நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தும் டாக்டர்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். அவர்களே உடலைப் பராமரிக்காமல் நோயோடு குறைந்த நாட்களே உயிர் வாழ்ந்து மறைந்தால் அந்த மருத்துவத் துறையின்மேல் எப்படி நம்பிக்கை வரும்? ஆனால் 100 வயது நரம்பியல் டாக்டர் ஒருவர் 100 வயதுவரை ஆரோக்கியமாக வாழ்ந்துகொண்டு நோயாளர்களுக்கு மருத்துவம் பார்த்து வருகிறார் என்பது ஆரோக்கியமான விஷயம். அவருக்கு கின்னஸ் சாதனைப் புத்தகம் சான்றிதழ் வழங்கிப் பாராட்டியிருக்கிறது.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம் க்ளீவ்லேண்ட் நகரைச் சேர்ந்தவர் ஹோவர்ட் டக்கர். இவர் 100 வயதாக, கிட்டத்தட்ட 75 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வருகிறார். இவர் ஒரு நரம்பியல் நிபுணர். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வாரந்தோறும் தொடர்ந்து நோயாளிகளுக்குச் சேவை செய்து வரும் ஹோவர்ட், கொரோனா பரவலின்போது கூட ஜூம் வழியாகத் தனது மருத்துவ சேவையைத் தொடர்ந்தார்.
அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தைச் சேர்ந்த இவர் கடந்த 1921ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி பிறந்தார். மருத்துவம் படித்த இவர் இரண்டாம் உலகப்போரில் மருத்துவராகப் பணியாற்றியிருக்கிறார். கொரியப் போரின்போது, அட்லாண்டிக் கடற்படையில் இவர் ராணுவ வீரர்களுக்கு மருத்துவராகப் பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த 2021ஆம் ஆண்டு உலகின் வயதான மருத்துவராக கின்னஸ் அமைப்பு இவரைத் தேர்வு செய்தது.
ஒருநாள், உலகின் வயதான முடிதிருத்துபவர் என ஒருவரை பற்றிய செய்தியை டக்கர் படித்திருக்கிறார். அப்போதுதான் கின்னஸ் அமைப்புக்குத் தன்னைப் பற்றி கடிதம் எழுதியுள்ளார். அதன்பிறகு டக்கரைப் பற்றிய தகவல்களைச் சரி பார்த்த கின்னஸ் அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள், அவருக்கு ‘உலகின் மிக வயதான மருத்துவர்’ என்று 2021ஆம் ஆண்டு சான்று அளித்தனர். அப்போது அவருடைய வயது 98 வருடங்கள் 231 நாட்கள் ஆகும். தற்போது 100 வயதை கடந்திருக்கும் டக்கர், இன்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
அவரது 100வது பிறந்த நாளுக்குப் பிறகு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து இதற்கு சிகிச்சை பெற்றுவந்த அவர், தற்போது ஆன்லைன் மூலமாகத் தனது நோயாளிகளுடன் கலந்துரையாடி வருகிறார்.
கின்னஸ் சாதனை குறித்து கூறுகையில், “இதனால் நான் பெருமை கொள்கிறேன். இந்தப் பாராட்டு மூலம் நான் 1947-ல் எப்படி இருந்தேனோ அதே போல மக்களுக்கு மருத்துவம் செய்வேன். நான் மருத்துவ சேவையைத் தொடங்கியபோது அன்றாடம் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொண்டே இருப்பேன். எனக்கு இந்தச் சாதனையால் பெரிதும் மரியாதையாக கருதுகிறேன்” என்றார்.
இவருடைய 89 வயதான மனைவி சூ ஒரு உளவியல் மருத்துவர். அவரும் இப்போதும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இந்த வயதான டாக்டர் தம்பதியை பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்துவருகின்றனர்.