங்கி மகிழ்கின்ற இடமாகவும் இது இருக்கிறது.
பெயர் எப்படி வந்தது?
டாக்டர் விஸ்வேஸ்வரர் கோபுரம் பூங்கா என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்ட இந்தப் பூங்காவில் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலத்தில் நுழைவாயில் ஆர்ச் கட்டப்பட்டது. அதற்கு அண்ணா ஆர்ச் என்று பெயரும் சூட்டப்பட்டது. அதன்பின்னர் பூங்காவுக்கு வருகின்ற மக்கள் அதனை அண்ணா டவர் பூங்கா என்றே அழைத்து வருகின்றனர்.
புதிதாகப் புனரமைத்துள்ள பூங்காவுக்கு வரும் மக்களுக்கு இலவச வைபை வசதி செய்யப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆண்கள், பெண்களுக்காக தலா எட்டு கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நடைபயிற்சிக்குப் புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளது. தியானம், பிராணாயாமம் செய்யவும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவிற்கு வெளியே நுழைவாயில் அருகில் மக்கள் பசியாற இயற்கை உணவுகள் கொள்ளு, கற்றாழை, தூதுவளை, பிரட்டை கசாயம் விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இளநீர் கடையும் உண்டு.
சரி, பூங்காவுக்கு எப்படி வருவது?
அண்ணாநகர் டவுண்டானாவிலிருந்து திருமங்கலம் செல்லும் ரோட்டில் சென்று அய்யப்பன் கோவிலில் இருந்து வலதுபுறமாகத் திரும்பினால் பூங்காவின் முன்பக்க வாசலை அடையலாம்.
என்ன… அண்ணா டவரைக் காண இப்போதே தயாராகிவிட்டீர்களா?