24 மணி நேரமும் சூரிய மின்சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் கிராமம் என குஜராத்தின் மோதேரா கிராமத்தை பிரதமர் மோடி அறிவித்தார்.
குஜராத்தில் மூன்று நாள் சுற்றுப் பயணத்தைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, முதல் நாளான (9-10-2022) நேற்று மொதேரா கிராமத்தில் ரூ.3,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவைத்துப் பேசினார்.
குஜராத்தின் மெக்சானா மாவட்டத்தில் உள்ள மொதேரா கிராமம், சூரியக் கோயிலுக்குப் பிரபலமானது. இனி அது சூரிய மின்சக்திக்கும் (சோலார் பவர்) உலக அளவில் அறியப்படும் கிராமமாக இருக்கும். சோலார் சக்தியைப் பயன்படுத்துவதை நோக்கிய மாபெரும் பயணத்துக்கு இது சிறந்த தொடக்கமாக அமைந்தது.
குஜரைத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மோதேரா கிராமம்தான் இந்தியாவிலேயே முதல் சூரிய மின்சக்தி கிராமமாக மாறி உள்ளது. இங்குள்ள வீடுகள், அலுவலகங்கள் என 1300 கட்டடங்கள், கூரைகளின் மேல் சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்டு சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது என்பது கவனத்தைக் கவருகிறது. இவை, ஒரு கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியவை.
இந்தக் கிராமம் வருடம் முழுவதும் 24 மணி நேரமும் சூரிய மின்சக்தியில் இயங்கும்.
நரேந்திர மோடி குஜராத்தில் முதல்வராக இரண்டு முறை ஆட்சி அமைத்தபோதே சூரிய மின் சக்தியைப் பயன்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்தியிருந்தார். அதன் வளர்ச்சி முதல் கட்டம் தான் இந்திய கிராமத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மொதேரா கிராம மக்கள் இனி மின் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. அவர்களுக்குத் தேவையான மின்சாரத்தை அவர்களே தயாரித்துக் கொள்வர். பயன்பாட்டுக்குப் போக எஞ்சியுள்ள மின்சாரத்தை விற்பனை செய்து, அதன் மூலம் அவர்கள் வருமானமும் ஈட்ட முடியும்.
இந்த சோலார் அமைப்பு முற்றிலும் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டத்துடன் (பி.இ.எஸ்.எஸ்.) இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரவு நேரத்திலும் மின்சாரம் பெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சோலார் மேம்பாட்டுத் திட்டத்தை இரு கட்டங்களாக உருவாக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ.80 கோடி முதலீடு செய்துள்ளன. மேலும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த குஜராத் மாநில அரசு 12 ஹெக்டேர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது.
சூரியனார் கோயிலுக்குப் பெயர் பெற்ற இந்த கிராம் இனி இந்தியாவில் முதல் சூரிய மின்சக்தி கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரியனார் கோயிலுக்கும் சூரிய சக்தியில் இயங்கும் 3-டி தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இறுதியாக மோதேரா கிராமத்தில் உள்ள மோதேஷ்வரி மாதா கோயிலுக்கு பிரதமர் மோடி சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் இருந்தார்.