ஆவின் நிறுவனம் கான்ட்ராக்ட்தாரர்களுக்குப் பணம் தரவில்லை என்று அதனால் அவர்கள் எங்களுக்கு சம்பளம் தரவில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர் தனியார் ஒப்பந்ததாரர் செக்யூரிட்டிகள்.
சோழிங்கநல்லூர் ஆவின் பால் உற்பத்தி பண்ணையில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திற்கு கடந்த மூன்று மாதங்களாக காசோலை தராததால் காவலாளிகளுக்கு மாத ஊதியம் கிடைக்கவில்லை. அதனைக் கண்டித்து காவலாளிகள் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவின் பால் உற்பத்தி நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வரும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திற்கு கடந்த மூன்று மாதங்களாகப் பணம் தராமல் நிலுவையில் உள்ளதாகவும் அதை விரைந்து வழங்க வேண்டும் என்று ஆவின் நிர்வாகத்தைக் கேட்டு வருகிறார்கள் செக்யூரிட்டி ஒப்பந்ததாரர்கள்
ஆவின் நிர்வாகம் தங்களுக்குப் பணம் தராத இந்நிலையில் நாங்கள் முடிந்த அளவுக்கு இரண்டு மாதம் ஊழியர்களுக்கு மாத ஊதியம் கொடுத்துவந்தோம். கடந்த 2 மாதம் நிறுவனத்திற்குப் பண நெருக்கடி ஏற்பட்டதால் காவலாளிகளுக்கு ஊதியம் தராத முடியாத ஒரு சூழலுக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினர் ஒப்பந்ததாரர்.
அரசு டெண்டர் ஆச்சே சரியான முறையில் ஊதியம் கிடைக்கும் என்று நம்பினோம். இங்கு இருக்கும் அதிகாரிகள் எங்களுக்குக் காசோலை சரிவர தருவதில்லை. மூன்று ஷிப்ட், 28 காவாலாளிகள் சுழற்சி முறையில் பணிபுரிகிறார்கள். இன்று இவர்கள் கொட்டும் மழை என்று கூட பார்க்காமல் போராட்டம் பண்ண காரணம் ஆவின் நிறுவனம்தான் என்று தனியார் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்துப் போரட்டத்தில் ஈடுபட்ட காவலாளிகளிடம் கேட்டபோது “கடந்த மாதமும் நாங்கள் சம்பளத்திற்காகப் போரடினோம். ஆனால் எந்தப் பலனும் இல்லை. நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். மாதா மாதம் தொடர்ந்து ஊதியம் தருவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால் உடல்நலம் சரி இல்லாமல் ஒரு நாள் விடுப்பு எடுத்தால் இரண்டு நாள் ஊதியத்தை எங்களிடன் பிடுங்கி எங்கள் வயிற்றில் அடிக்கின்றனர்.
அது மட்டும் இல்லாமல் கடந்த மாதம் பாதுகாப்பு போடாத இடத்தில் கணினி திருட்டுப் போய்விட்டது என்று எங்களை அடித்து துன்புறுத்தினர். காவாலாளி இல்லாத இடத்தில் திருட்டு போனால் நாங்கள் எப்படி பொறுப்பு ஆக முடியும்? அங்கு இருக்கும் அதிகாரிகள் செய்த தவறில் இருந்து தப்பிக்க எங்களை பலிகடா ஆக்குகின்றனர். இத்தனை அடி உதைகளையும் வாங்கிக் கொண்டு குடும்ப சூழ்நிலையில் பணிபுரிந்து வருகின்றோம். பால் பண்ணையை நாங்கள் பாதுகாக்கின்றோம். ஆனால் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை.
இந்த ஆவின் பால் பண்ணைக்குப் பணிபுரிந்த நாள் முதல் அல்லல் படுகின்றோம். பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கின்றோம். இந்த ஆவின் நிறுவனம் எங்களை மட்டும் பிச்சை எடுக்க வைத்தால் பரவாயில்லை. எங்களுக்கு ஊதியம் இல்லாமல் எங்கள் குடும்பத்தின் வயிற்றிலும் அடிக்கின்றனர்” என்று வருத்தத்துடன் தெரிவித்தார் போரட்டத்தில் ஈடுபட்ட காவலாளி ஒருவர்.