நடிகர் ரஜினி ஸ்டைல் என்பது ஒரு டிரேட் மார்க். அவர் வசன உச்சரிப்பு, புதிய பாணி உடலசைவு, சண்டைக் காட்சி, பன்ஞ் டைலாக் எல்லாமே தமிழக ரசிகர்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போனது. அது மட்டுமல்ல, ரஜினி பாதிப்பு அவருக்குப் பின் வந்த நடிகர்களின் நடிப்பிலும் பிரதிபலித்தது. அதன் காரணமாக 20 ஆண்டுகளாக ரஜினியின் குரலில் உடலசைவில் புதிய நடிகர்கள் நடிப்பது படத்திலும் விளம்பரப் படத்திலும் தொடர்ந்து வந்தது.
இந்த முறை ரஜினியின் வளர்ச்சிக்கு ஆதரவாகவும் அதே நேரத்தில் பாதிப்பையும் தருவதாக இருந்தது என ரஜினி நினைத்தார். அதன் காரணமாக அவர் முன்பு ஒரு சமயம் தன் குரலையோ நடிப்பையோ இமிடேட் செய்து யாரும் நடிக்கவோ பேசவோ கூடாது என தடை வித்தார் ரஜினி. அப்போது நடிகர் சின்னி ஜெயந்த் ரஜினி பெயரில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அதற்கு தடை வருமோ என பயந்து ரஜினியைப் பார்த்து தன் படம் வெளிவர தடையை நீக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன் பிறகு ரஜினி தடை நீக்கினார்.
பல குரலில் பேசுபவர்கள் ரஜினி குரலில் உடற்மொழியில் பேசாமல் நிகழ்ச்சியை முடிப்பதில்லை. பிரதானமான நிகழ்ச்சியாகவும் ரஜினியின் குரல்மொழி அமைந்திருக்கும்.
தற்போது முன்னணியில் உள்ள விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்கள்கூட ரஜினீயின் படத்தையோ போட்டோவையோ தங்கள் படத்தில் காட்டி அவரது ரசிகர்களையும் கவர்வது தொடர்ந்து நடந்துகொண்டுதான் வந்தது.
இந்த நேரத்தில் ஒய்.ஜி-மகேந்திரா சாருகேசி என்கிற 50 அரங்கேற்ற விழாவில் அதே பெயரில் ஒரு படத்தை நடித்து இயக்குவதாக அறிவித்து அதற்கு ரஜினி கிளாப் அடித்து தொடங்கிவைத்த நிகழ்வு அண்மையில் சென்னையில் நடந்தது. அப்போது ரஜினி விழாவில் பேசியபோது, தான் முன்பு அதிகமாக சிகரெட் பிடித்ததாவும் மது அருந்தியதாகவும் அவரது மனைவி லதா அதைத் தடுத்து திருத்தியதாகவும் பேசினார்.
அந்தக் கருத்து அவரது ரசிகர்களால் பெரிதாக பாராட்டப்பட்டாலும் வேறு சிலரின் நையாண்டிக்கு ஆளாது. அது தொடர்ந்து நெட்டிசன்களால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாது. முகநூல் பக்கத்திலும் வைரலானது. பலரும் தாளித்து எடுத்தனர்.
இது ரஜினியின் கவனத்துக்குச் சென்றது. அதன் பிறகுதான் ரஜினி கீழ்கண்ட அநிக்கையை தன் வழக்கறிஞர் மூலம் வெளியிட்டார் என்கிறார்கள் திரைத்துறையில் சிலர்.
தற்போது அரசியலில் இருந்து முற்றிலும் ஒதுங்கி இருக்கிறார் ரஜினி. தற்போது தேர்தல் நடந்துகொண்டிருக்கிறது. அதில் நமது பேர் அடிபட விரும்பவில்லை ரஜினி.
அதற்காக அவர் வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கையில், “நடிகர் ரஜினிகாந்தின் ஒப்புதல் இல்லாமல் அவரது பெயர், புகைப்படம், குரல் பயன்படுத்தத் தடை. அனுமதி இல்லாமல் ரஜினிகாந்தின் பெயர் புகைப்படம் மற்றும் குரலைப் பயன்படுத்துவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று நடிகர் ரஜினிகாந்த் சார்பில் வழக்கறிஞர் சுப்பையா இளம்பாரதி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
ரஜினி உங்களை விரும்பித்தான், கௌரவப்படுத்துவதற்காகத்தான் வளரும் நடிகர்கள், பல குரல் மன்னர்கள் உங்கள் குரலை உடல்மொழியைப் பயன்படுத்துகிறார்கள். உங்களைக் கிண்டல் செய்யும் நோக்கம் அவர்களுக்கு இல்லை. சில அரசியல் கிருமிகள்தான் உங்களை திட்டமிட்டு அசிங்கப்படுத்த உங்கள் படங்களையும் உங்கள் கருத்தையும் குரலையும் பயன்படுத்துகிறார்கள். யார் உங்களை தவறாகப் பயன்படுத்துகிறோர்களோ அவர்களை கண்டியுங்கள் தண்டியுங்கள். வளரும் இளையவர்களையும் திரைக் கலைஞர்களையும் பல குரல் கலைஞர்களையும் இதிலிருந்து விலக்கு அளியுங்கள் என்கிறார்கள் திரைத்துறையில் உள்ள சில அனுபவசாலிகள்.
ரஜினி காதுகளுக்கு இந்தக் கருத்து எப்படியாவது சென்றால் நல்லது.