சென்னைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள், கட்சி மாநாட்டுக்கு வரும் பிற மாவட்டத்தினர், தமிழகச் சுற்றுலாவுக்கு வரும் பிற மாநில மக்கள் என எல்லாரும் தவறாமல் வருகை தரும் இடம் மெரினா கடற்கரை.
குறிப்பாக குழந்தைகள் நாள் முழுவதும் மெரினா கடற்கரையில் குளித்தாலும் ஆசை தீராமல் மீண்டும் மீண்டும் நீராடிக் களிக்கும் இடம் மெரினா கடற்கரை. சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும்போது கடற்கரையுடன் நடைபயிற்சி செய்வது எல்லாருக்கும் ஓர் இனிமையான அனுபவம்.
இப்படிப்பட்ட பெருமைவாய்ந்த சென்னையின் பாரம்பரிய அழகு பெற்ற இடம் மெரினா கடற்கரை தற்போது நுரை பொங்கி வந்து துர்நாற்றம் வீசுகிறது என்பது வேதனையான விஷயம்.
வங்காள விரிகுடாவில் சென்னையில் உள்ள மெரினா கடற்கரை இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை என்கிற பெருமை பெற்றது. வடக்கில் புனித ஜார்ஜ் கோட்டையின் தெற்கில் பெசன்ட் நகர் வரை சுமார் 12 கி.மீ. நீளம் கொண்டது சென்னை மெரினா கடற்கரை. 1880ஆம் ஆண்டில் ஆளுநர் மவுண்ட்ஸ்டார்ட் எல்பின்ஸ்டோன் கிராண்ட் டஃப்பால் புதுப்பிக்கப்பட்டது மெரினா.
தற்போது இரண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் மேலும் புதுப்பிக்கப்பட்டு நான்கு சுற்றுலா சமாதிகளுடன் அழகுற அமைந்துள்ளது மெரினா கடற்கரை. அதனால் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மெரினாவுக்கு வந்து கடற்கரையில் கால்களை நனைத்து அங்கிருக்கும் கடைகளில் உண்டுகளித்து இளைப்பாறிச் செல்வது வழக்கமான ஒன்று.
அந்த உலகப் பெருமைவாய்ந்த கடற்கரை நீரில் சாக்கடை கலந்து நுரை பொங்கி வருகிறது. துர்நாற்றமும் வீசுகிறது. அதையும் அறியாமல், பொருட்படுத்தாமல் மக்கள் கடற்கரை நீரில் முங்கிக் குளித்துக் களிக்கிறார்கள் என்பது வேதனையானது.
ஏற்கெனவே ஈமக்காரியம் செய்யும் பொருட்களைக் கரைக்கும் இடமாக மெரினா உள்ளது. அதன் கழிவுகள் அங்கங்கே நிரம்பி வழிகின்றன. அதோடு சாக்கடைக் கழிவும் கலந்து கடற்கரை மணலே கருமையாகக் காட்சி தருகிறது.
இதற்கு உடனே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து சரிப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.
அங்கு சுண்டல் விற்கும் ஒருவரிடம் பேசினேன். அவர் “ஆமா சார் கடலில் சாக்கடை கலந்துவிட்டது” என்று தெரிவித்தார்.
முன்பெல்லாம் அலை நீரில் நுரை பொங்கினாலும் கடலுக்குள் நீர் செல்லும்முன் கரைந்துவிடும். ஆனால் தற்போது நுரை, அலைகள் அடிக்க அடிக்க, சோப்பு நுரை போலப் பொங்கிவருகிறது. முகர்ந்து பார்த்தால் துர்நாற்றம் அடிக்கிறது. மெரினாவைப் பார்க்கவே வேதனையாக இருந்தது.
உலகப் புகழ்பெற்ற மெரினா கடற்கரைக்கு ஏற்பட்ட இந்த நிலையைக் கண்டு சிலர் கால்களை நனைக்காமல் கரையிலேயே தயக்கமாக நின்றுவிட்டுத் திரும்பியதைப் பார்க்கச் சங்கடமாக இருக்கிறது.
தமிழக அரசு உடனே தலையிடுவேண்டும் என்று வேதனையோடு சொல்கிறார்கள் பொதுநலன் விரும்பிகள்.