சென்னையின் மிக நேர்த்தியான அடையாளம் மெரினா கடற்கரை. நாடு முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிற இடம். அழகிய கடற்கரை, அதன் அழகிய நீர் மற்றும் பளபளக்கும் மணல்களுடன், இந்தியாவின் மிக நீளமான இயற்கை நகர்ப்புறக் கடற்கரை. மெரினா கடற்கரை, சென்னை உலகின் இரண்டாவது மிக நீளமான நகர்ப்புறக் கடற்கரை. இது தெற்கில் பெசன்ட் நகரிலிருந்து வடக்கே செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை கிட்டத்தட்ட 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் அந்த அழகிய கடற்கரை சில சமூக விரோதிகளின் செயலால்குப்பைக்கூளங்களின் இருப்பிடமாகி சுற்றுப்புற மாசை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
சமீபத்தில் பெய்த மழைநீர், கழிவு நீர் கால்வாய் மூலமாக்க கடலில் கலந்தபோது அதில் உள்ள குப்பைக் கூளங்களையும் அடித்துக்கொண்டு வந்து கடலில் கலந்தன.
அதனால் கடற்கரை முழுவதுமாக குப்பைகளாகக் காட்சியளிக்கின்றன.
சென்னைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள், கட்சி மாநாட்டுக்கு வரும் பிற மாவட்டத்தினர், தமிழகச் சுற்றுலாவுக்கு வரும் பிற மாநில மக்கள் என எல்லாரும் தவறாமல் வருகை தரும் இடம் மெரினா கடற்கரை.
குறிப்பாக, குழந்தைகள் நாள் முழுவதும் மெரினா கடற்கரையில் குளித்தாலும் ஆசை தீராமல் மீண்டும் மீண்டும் நீராடிக் களிக்கும் இடம் மெரினா கடற்கரை. சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும்போது கடற்கரையுடன் நடைபயிற்சி செய்வது எல்லாருக்கும் ஓர் இனிமையான அனுபவம்.
இப்படிப்பட்ட பெருமைவாய்ந்த சென்னையின் பாரம்பரிய அழகு பெற்ற இடம் மெரினா கடற்கரை தற்போது நுரை பொங்கி வந்து துர்நாற்றம் வீசுகிறது, கரையெங்கு குப்பைகள் கொட்டிக்கிடக்கின்றன என்பது வேதனையான விஷயம்.
இத்தாலிய வார்த்தையான ‘மெரினா’ என்று பெயரிடப்பட்ட இந்தக் கடற்கரை 1880 களில் கவர்னர் மவுண்ட்ஸ்டுவர்ட் எல்பின்ஸ்டோன் கிராண்ட் டஃப் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து சென்னையில் கடற்கரை ஒரு பிரபலமான
இடமாக இருந்து வருகிறது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்ட நடைபாதையில் பல அற்புதமான நினைவுச்சின்னங்கள் மற்றும் கட்டடங்கள் உள்ளன. பல புகழ்பெற்ற இந்தியப் பிரமுகர்களின் வாழ்க்கையை நினைவுகூரும் சிலைகளைக் கண்டறிவதால், நடை பாதையில் உலா வருவது உற்சாகமான ஒன்றாக இருக்கும். தற்போது இரண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் மேலும் புதுப்பிக்கப்பட்டு நான்கு சுற்றுலா சமாதிகளுடன் அழகுற அமைந்துள்ளது மெரினா கடற்கரை. அதனால் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மெரினாவுக்கு வந்து கடற்கரையில் கால்களை நனைத்து அங்கிருக்கும் கடைகளில் உண்டுகளித்து இளைப்பாறிச் செல்வது வழக்கமான ஒன்று.
அந்த உலகப் பெருமைவாய்ந்த கடற்கரை நீரில் சாக்கடை கலந்து நுரை பொங்கி வருகிறது. துர்நாற்றமும் வீசுகிறது. கரையெங்கும் குப்பைகள் குவியல் குவியலாக் குவிந்துள்ளன. அதையும் அறியாமல், பொருட்படுத்தாமல் மக்கள் கடற்கரையில் களிக்கிறார்கள் என்பது வேதனையானது.
ஏற்கெனவே ஈமக்காரியம் செய்யும் பொருட்களைக் கரைக்கும் இடமாக மெரினா உள்ளது. அதன் கழிவுகள் அங்கங்கே நிரம்பி வழிகின்றன. அதோடு சாக்கடைக் கழிவும் கலந்து கடற்கரை மணலே கருமையாகக் காட்சி தருகிறது.
இதற்கு உடனே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து சரிப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.
உலகப் புகழ்பெற்ற மெரினா கடற்கரைக்கு ஏற்பட்ட இந்த நிலையைக் கண்டு சிலர் கரையிலேயே தயக்கமாக நின்றுவிட்டுத் திரும்பியதைப் பார்க்கச் சங்கடமாக இருக்கிறது. தமிழக அரசு உடனே தலையிடுவேண்டும் என்று வேதனையோடு சொல்கிறார்கள் பொதுநலன் விரும்பிகள்.