தமிழ்நாடு மாநில விலங்கான நீலகிரி வரையாடுகளைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வரையாடு இனத்தைப் பாதுகாக்க நீலகிரி வலையாடு திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் நீலகிரி வரையாடு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதற்கு விலங்கு நல ஆர்வலர்கள் தமிழக அரசுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி வரையாடு மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இவை 4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலைமுகடுகளில் மட்டும் வாழக்கூடியது. அழிந்துவரும் விலங்கினங்களில் ஒன்றான வரையாடு தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. தமிழ்நாட்டில் சில நூறு வரையாடுகளே எஞ்சியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கவை. வரை என்றால் மலை. அங்கு வாழும் ஆடுகள் வரையாடுகள்.
நீலகிரி வரையாடு மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்று. வரையாடு திட்டத்தை பல்வேறு உத்திகள் வழியே செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 7ஆம் தேதியை வரையாடு தினம் என அனுசரித்தல், வரையாடு குறித்து பொது மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடக்க உள்ளன.
இதன் வழியாக வரையாடுகள் இனம் அழிவிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இந்தத் திட்டங்களை ஐந்தாண்டுகளில் செயல்படுத்த 25.14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹு கூறும்போது, “நீலகிரி வரையாடு அழிந்து வரும் இனம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய இயற்கை பாதுகாப்பு நிதியத்தின் அறிக்கைப்படி, வரையாடுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ளதாகக் கணக்கிடப்பட்டு உள்ளது. அந்நிய களைச்செடிகளின் ஆக்கிரமிப்பு, காட்டுத்தீ, சுற்றுச்சூழல் தரவு காரணமாக வரையாடு இனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
தற்போது தமிழகம் மற்றும் கேரளப் பகுதிகளில் சில சிதறிய வாழ்விடப் பகுதிகளில் மட்டுமே வாழ்ந்து வருகின்றன வரையாடுகள். நீலகிரி வரையாடு திட்டம் வழியாக இவற்றின் உண்மையாக வாழ்விடங்களில் இந்த இனங்கள் மீள் அறிமுகம் செய்யப்பட்டு அவை வாழ ஏதுவான சூழல் உருவாக்கப்படும். அவற்றின் எண்ணிக்கை பெருக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
வரையாட்டின் அமைப்பும் வாழ்முறையும்
பெண் மற்றும் பருவமடையாத ஆண் வரையாட்டின் உடலின் மேல்பகுதி மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலும், அடிப்பகுதி மங்கலான நிறத்திலும் காணப்படும். ஆண் வரையாடு வயது முதிர்ந்து வருகையில் அதன் ரோமங்கள் கறுப்பாகிக்கொண்டே வரும். நன்கு வளர்ந்து பருவமடைந்த ஆண் வரையாட்டின் புட்டத்திற்கும் முதுகிற்கும் இடைப்பட்ட பகுதி வெள்ளி நிறத்தில் காணப்படும். ஆண் பெண் இரண்டிற்கும் தாடி இல்லை. பெண் வரையாட்டிற்கு இரண்டு காம்புகள் உண்டு. அதுவே மற்ற காட்டாடு இனங்களுக்கு நான்கு காம்புகள் உண்டு. ஆண், பெண் இரண்டுக்கும் வளைந்த கொம்புகள் உண்டு. ஆண் வரையாட்டின் கொம்பு பெண் வரையாட்டின் கொம்பின் நீளத்தைவிட அதிகமாகும்.
வரையாட்டின் இனப்பெருக்க காலம் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான தென்மேற்குப் பருவமழைக் காலமாகும். வரையாடுகள் ஒன்று அல்லது அரிதாகவே இரண்டு குட்டி ஈன்றெடுக்கும். இதன் சராசரி ஆயுட்காலம் காடுகளில் சுமார் 9 ஆண்டுகள் இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
வரையாடுகள் கூரிய பார்வையுடையவை. எதிரிகளை மிகவும் தொலைவிலிருந்தே கண்டுபிடிக்கக் கூடியவை. தனக்கு வரும் அபாயத்தைக் குறிக்க சீ்ழ்க்கை ஒலியால் உரக்கக் கத்தி உணர்த்தும். வரையாடுகள் பெரும்பாலும் சிறுத்தை, செந்நாய், புலி போன்ற விலங்குகளுக்கு இரையாகிவிடுகின்றள. அதோடு அந்நிய களைச்செடிகளின் ஆக்கிரமிப்பு, காட்டுத்தீ, சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாகவும் வரையாடு இனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அழிந்துவரும் வரையாடு இனத்தைப் பாதுகாக்கவே நீலகிரி வலையாடு திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.