இந்தியாவிலேயே முதன்முறையாக, மஹாராஷ்டிராவில் மாற்றுத்திறனாளிகள் நலனிற்கான புதிய துறை அமைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சியில் இது நடந்திருக்கிறது.
இந்தியாவில் மட்டும் ஏழு கோடிக்கும் அதிகமானோர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். வளர்ந்த நாடுகளைவிட இந்தியா போன்ற ஏழை மற்றும் வளரும் நாடுகளில் மாற்றுத்திறனாளிகள் கூடுதல் எண்ணிக்கையில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனமும் உலக வங்கியும் இணைந்து தயாரித்த 2011ஆம் ஆண்டின் மாற்றுத் திறனாளிகளைப் பற்றிய முதல் உலக அறிக்கை குறிப்பிடுகிறது.
2006ஆம் ஆண்டு ஊனமுற்றோருக்கான ஐ.நா. சாசனம் விதிகளை இந்தியாவும் கையொப்பமிட்டு ஏற்றுள்ளதோடு, தற்போது அது அமலிலும் உள்ளது.
“மாற்றுத் திறனாளிகளின் தேவைகளைக் கருணை அடிப்படையில் பார்க்கக்கூடாது என்பதும் உரிமைகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும் என்பதும், அவர்களுக்கு எதிரான பாரபட்சங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்” என்பதும் ஐ.நா. சாசன விதிகளாகும்.
டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மும்பையில் 5ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில், மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசும்போது, “மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகப் புதிதாக துறை ஒன்றை அமைக்க, மாநில அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதில் சமூகநீதி, சிறப்பு உதவிகள் துறைகளைப் புதிய துறையுடன் ஒன்றிணைத்து மாற்றுத்திறனாளி மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான புதிய துறை உருவாக்கப்படும்.
சமூக நீதித்துறையின் கீழ் வழங்கிவந்த கல்வி, பயிற்சி, மறுவாழ்வு உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளின் நலன் சார்ந்த நடவடிக்கைகளை இந்தப் புதிய துறை மேற்கொள்ளும். இதற்காக மாநில அரசு 1,143 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக மகாராஷ்டிராவில்தான் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகத் தனித்துறை அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 64.8 சதவிகிதம்பேர் கல்வி கற்றவர்களாக உள்ள நிலையில், வெறும் 49 சதவிகிம் மாற்றுத்திறனாளிகளே கற்றவர்களாக உள்ளனர். 44 சதவிகித பள்ளிகள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாதவைகளாக உள்ளதாக அரசு தகவல்கள் உள்ளன. பார்வையற் றோருக்கான பிரெயில் வடிவிலான ஆவணங்களும் காதுகேளாத வாய் பேசாதோருக்கான செய்கைமொழி பெயர்ப்பாளர்களும், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான அரசு பள்ளிகள் மற்றும் சிறப்பாசிரியர்கள் போதிய அளவில் இல்லாததும் இவர்களின் கல்விக்குத் தடைகளாக உள்ளன.
வேலை வாய்ப்பில்லாமல் அவதியுறும் ஊனமுற்றோரின் எண்ணிக்கை 66 சதவிகித மாக உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு இன்னின்ன வேலைகள் ஒதுக்கப்படலாம் என்று இனம் காணும்படி சட்டம் வழிகாட்டுகிறது. அரசுத் துறைகளில் உள்ள C மற்றும் D பிரிவு ஊழியர் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கும் முறை 1977ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு 1996ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்த சமவாய்ப்புச் சட்டத்திலும் வழிவகை செய்யப்பட்டது.
ஆனால் அரசோ, வெறும் நூறு வேலைகளை மட்டும் பட்டியலிட்டுள்ளது. தேசிய ஊனமுற்றோர் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மையத்தின் புள்ளிவிவரப்படி, அரசு வேலை வாய்ப்பில் 0.5 விழுக்காடும், தேசிய அளவில் எடுத்துக்கொண்டால் 0.4 விழுக்காடும்தான் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துறையை ஏற்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் சென்னை கோளவம் முட்டுக்காடு அருகே கிழக்குக் கடற்கரை சாலையில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு, சேவையாற்றி வருகிறது.
இங்கு, மறுவாழ்வு மருத்துவம், மறுவாழ்வு உளவியல், ஊனமுற்றோருக்கான தொழில் பயிற்சி, பேச்சு, கேட்டல் மற்றும் தொடர்புப் பயிற்சி, சிறப்புக் கல்வி, கண் பார்வையின்மையோடு இணைந்த காது கேளாமை, இயன்முறை மருத்துவம் மற்றும் செயல்முறை மருத்துவம், 0-3 வயதில் தொடக்கக் காலப் பயிற்சி, செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கு சாதனங்கள் பொருத்துதல், உணர்வு உறுப்புகள் குறைபாட்டுக்கான ஒருங்கிணைப்புப் பயிற்சி, சமுதாயம் சார்ந்த மறுவாழ்வு பணிகள் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன.
தமிழகத்திலும் தனி வாரியம் அல்லாமல் தனித்துறையே அமைக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையும்.