தமிழ்நாட்டில் உள்ள அரசு நூலகங்களில் Kindle Unlimitedமூலம் மின் நூல்களை இலவசமாகப் படிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். கிண்டில் கருவிகளை வாங்கி வைப்பார்களா அல்லது கணினிமூலம் கிண்டில் நூல்களைப் படிக்கச் செய்வார்களா என்று தெரியவில்லை. எதுவானாலும் மிக நல்ல முயற்சி, மிகத் தேவையானதும்கூட.
அமேசானுடன் நின்றுவிடாமல் கூகுள், FreeTamilEbooks, Tamil Digital Library, Archive dot org, Noolaham dot org உள்ளிட்ட பல தளங்களில் உள்ள தமிழ் மின்னூல்களைத் தொகுத்துப் படிக்கக் கொடுக்கலாம். பொதுமக்கள், ஆய்வு மாணவர்கள் என எல்லாரும் பயன் பெறுவார்கள்.
ஆத்தூரில் ஓர் அரசு நூலகம் இல்லாவிட்டால், ஒரு பைசா செலவில்லாமல் நூல்களைப் படிக்கவும் வாடகைக்கு எடுக்கவும் அனுமதித்திருக்காவிட்டால் எனக்குப் புத்தகம் படிக்கும் பழக்கமும் வந்திருக்காது, எழுதவும் வந்திருக்கமாட்டேன். என்னுடைய கல்வி, பணி, தனிப்பட்ட முன்னேற்றம் அனைத்திலும் அந்நூலகத்தின் பங்கு மிகப் பெரியது. தமிழ் நாடு முழுவதும் அரசு நூலகங்களில் மின்னூல் வழங்கலுக்குத் தமிழ் நாடு அரசாங்கம் சரியான, பாதுகாப்பான தளம் ஒன்றை அறிமுகப்படுத்துமானால் அதன்வழியாக என்னுடைய மின்னூல்கள் அனைத்தையும் இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன்.
என்.சொக்கன் முகநூல் பக்கத்திலிருந்து