சென்னையில் பிரபல நடிகை ஒருவருக்குத் திருமணம் ஆகி நான்கு மாதங்களில் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததும், அவை வாடகைத்தாய் மூலம் பிறந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது’ என்று தொடங்கி, ‘தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரகத்துறை நலப்பணிகள் துறை’, ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
அதில், ‘குறிப்பிட்ட நடிகை சட்ட விதிகள் அனைத்தையும் மதித்தே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றிருக்கிறார். குறிப்பாக 2016ம் ஆண்டே திருமணம் செய்து அதற்கான பதிவை அளித்துள்ளார்’ என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அதே நேரம், ‘வாடகைத்தாய் பெறக் காரணமாக இருந்த மருத்துவமனை சில விதிகளைப் பின்பற்றவில்லை. ஆகவே அதைத் தற்காலிகமாக ஏன் மூடக்கூடாது?’ எனக் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது’ என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற, அந்தப் பிரபல நடிகை யார், எந்த மருத்துவமனை என்பதை, ‘தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரகத்துறை நலப்பணிகள் துறை’ குறிப்பிடவில்லை.
விசாரணைக் குழு குறிப்பிடவில்லை என்றாலும் விவகாரம் அனைவருக்கும் தெரிந்ததே.
சினிமா இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா தம்பதி கடந்த 9ஆம் தேதி அன்று தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதாக இருவரும் அறிவித்ததால் பலரும் அதிர்ந்து போயினர். நான்கே மாதத்தில் எப்படி குழந்தைகள் பிறந்தன என ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர். இந்த நிலையில் அவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக தகவல் பரவியது. தீபாவளிக்குக்கூட இரண்டு குழந்தைகளையும் கைகளில் வைத்துக்கொண்டு தீபாவளி வாழ்த்தை தங்கள் இன்ஸ்டாகிராமில் தெரிவித்தனர்.
ஏற்கெனவே வாடகை தாய் முறையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி விதிமீறலில் ஈடுபட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி கடந்த 13-ம் தேதி உயர்மட்ட விசாரணை குழு அமைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று சுகாதாரத் துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்
“சென்னையில் உள்ள மருத்துவமனையில் செயற்கைக் கருத்தரிப்புத் தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் மூலமாகவும் நயன்தாரா குழந்தை பெற்றுக்கொண்டதாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன செயற்கை கருத்தரிப்பு மற்றும் வாடகைத்தாய் முறைக்கான வழிகாட்டு தொழில்நுட்பம் நெறிமுறைகளின்படி வாடகை தாய் முறையில் பிரசவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வாடகைத்தாய்க்கு உரிய தகுதியான வயதிலும் அவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உயிருடன் உள்ளதாகவும் நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்குப் பதிவுத் திருமணம் 2016 மார்ச் 11இல் நடைபெற்றதாகப் பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அந்தத் திருமண பதிவுச் சான்றிதழின் உண்மைத்தன்மை பதிவு துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன் காரணமாகத் தனியார் மருத்துவமனையில் தம்பதிக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை விசாரித்தபோது 2020-ல் அவர்களது குடும்ப மருத்துவரால் வழங்கப்பட்ட பரிந்துரைக் கடிதத்தின் அடிப்படையில் சிகிச்சை அளித்ததாகக் குறிப்பிட்டார். அக்குடும்ப மருத்துவரின் முகவரியில் விசாரணை செய்தபோது அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அத்தொலைபேசி எண்கள் உபயோகத்தில் இல்லை என்றும், மேலும் விசாரணையில் அம்மருத்துவர் வெளிநாடு சென்றுவிட்டதாகத் தெரிய வருவதால் அக்குடும்ப மருத்துவரிடம் குழு விசாரணை மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சினை முட்டை சிகிச்சை சம்பந்தமான நோயாளியின் சிகிச்சைப் பதிவேடுகள் பராமரிக்கப்படவில்லை. கடந்த ஆகஸ்ட் 2020 சினைமுட்டை மற்றும் விந்தணு பெறப்பட்டு கருமுட்டைகள் உருவாக்கப்பட்டு உறைநிலையில் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டு, நவம்பர் 2021 மாதத்தில் வாடகைத்தாய் ஒப்பந்தம் போடப்பட்டது.
மார்ச் 2022-ல் கருமுட்டைகள் வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு இக்குழந்தைகள் அக்டோபர் மாதம் பிரசவிக்கப்பட்டுள்ளாதாகத் தெரிய வருகிறது.
செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் வாடகை தாய் உறவினராக இருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இச்சட்டத்திற்கு முந்தைய ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதலின்படி உறவினர் அல்லாதோரும் வாடகைத்தாயாகச் செயல்படவும் அவசிய செலவிற்கு மட்டும் பணம் வழங்கும் வழிமுறையும் இருந்தது.
விசாரணையில் வாடகைத்தாய் பேறு காலத்தின்போது சென்னையில் தனியார் மருத்துவமனையில் பேறுகாலப் பராமரிப்பு சிகிச்சை பெற்று வந்துள்ளார். கருக்கள் வளர்ந்த நிலையில் இரட்டைக் குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது. அக்குழந்தைகள் கடந்த 9ஆம் தேதி அன்று நயன்தாரா -விக்னேஷ் சிவன் தம்பதியிடம் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத்தாய் முறையில் குழந்தைகளைப் பெற்றதில் விதி மீறல் இல்லை என அரசு அறிவித்துள்ளதால் பல்வேற கேள்விக் கணைகளில் இருந்து நயன்தாரா தப்பியுள்ளார்.
மாட்டிக்கொண்ட மருத்துவமனை
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தில் விதிமுறைகள் பின்பற்றப்படாமல் வாடகைத்தாய் சிகிச்சை முறை செயல்படுத்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
செயற்கைக் கருத்தரித்தல் சட்டப்பிரிவின் கீழ் மருத்துவமனை நிர்வாகம் நேரடியாகப் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாது. மேலும் வாடகைத்தாயாக செயல்படுவோரிடம் அவரவர் தாய்மொழியில் ஒப்புதல் படிவம் பெறாமல் விதிமீறல் நடந்துள்ளது.
வாடகைத்தாய்களுக்குக் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதுபோன்ற விதி மீறல்களுக்காக அந்தத் தனியார் கருத்தரிப்பு மருத்துவமனைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
யார் புண்ணியத்திலேயோ நயன் தப்பித்தார். எல்லாம் குழந்தைகள் பிறந்த நேரம்தான்.