

தனது 4 வயது மகனைப் புதிதாகப் பள்ளியில் சேர்த்தபோது பிரம்புக் கம்புடன் உறுதிமொழி பத்திரத்தை ஆசிரியரிடம் அளித்த பெற்றோர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த சங்கரபாண்டியன் – தமிழரசி தம்பதியின் சக்தி என்ற 4 வயதுடைய மகனை மதுரை செல்லூர் பகுதியில் உள்ள மனோகரா நடுநிலைப்பள்ளியில் பள்ளியில் சேர்த்தனர்
அப்பொழுது பெற்றோர் 4 அடி உயரமுள்ள பிரம்பு கம்பையும் கொண்டுவந்தனர். அதோடு உறுதிமொழி மனுவையும் தலைமை ஆசிரியரிடம் வழங்கி தனது மகன் தவறு செய்தால் இந்தப் பிரம்பைக் கொண்டு அடிக்க வேண்டும் எனவும், அப்போதுதான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று உறுதிமொழி பத்திரத்தில் எழுதிக்கொடுத்தனர்.

அவர்களிடம் விளக்கம் கேட்டபோது, “ஆசிரியர்கள் கண்டிப்பில்தான் சிறந்த மாணவனை உருவாக்க முடியும் என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்று முன்மாதிரியாகத் எனது மகனைப் பள்ளியில் சேர்த்தோம்” என்று பெற்றோர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
ஆசிரியரை அடிக்க பள்ளியிலேயே கையை ஓங்குவது, கல்லால் அடிப்பது, ஆசிரியரை கொலை செய்து விடுவதாக மிரட்டுவது, இன்னும் கொஞ்சம் மேலே போய் ஆசிரியரையே கொலை செய்வது என மாணவர்களின் அட்டகாசம் அதிகரிக்கும் நிலை தற்போது தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இதைக் கண்டிக்கும், தண்டிக்கும் நடவடிக்கைகள் நடந்தாலும்கூட. மாணவர்களை அடிக்கக்கூடாது என்கிற கட்டுப்பாடு காரணமாக மாணவர்களின் நடவடிக்கையைக் கண்காணித்து திருத்தும் ஆசிரியர்களும் ஒதுங்கிக்கொள்கிறார்கள். இந்த நேரத்தில் ஒரு பெற்றோர் தன் பிஞ்சு மகனை கண்டிக்கலாம், தேவைப்பட்டால் தண்டிக்கலாம் என்று பிரம்பை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது.

இதை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதுவே சாத்தியமில்லை. மாணவர்களை அன்பால் திருத்தவேண்டும் என்பதுதான் உலக நாடுகளின் கல்விக்கொள்கை. இன்னும் அயலகக் கல்வி முறையை நாம் கற்கவேண்டும் என்பதை இந்தச் செயல் நமக்கு உதவியாக இருக்கும்.
ஆசிரியரும் அதற்கு மறுப்புத் தெரிவித்து அனுப்பியிருக்கிறார். காரணம் ஆசிரியர்கள் பெற்றோருக்குச் சமம் மட்டுமல்ல, பெற்றோருக்கும் மேலானவர்கள் என்றே சொல்லலாம்.