டெல்லியில் கடந்த 18ம் தேதி நடைபெற்ற மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதை உற்பத்தியும், விதை உற்பத்தியின் போது நடத்தப்படும் கள ஆய்வுகளும் திட்டமிட்டபடி நடைபெற்றால், அடுத்த 2 ஆண்டுகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு வணிக அடிப்படையில் சாகுபடி செய்யப்பட்டு, சந்தைக்கு வந்து விடும். அது நிகழ்ந்தால் இந்தியாவில் உணவுப்பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடும்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களிலும் தமிழகத்தில் 45 இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9ஆம தேதியை தேசிய உணவு பாதுகாப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் மரபணு கடுகு உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
12 ஆண்டுகளுக்குப் பின் மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இது உச்ச நீதிமன்றத்தில் அரசு அளித்த வாக்குறுதிக்கு மாறாக உள்ளது என்கிறனர் சமூக ஆர்வலர்கள்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பு இதற்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அதில் “போதுமான ஆய்வுகளும், தரவுகளும் இல்லாமல் டெல்லி பல்கலைக்கழகம் சமர்ப்பித்த அறிக்கைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு பாதிப்புகள் இல்லை என்ற முடிவுக்கு நிபுணர் குழு வந்திருக்கக் கூடாது. அதேவேளையில் இந்த நிபுணர் குழுவானது இந்திய தட்பவெட்ப சூழலில் இந்த DMH-11 கடுகு எந்த விதமான தாக்கத்தை உண்டாக்கும், தேனீக்கள் போன்ற உயிரினங்கள் மீது என்ன தாக்கத்தை உண்டாக்கும் என்பதை கண்காணிக்க அறிவுறுத்தியிருந்தது.
இப்படி நிபுணர் குழுவே கூடுதல் ஆய்வுகள் தேவை என கருதியிருக்கும் நிலையில் அவசர அவசரமாக இக்கடுகிற்கான அனுமதியை GEAC வழங்கியிருப்பது இந்திய மக்கள் மீதும் நம் நாட்டின் சூழல் மீதும் ஒன்றிய அரசுக்கு அக்கறை இல்லாததை வெளிக்காட்டுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தன் கண்டன அறிக்கையில், “இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரை வணிக நோக்கில் பயிரிட அனுமதிப்பதற்கு முன்னோட்டமாக, அதன் விதைகளை உற்பத்தி செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்திருக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்தால், இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரின் வணிக நோக்கிலான சாகுபடி அடுத்த இரு ஆண்டுகளில் தொடங்கி விடும். இது ஆபத்தானது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு வகையின் விதை உற்பத்திக்கு மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அளித்துள்ள அனுமதிக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் முதன்முதலாக வணிகரீதியாக அனுமதிக்கப்பட்ட மரபணு மாற்றப்பட்ட பொருள் பி.டி.பருத்தி. பேசில்லஸ் துரின்ஜியன்சிஸ் என்னும் பாக்டீரியாவின் சுருக்கம்தான் பி.டி.
இந்த பாக்டீரியா ஒருவகை விஷத்தன்மை கொண்டது. அந்த விஷ மரபணுவைத்தான் பருத்தி மரபணுக்களோடு கலக்கச் செய்து பி.டி.பருத்தியை உருவாக்கினர்.
இப்படிச் செய்வதால் பூச்சிக்கொல்லி மருந்தடிக்கும் வேலை விவசாயிகளுக்கு இருக்காது என்பதுதான் உள்நோக்கம். பூச்சிக்கொல்லியை செடிகளுக்குள் வைத்துவிட்டால் செடியே பூச்சிக்கொல்லியாக வளரும். அதனை உண்ட பூச்சிகள் சாகும். விளைச்சல் அதிகரிக்கும் என்பது இதன் பின்னுள்ள அறிவியல்.
இப்படிப் பூச்சிகளைக் கொல்லும் திறன் படைத்த பி.டி. பருத்தியால் உண்மையில் நச்சுப்பூச்சிகளை அழிக்கமுடியாது. பி.டி.பருத்தியை எதிர்கொண்டு அவை வளரத் தொடங்கிவிடும்.
பி.டி.தொழில்நுட்பம் எந்த வகையிலும் பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டைக் குறைக்காது. விளைச்சலும் குறைந்தளவே கிடைக்கும் என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.
மரபணு மாற்றப்பட்ட கடுகை எதிர்த்து இன்று சென்னை தி.நகர் தக்கர்பாபா வித்யாலயாவில் மரபணு மாற்று இல்லாத உணவு விழா மற்றும் பாரம்பரிய விதைத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கும் இந்த விழாவில் இயற்கை பொருட்களால் சமைத்த உணவு, தின்பண்டங்கள், பாரம்பரிய விதை, மரபணு மாற்றத்தால் விளையும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவிருக்கிறது.
மேலும் மரபணு மாற்று இல்லாத நாட்டுப் பருத்தியில் கையால் நெய்யப்பட்ட ஆடைகள் கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அதோடு விதை பரிமாற்றம், மாடித் தோட்ட ஆர்வலர்கள் விளைவிக்கும் சிறப்பான விதைகளைக் காண்பிக்கவிருக்கின்றனர். இதில் கைமாற்றுதல், பகிர்தல் எனும் சிறப்பு நிகழ்வும், சிறுதானிய காலண்டரும் வெளியிடப்படவிருக்கிறது.
மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வர்களான கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகியோர் மரபணு மாற்றுப் பயிர்களை கடுமையாக எதிர்த்துள்ளனர். அதே நிலைப்பாட்டில் தமிழ்நாடு அரசும் மத்திய அரசின் ஆபத்தான இம்முயற்சியை எதிர்க்க வேண்டும் என பல சமுக செயற்பாட்டாளர்கள் தெரிவத்து வருகிறார்கள்.