இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஹ்ராம் உடுப்பில் உள்ள புதிய போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகியிருக்கிறது. அதற்கு நடிகர் ராஜ்கிரண் தன் முகநூல் பக்கத்தில் ‘அந்தணர் என்போர் அறவோர்’ எழுதிப் பதிவிட்டிருந்ததுதான் மேலும் வைரலாக்கியது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா யூத் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர். இவர் தனது 16ஆவது வயதில், 1996ஆம் ஆண்டு ‘அரவிந்தன்’ என்ற திரைப்படத்திற்காக இசையமைத்து இசை வாழ்க்கையைத் தொடங்கினார்.
2001ஆம் ஆண்டு வெளியான தனுஷின் முதல் படமான ‘துள்ளுவாதோ இளமை’ மூலம் தமிழ்த் திரை உலகில் பிரபலமானார்.
யுவன் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்துப் பெற்றவர்.
2014ஆம் ஆண்டு யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விட்டதாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். தன் முஸ்லிம் பெயரை அப்துல் ஹாலிக் என்று தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று ஜஃப்ரூன் நிஷா என்ற பெண்ணை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
நடிகர் ராஜ்கிரண் முகநூல் பதிவில் கூறியுள்ளது.
‘அந்தணர் என்போர் அறவோர்’. அறவழியில் வாழும், உண்மையான அந்தணர்கள், இஸ்லாமியர் மீது வெறுப்புகொள்ள மாட்டார்கள்…
தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் என்றெல்லாம் சலம்பித் திரிய மாட்டார்கள்… அவர்கள், இஸ்லாமியர்களை,
‘அஹமதியர்’, ‘முஹம்மதியர்’ என்று அழைத்து, பாசத்தோடுதான் பழகுவார்கள்… ஏனெனில், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேதத்தை, அவர்கள் முழுமையாகக் கற்றுணர்ந்ததால் அவர்களுக்குத் தெரியும்,
‘கல்கி அவதாரம்’ யாரென்பது… என்று ராஜ்கிரண் எழுதியிருந்தார்.
ஆர். கரிகாலன் என்பவர் தன் முகநூல் பதிவில் ‘யாத்திரை’ என்ற தலைப்பின் கீழ் எழுதியிருந்ததையும் தன் முகநூல் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் ராஜ்கிரண். அந்தப் பதிவு கீழே…
யாத்திரை
யுவன்சங்கர் ராஜாவின் புகைப்படமொன்று. இஹ்ராம் உடுப்பில் இருந்தார்.
சினிமா துறையில் இருப்பவர். பளபளப்பான ஆடைகளில் அவரைப் பார்த்திருக்கிறேன்.
இந்த ஆடை வித்தியாசமாக இருந்தது. Faqir போன்ற தோற்றம். ‘The root of suffering is attachment!’ என்றார் புத்தர். ஒரு இளம் துறவியைப்போல் இருக்கிறார்.
துறவு எப்போதும் வாழ்க்கையை மறுப்பது ஆகாது. அது இன்பத்தை மறுப்பதும் அல்ல. துறவு உண்மையில் இன்பத்தை ஒழுக்கங்களாக மாற்றுவதற்கே மேற்கொள்ளப்பட்டுகிறது.
யுவன் உம்ரா பயணம் மேற்கொள்கிறார். உம்ரா, இசுலாமியர்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரை.
இசுலாமியர்களின் கடவுள் வணக்கம் மூன்று நிலைகளில் செயல்படுகிறது.
1. உடல் சார்ந்து. 2. பொருள் சார்ந்து. 3. உடல் பொருள் இரண்டும் சார்ந்து.
பொருள் சார்ந்த வணக்கத்தை ஸதகா, ஸகாத் என்கிறார்கள்.
இவை ஏழைகளுக்காக ஒதுக்கப்படும் நிதிகள். இறைவன், கல்வி, மருத்துவம் என இந்நிதி வணக்கம் விரிந்த தன்மை கொண்டது.
உடலும் பொருளும் சார்ந்த இறைவணக்க யாத்திரைகளே உம்ராவும், ஹஜ்ஜூம்.
உம்ரா – தரிசிப்பது எனப் பொருள். தைக்கப்படாத மேலாடை, கீழாடை உடுத்திய யுவனின் தோற்றம்தான் என்னை வசீகரித்தது.
இதைதான், ‘உண்பது நாழி, உடுப்பவை இரண்டே’ என்கிறது தமிழ்.
இசுலாம் குறித்து தப்பெண்ணங்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில், யுவன்சங்கர் ராஜாவின் இந்த யாத்திரை, இசுலாத்தின் மாபெரும் அமைதி விருப்பத்தை, எளிமையை, தவத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
யுவன் யாத்திரைப் பாதையை அல்லாவின் ஒளி தழுவட்டும்.
Karikalan R அவர்களின் பதிவு.
இதை ஷேர் செய்த ராஜ்கிரண் ‘நன்றி தம்பி’ என்று பதிவிட்டிருந்தார்.