சமீபத்தில் தமிழ் சிறார் இலக்கியத்தில் நிறைய புதிய கருப்பொருளைப் பேசும் நூல்கள் வருவது பெருமகிழ்ச்சியைத் தருகிறது. அதிலும் மிகவும் முக்கியமாக சமூகப் பிரச்சனைகளை பிரச்சாரத் தொனியோடல்லாமல் குழந்தைகளின் மொழியில் குழந்தைகளின் உலகத்தை முன்வைத்தே ஆங்காங்கே சில நூல்கள் எழுதப்படுவது அதிக உற்சாகத்தைத் தருகிறது.
அப்படியான நூல்களில் மிகப்பெரிய பாய்ச்சலாக நான் உணர்ந்த நூல்களில் மிக மிக முக்கியமான நூலென்றால் அது நீலப்பூ.
எந்தவொரு சமூகப் பிரச்சனையை எடுத்துக்கொண்டாலும், அந்தப் பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்களும் இருப்பார்கள். பாதிப்பை ஏற்படுத்துபவர்களும் இருப்பார்கள். ஆக ஒரு சமூகப் பிரச்சனையை எடுத்துக்கொண்டு நூல் எழுதுவதென்றால், பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனையைப் பேசி, அவர்களைக் கிளர்ந்தெழ வைக்கிற நூலாக எழுதலாம். அதுதான் பொதுவாக எழுதப்படும் நூல் வகை. அதில் தவறில்லை. ஆனால் அதேவேளையில், பாதிப்பை ஏற்படுத்தும் ஒடுக்குபவர்களுக்கு அருகே சென்று அவர்களிடத்தில் பாதிக்கப்படும் மக்களின் வலியைப் பேசுவதும் அவசியம். அது இரண்டாம் வகை. அப்படியான நூலை எழுதுவது மிகவும் கடினம் என்பதைவிடவும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதற்கும் அதிக வாய்ப்பிருக்கிறது. “எங்களைப் பாத்தா ஒடுக்குறவன்னு சொன்ன?” என்று அவர்கள் துள்ளிக் குதித்து வந்து பஞ்சாயத்து செய்யவும் வாய்ப்பிருக்கிறது. ஜெய்பீம் படத்திற்கு வந்த பிரச்சனைகளை எல்லாம் பார்த்தோம்தானே.
இந்த இரண்டாவது வகையிலான ஒரு கதையைத்தான் நீலப்பூ நூலில் எழுதியிருக்கிறார் தோழர் விஷ்ணுபுரம் சரவணன்.
ஒரு ஊரில் சாதிய வன்முறை நடந்த சூழலில், அதனால் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட ஊரின் குழந்தை, தனது ஊரை அடித்து நொறுக்கிய ஊரில் தன்னுடன் படிக்கும் மாணவனைச் சந்திக்கச் செல்லும் பயணமும் அதன்மூலம் ஒடுக்குபவர்கள் யாரென்றும் அவர்களுடைய நிலைமையென்ன என்றும் அவள் அறிந்துகொள்வதாக நமக்குக் கடத்துகிறது ‘நீலப்பூ’.
சாதியின் இரண்டு பக்கத்தையும் ஒரு நூலில், அதுவும் வளரிளம் பருவத்தினருக்குச் சொல்வதெல்லாம் அவ்வளவு எளிதானதல்ல. அதனை மிகச் சரியாகச் செய்திருக்கிறார்.
இன்றைக்குச் சிறார்களுக்கு எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களும் கதை சொல்லிகளும் இந்நூலை வாசிக்காமல் இருந்துவிடாதீர்கள். இந்நூல் குறித்து ஒரு விரிவான ஆய்வினைக்கூட நிகழ்காலத்து எழுத்தாளர்கள் ஒன்றுகூடி செய்யலாம்.
வளரிளம் பருவத்து 2K கிட்சும் அவர்களது பெற்றோரும் உற்றோரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
தொடர்ந்து கயிறு, நீலப்பூவென மிக முக்கியமான நூல்களை வெவ்வேறு கதை சொல்லல் முறைகளைக் கையிலெடுத்து நமக்குத் தந்துகொண்டிருக்கும் தோழர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றிகள்…
சரி, அதென்ன நீலப்பூ என்று கேட்கிறீர்களா? நூலைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
Chinthan Ep முகநூல் பக்கத்திலிருந்து