உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க், சமூக வலைதள நிறுவனமான டிவிட்டரை விலைக்கு வாங்க பல கட்ட பேரம் நடத்தி டுவிட்டர் நிறுவனத்தை 3.52 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கினார். வாங்கிய கையோடு அடுத்த மூன்று ஆண்டுகளில் டுவிட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க விரும்பியவர் ஒவ்வொரு நிர்வாகப் பிரிவிலும் பல்வேறு மாற்றங்களைச் செய்ய உடனே களத்தில் இறங்கினார்.
அந்நிறுவனத்தை தன் முழு கட்டுப்பாட்டின் கீழ் எடுத்த பின் பல்வேறு மாற்றங்களை அவர் செய்ய துவங்கி உள்ளார்.
முதல் கட்டமாக டிவிட்டர் நிறுவனத்தில் ஏற்கெனவே பணியாற்றிய தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் உள்ளிட்டோரை அதிரடியாக நீக்கினார். தொடர்ந்து அங்கு பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் முடிவு செய்துள்ளார்.
அதிரடி நடவடிக்கையாக அமெரிக்காவில் வசிக்கும் சென்னையைச் சேர்ந்த தமிழர், பொறியாளர் ஸ்ரீராம் கிருஷ்ணனை டிவிட்டர் சி.இ.ஓ.வாகத் தற்காலிகமாக நியமித்துள்ளார்.
டிவிட்டர் சமூக ஊடகத்தின் உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தும் கொள்கையில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய அவர் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்?
ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லுாரியில் பி.டெக்., ஐ.டி., பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். அதன் பின் அமெரிக்கா சென்றவர், ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தில் பணியைத் தொடங்கினார். அந்நிறுவனத்தின் ‘வின்டோஸ் அசூர்’ மென்பொருளை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
‘ஸ்நாப், பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக ஊடகங்களின் தொழில்நுட்ப உள்ளடக்கத்தை மேம்படுத்திய குழுவுக்குத் தலைமை தாங்கி பல்வேறு புதிய உத்திகளை இவர் உருவாக்கி உள்ளார். டிவிட்டர் நிறுவனத்திலும் பல்வேறு உயர் பதவிகளை இவர் வகித்துள்ளார். அதில் இருந்து விலகி, ‘ஆன்ட்ரீசன் ஹாரோவிட்ஸ்’ என்ற தொழில்நுட்ப முதலீட்டு நிறுவனத்தில் பங்குதாரராக இவர் இணைந்து உள்ளார்.
பல்வேறு புதிய தொழில் ஆலோசனைகளுடன் வரும், ‘ஸ்டார்ட் – அப்’ நிறுவனங்களில் இவரது நிறுவனம் முதலீடு செய்து வருகிறது. இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தில் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்வதற்காக, ஸ்ரீராம் கிருஷ்ணனைத் தன்னுடன் இணைந்து பணியாற்ற எலாக் மஸ்க் நியமித்துள்ளார்.
“எலான் மஸ்குக்கு உதவுவதற்காகவே, சில தொழில்நுட்ப நிபுணர்களுடன் இணைந்து தற்காலிகமாகப் பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளேன். ‘ஆன்ட்ரீசன் ஹாரோவிட்ஸ்’ நிறுவனத்தில் என் பணி தொடர்கிறது” என, ஸ்ரீராம் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் தந்தை இன்சூரன்ஸ் துறையில் பணியாற்றியவர். இவருடைய மனைவி ஆர்த்தி ராமமூர்த்தி கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் படித்தவர். 2002ல் யாஹூ மெசஞ்சரில் சந்தித்துத் திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தம்பதியினர் சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
மேலும் அதிரடி நடவடிக்கை
டிவிட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரபூர்வ டிவிட்டர் கணக்குகளில் ‘புளூ டிக்’ பயன்படுத்துகின்றனர். இந்த புளு டிக்கைப் பயன்படுத்த பயனர்கள் 4.99 அமெரிக்க டாலர்கள் (ரூ.410 வரை) செலுத்த வேண்டியிருந்தது. இந்த நிலையில், அதிகாரபூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ டிக்கிற்காகப் பயனாளர்களிடம் மாதம்தோறும் ரூ.1,600 வரை (19.99 அமெரிக்க டாலர்கள்) கட்டணம் வசூலிக்க எலான் தலையிலான டிவிட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிகிறது.