உங்களை அறியாமல் ஏமாற்றுப் பேர்வழிகளின் ஏமாற்று வார்த்தைகளை நம்பி ஆன்லைனின் ஓ.டி.பி. கொடுப்பதன் மூலம் வங்கிக் கணக்கில் பணம் பறிபோனால் 24 மணி நேரத்திற்குள் 155260 என்ற எண்ணை அழையுங்கள். பணத்தை எளிதில் திரும்பப்பெறலாம் என்கிறார் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்.
சென்னையில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி பொதுமக்களிடம் இருந்து ஓ.டி.பி. எண்ணைப் பெற்று அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் மோசடி செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற மோசடியின் போது உடனடியாக எப்படி புகார் செய்வது என்று தெரியாமல் பொது மக்கள் தவிக்கிறார்கள். எனவே வங்கிப் பணம் மோசடி தொடர்பாக புகார் செய்வதற்குவசதியாக உதவி எண் ஒன்றை சைபர் கிரைம் போலீசார் கொடுத்துள்ளனர். பணம் மோசடி செய்யப்படும் நபர்கள் 155260 என்ற எண்ணை உதவிக்கு அழைக்கலாம். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் வெளியிட்ட ஆடியோவில் அவர் கூறி இருப்பதாவது
“உங்களின் வங்கிக் கணக்கில் பணம் பறிபோனால் 155260 என்ற எண்ணுக்கு உடனடியாக புகார் செய்யலாம். ஏ.டி.எம்.களில் தவிர ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்கில் இருந்து பணம் பறிபோனால் புகார் செய்யலாம். இதில் எவ்வளவு சீக்கிரம் புகார் செய்கிறீர்களோ அவ்வளவு விரைவில் உங்கள் பணம் மோசடி பேர்வழிகளின் வங்கிக் கணக்குக்குச் செல்லாது தடுத்து நிறுத்தப்படும்.
ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு ஆன்லைன் மூலம் பணம் பரிமாற்றம் செய்ய சுமார் அரைமணி நேரம் ஆகும். அதற்குள் புகார் செய்தால் உடனடியாக மோசடியைத் தவிர்க்கலாம். ஆனாலும் 24 மணி நேரத்துக்குள் புகார் செய்தால் உங்கள் வங்கிப் பணத்தைத் திரும்பப் பெற முடியும்.
உடனடியாகத் தகவல் தெரிவிக்கும்பட்சத்தில் அவர்கள் வங்கிக்குத் தெரி வித்து பணத்தை நிறுத்தி வைப்பார்கள். பின்னர் போலீசில் எப்.ஐ.ஆர். பதிவு செய்து பணத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி யாராவது உங்களின் ஓ.டி.பி. எண்ணைக் கேட்டால் அதைக் கொடுக்கக்கூடாது” என்று சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் பேசியிருந்தார்.