“தமிழக அரசே! மதுரை தமுக்கம் கலையரங்கத்தின் பெயரான சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை மீண்டும் சூட்டுக” என்று தற்போது தமிழகமெங்கும் குரல் எழுந்துள்ளது. அது தமிழக அரசின் காதுகளுக்குக் கேட்க உரக்கக் குரல் கொடுக்கவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
மதுரையில் பிரசித்திப்பெற்ற தமுக்கம் மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிய அரங்கத்தைக் கட்டுவதற்காக ஏற்கனவே இருந்த பழைய கலையரங்கம் இடிக்கப்பட்டு புதிதாக அரங்கம் கட்டப்பட்டுள்ளது. அதற்கு ‘மதுரை மாநாட்டு மையம்’ என்று தமிழிலும் ‘ஆடிட்டோரியம்’ என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது. இது நாடகத் தமிழுக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த தவத்திரு சங்கரதாஸ் புகழை மறைக்கின்ற முயற்சியாகும். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சங்கரதாஸ் சுவாமிகள் பெயரைச் சூட்டவேண்டும் எனப் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
மதுரை நகரில் வைகை நதியின் வடகரையில் தல்லாகுளத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது தமுக்கம் மைதானம். வருடா வருடம் தமிழ்நாடு அரசு சித்திரைத் திருவிழா காலகட்டத்தில் சித்திரை பொருட்காட்சி என்ற பெயரில் கண்காட்சி ஒன்றை இந்த மைதானத்தில்தான் நடத்துவது வழக்கம். அதேபோல, வருடாந்திர புத்தகக் கண்காட்சியும் இங்கேதான் நடந்துவந்தது.
1981ல் மதுரையில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டபோது, தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மிகப் பிரம்மாண்டமான பொருட்காட்சி, மாநிலம் முழுவதும் பேசப்பட்டது. 1982ல் அரசு சார்பில் பாரதியார் நூற்றாண்டு விழாவும் இங்குதான் நடத்தப்பட்டது.
இந்த நிலையில்தான், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமுக்கம் மைதானம் இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டப்பட்டது. அதற்கு ‘மதுரை மாநாட்டு மையம்’ என்று தமிழிலும் ‘ஆடிட்டோரியம்’ என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு சங்கரதாஸ் சுவாமிகள் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
19ஆம் நூற்றாண்டு காலத்தில் தமிழ் நாடகக் கலைக்குப் புத்துயிர் தந்தவர் தமிழ் நாடக உலகத் தந்தை என்று அழைக்கப்படும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். தற்போது தமிழ்நாட்டில் எந்த நாடக மேடையானாலும் சங்கர தாஸ் பெயரைப் போற்றியே நாடகம் தொடங்கப்படும்.
அவருக்குச் சங்கம் வளர்த்த மதுரையில் தமுக்கம் திடல் அருகே சிலை நிறுவியவர் ஒளவை தி.க. சண்முகம். தமுக்கம் திடலில் உள்ள கலையரங்கத்திற்கும் அவர் பெயரே சூட்டப்பட்டது.
தற்போது பழைய கலையரங்கம் இடிக்கப்பட்டு புதிதாக அரங்கம் கட்டப்பட்டுள்ளது. சங்கரதாஸ் சுவாமிகள் பெயரைச் சூட்டாதது வருந்ததக்கது. இது நாடகத் தமிழுக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த தவத்திரு. சங்கரதாஸ் புகழை மறைக்கின்ற முயற்சியாகும். இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு சங்கரதாஸ் சுவாமிகள் பெயரைச் சூட்டவேண்டும் எனப் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
சங்கரதாஸ் சுவாமிகளின் அரும்பணிகள்
சங்கரதாஸ் சுவாமிகள், தூத்துக்குடிக்கு அருகிலுள்ள காட்டுநாய்க்கன்பட்டி என்னும் சிற்றூரில் இராமாயணப் புலவர் என அழைக்கப்பட்ட தாமோதரக் கணக்கப் பிள்ளை, பேச்சியம்மாள் இணையருக்கு மகனாக 1867 செப்டம்பர்
7-ஆம் நாள் பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சங்கரன் எனப் பெயரிட்டனர்.
தொடக்கக் கல்வி தன் தந்தை தாமோதரனாரிடம் பெற்ற சங்கரதாஸ், பின்னர் பழனியில் வாழ்ந்த தண்டபாணி சுவாமிகளிடம் கல்வி கற்றார். சங்க இலக்கியங்கள், நீதி நூல்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியன போன்றவற்றைக் கற்றார். இதனால் வெண்பா, கலித்துறை, இசைப் பாடல்களான வண்ணம். சந்தம் ஆகியவற்றைப் பாடும் திறனைப் பெற்றார்.
சங்கரதாசர் தூத்துக்குடி உப்புப் பண்டகசாலையில் சிறிதுகாலம் கணக்கராகப் பணியாற்றினார். 1891-ஆம் ஆண்டில் தனது 24-ஆவது அகவையில் அப்பணியைத் துறந்து நாடகத்துறையில் ஈடுபட்டார்
சாமி நாயுடு குழுவில் பணியாற்றும்பொழுது வாழ்க்கையில் வெறுப்புற்ற சங்கரதாசர் தன் வழிபடு கடவுளாகிய முருகனின் அருள்வேண்டி தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். இடுப்பு வேட்டி உடையுடுத்தி பாதயத்திரையில் ஈடுபட்ட சங்கரதாஸை பலரும் சுவாமிகள் என அழைக்கத் தொடங்கினர். இதனால் அவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் ஆனார்.
ராமுடு ஐயர், கல்யாண ராமையர் ஆகிய இருவரும் இணைந்து நடத்திய நாடகசபையில் சேர்ந்து நாடங்களில் நடிக்கத் தொடங்கினார். சனீஸ்வரன், எமன், இராவணன், இரணியன் ஆகியன போன்ற எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் ஆசிரியராகவும் சிறிது காலம் பணியாற்றினார்
பின்னர் சாமி நாயுடு என்பவரின் நாடக சபையில் சங்கரதாஸ் சில காலம் ஆசிரியராக இருந்தார். அப்பொழுது நாடகத்தின் சூத்திரதாரராகவும் நடித்தார்.
சங்கரதாஸ் சாவித்திரி நாடகத்தில் எமனாக நடித்தபொழுது அந்நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவருக்கு கர்ப்பம் கலைந்தது, நளதமயந்தி நாடகத்தில் சனீஸ்வரன் வேடமிட்டு சங்கரதாஸ் அதிகாலையில் அவ்வேடத்தைக் கலைக்கச் சென்றபொழுது அவரைக் கண்ட பெண்ணொருவர் மாரடைப்பால் மரணமடைந்தது எனத் தொடர் துயரங்கள் விளைந்ததால், அவர் நாடகத்தில் நடிப்பதைக் கைவிட்டார். நாடகம் எழுதுகிற, கற்றுத் தருகிற ஆசிரியப் பணியை மட்டும் தொடர்ந்தார்.
மான்பூண்டியா பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்கி சங்கரதாஸ் மீண்டும் நாடகப்பணியில் ஈடுபட்டார். ‘வள்ளி வைத்தியநாதய்யரின் நாடக சபை, அல்லி பரமேசுவர ஐயரின் நாடக சபை ஆகியவற்றில் சிலகாலமும்
பி.எஸ்.வேலு நாயரின் ஷண்முகானந்த சபையில் நெடுங்காலமும் சங்கர தாஸ் சுவாமிகள் ஆசிரியராகப் பணிபுரிந்தார். சங்கரதாஸ் சுவாமிகள் சுமார் 40 நாடகங்களை எழுதினார். அவற்றுள் தற்பொழுது 18 நாடகங்களே கிடைத்திருக்கின்றன.