யூடியூப், இன்ஸ்டாகிராம், முகநூல் என எந்த பக்கம் போனாலும் சித்த மருத்துவத்தை குறித்து ஒரு பெண் மருத்துவர் பேசும் வீடியோ நம்மை கடந்து செல்ல முடியாமல் சிறிது நேரம் கட்டிப்போட்டு விடுகிறது. அவர்தான் ஷர்மிகா.
சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஷர்மிகா சமூக வலைதளங்களில் சித்த மருத்துவ டிப்ஸ் சொல்வதன் வாயிலாகப் பிரபலமானவர். சமீபத்தில் அவர் அளித்த சில டிப்ஸ் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இவர் யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது வித்தியாசமான மருத்துவக் குறிப்புகள் மூலம் குறுகிய காலத்தில் பிரபலமானார். இவரது பேட்டிகள் பலரது சந்தேகத்துக்கு உரியதானது.
சமீப காலங்களில்தொடர்ந்து துறைசார்ந்த நிபுணர்கள் அல்லாதவர்கள் பலரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப மருத்துவக்குறிப்புகள் அழகு குறிப்புகள் என சமூக வலைதளங்களில்வழங்கி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் யூடியூப்பில் பார்த்து முகப் பொலிவிற்காக செங்காந்தள் கிழங்கு சாப்பிட்ட திருப்பத்தூரை சேர்ந்த லோக நாதன் என்பவர் உயிரிழந்தார். யூடியூப் பார்த்து பிரசவம், வெடிகுண்டு தயாரிப்பது போன்ற மிக ஆபத்தான நடவடிக்கைகளில் சிலர் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற யூடியூப்கள் ஆபத்தை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டிய சூழல் உள்ளது.
ஆனால் இதுபோன்ற அறிவியலுக்கு புறம்பாக மருத்துவ குறிப்புகளை சமூக வலைதளங்களில் ஒரு மருத்துவர் ஈடுபட்டது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெய்சி சரணின் மகளும் சித்த மருத்துவருமான ஷர்மிகா, கவுந்து படுத்தால் புற்றுநோய் வரும், தினமும் 4 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும், ஒரு குளோப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரே நாளில் 3 கிலோ எடை கூடும். நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும். பீப் நம்மை விட பெரிய மிருகம் அதை சாப்பிட்டால் செரிமான கோளாறு ஏற்படும் என்பது போன்ற கருத்துக்களை தொடர்ந்து சமூக ஊடகங்களில் தெரிவித்து வந்தார். ஒரு கட்டத்தில் குழந்தை பிறப்பது குறித்து அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை தெரிவித்தார். குழந்தை பிறப்பதற்கு கடவுள்தான் மனசு வைக்க வேண்டும்.
ஒருமுறை பாடகி சின்மயி கூட, ஷர்மிகா தவறான கருத்துகளைப் பரப்புவதாகக் கூறி வீடியோ வெளியிட்டார். குறிப்பாக, ஷர்மிகா தனது சமீபத்திய பேட்டிகளில், மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது குலோப்ஜாமூன் சாப்பிட்டால் ஒரே நாளில் மூன்று கிலோ எடை கூடும், நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும், குப்புறப் படுத்தால் மார்பகப் புற்றுநோய் வரும், கடவுள் மனசு வைத்தால்தான் குழந்தை பிறக்கும் என்றெல்லாம் கூறிய கருத்துகள் மேலும் மேலும் சர்ச்சையானது. ஷர்மிகா அறிவியலுக்கு புறம்பாக, மருத்துவத்துக்கு எதிராக பேசுவதாக அவர்மீது விமர்சனங்கள் எழுந்தது
இதைத் தொடர்ந்து மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராகத் தவறான கருத்துகளைப் பேசும் ஷர்மிகா குறித்து, யாராவது புகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற தவறான தகவல்களை நம்பி சுய மருத்துவம் செய்துகொள்வது கூடாது என தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையின் இணை இயக்குனர் மருத்துவர் பார்த்திபன் கூறியிருந்தார்.
ஷர்மிகா பிரபலமானதை அடுத்து பல யூடியூப் சேனல்களில் தொடர்ந்து பேட்டியளித்து வந்தார்.
இந்நிலையில் குலோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை அதிகரிக்கும் என்று சொன்னது ஒரு ஃபுளோவில் வந்த வார்த்தைதான்… அது தப்புதான் என ஷர்மிகா வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கோரியிருந்தார்.
இந்த நிலையில் ஷர்மிகா மீது இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறையில் புகாரும் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதுடன் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது.
சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவக் கல்லூரி இயக்குநர் அலுவலகத்தில் நேற்று சித்த மருத்துவர் ஷர்மிகா தன் வழக்கறிஞர்களுடன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
சரி சித்த மருத்துவர் ஷர்மிகா யார்?
பா.ஜ.க.வில் மாநில சிறுபான்மைப் பிரிவு தலைவரான டெய்சியின் மகள்தான் ஷர்மிகா.
டெய்ஸி ஏற்கெனவே சிவசூர்யாவிடன் பேசிய ஆடியோ விவகாரம் சர்ச்சையானது தெரிந்திருக்கலாம். தற்போது டெய்ஸியின் மகள் சித்த மருத்துவர் ஷர்மிகா கருத்து சர்ச்சையாகி விசாரணையில் இருக்கிறார்.
விசாரணையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் கணேஷ், சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் கனகவல்லி உள்ளிட்டோர் ஷர்மிகாவிடம் புகார்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
ஷர்மிகாவிடம் புகார் தொடர்பாக வந்த கடிதங்கள் தரப்பட்டது. அனைத்தையும் படித்துப் பார்த்துவிட்டு எழுத்துப் பூர்வமாக பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைக்கு பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் பதில் அளிக்க கெடு விதிக்கப்பட்டு உள்ளது. அவர் விளக்கம் அளித்த பின் நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி நடவடிக்கை எடுப்பது குறித்த முடிவு எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று மருத்துவத் துறையில் தெரிவிக்கப்பட்டது.