காதல்தான் எல்லாவற்றுக்கும் மையப்புள்ளி. காதலின் இந்தப் பக்கம் குதித்து அந்தப் பக்கம் கரையேறுகிறவர்களைவிட, அதிலேயே மூழ்கிக் கிடப்பவர்களைத்தான், காதலும் தன் எல்லையற்ற பெருவெளியில் கொண்டாடுகிறது.
கால் நனைப்பதற்காகக் காதலின் கரையில் ஒதுங்கியவர்கள், சிப்பி பொறுக்குகிறார்கள், மணல்வீடு கட்டுகிறார்கள், இடுப்பளவு வரை நனைந்து இதயம் முழுக்க ஈரத்தோடு திரும்புகிறார்கள். ஆழம் தெரியாமல் காலை விட்டவர்களைக் காதலே கரையொதுக்கி விடுகிறது. வெட்டிக்கதை பேச வருகிறவர்களை லத்தியைக் கொண்டு விரட்டுகிறது.
ஆழ்கடல் என்று அதீத ஜாக்கிரதையுடன் வருபவர்களுக்கு, வெறும் சகதி நிரம்பிய புதுக்குளம் என்று சுய அறிமுகம் செய்து கொள்கிறது. அமைதியான குளம் என்று கல்லெறிபவர்களுக்கு, வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாத வட்டங்களை வரைந்து தள்ளுகிறது.
காதல் போதையெல்லாம் இல்லை. அது வெறும் தண்ணீர். அதை நீங்கள் எதனோடு, எப்படி, எந்தப் பொழுதில் கலக்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து, அதன் சுவையும் நிறமும் மணமும் மாறுபடுகிறது.
“அவளுக்கும் நிலாவுக்கும் 6 வித்தியாசங்கள்”, முடிந்தால் கண்டுபிடியுங்கள் எனக் கையளித்த நண்பன் ஏகாதசியின் கண்ணாடியை யார் கையிலெடுத்தாலும், காதலின் பொருட்டு அவர்களின் முகம் மாறிக்கொண்டே இருக்கும்படிச் செய்து, தானொரு சிலிக்கான் ‘செல்’ என்பதை மறுபடியும் மெய்ப்பித்திருக்கிறார்.
யாரோவொரு பெண் எல்லாக் கவிஞன் முன்னும் அமர்ந்துகொண்டு, தன்னைக் காதலிக்கும்படிக் கண்ணடிக்கிறாள், கழுத்தைச் சுற்றி வளைக்கிறாள், மடியில் உட்கார்ந்துகொண்டு நெற்றியில் முட்டி, கண்ணில், மூக்கில், கழுத்தில், உதட்டில் என முத்தம் பதிக்கிறாள். அதற்குமேல் செயலிழக்கும் கவிஞன்,
“உன் இஷ்டம் போல்
என்னுள் தழைத்துக் கொள்ள
நீ உரிமை எடுத்துக்கொண்டாய் போலும்
என் நாக்கை விஞ்சி
வளர்ந்துவிட்டது உன் பெயர்.” -என்கிறான்.
‘நாக்கை விஞ்சி’ என்றால் என்னவென்று வெகுநேரம் யோசித்தபின் தான் புரிந்தது, அவள் பெயரைத் தவிர வேறெதையும் உச்சரிக்கவிடாதபடி, அவள் முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறாள் என்று. இதே கவிதையை ஒரு பெண் வாசிக்கும்போது, அங்கே அவன் முழுமையாக ஆக்கிரமித்து விடும்படி செய்ததுதான் கவிஞனின் உத்தி.
‘என் ஆயுள் முழுதும் என் கூடவே வா…’ என்று தன் காதலுக்கு அழைப்பு விடுப்பதில் கூட, எவ்வளவு கெட்டிக்காரத்தனம்?
“குழப்பமே வேண்டாம்
உன் உள்ளங்கையின்
ஆயுள்ரேகை வழியாகவே வா
நடக்கிற தூரம்தான்
என் வீடு.”
பொறாமையாக இருக்கிறது நண்பா, அடுத்த பிறவியில் உன் காதலியாகப் பிறப்பதற்கான முன்பதிவைச் செய்யும் கடைசி ஆளாகவாவது நான் இருப்பேனா?
காதலால் அதிகாரம் செய்வதற்கும், காதலைக் கொண்டு அதி‘காரம்’ செய்வதற்கும் நூலளவுதான் இடைவெளி என்பதைத் தன் ஒவ்வொரு கவிதையிலும் கோடிட்டுக் கொண்டே இருக்கிறாய் நீ. உதட்டு வரிகளைக் கொண்டு ஓராயிரம் கவிதைகளைப் புனைந்தவர்களை ஓரங்கட்டி, இன்னொரு புது அதிகாரமே படைத்திருக்கிறாய். அதெப்படி?
“காமத்துப்பாலில் உன்
உதடெனும் குறள் இடம்பெற்ற
134வது அதிகாரத்தின்
பெயர் நான்.”
இனி திருக்குறளைப் படிக்கும்போதெல்லாம் அந்த 134வது அதிகாரத்தையும் தேடும்படிச் செய்த திருட்டு ராஸ்கல் நீ.
காதல் கவிதைகளின் மிகப் பெரும் அழகே முரண்தான். அதில் புகுந்து விளையாடி இருக்கிறாய் தோழா.
“உன் பாதங்கள் அலையைத் தொடுவது
நீ கடலுக்கு
இனிப்பெடுத்துக் கொடுப்பது
அலை உன் பாதங்களைத் தொடுவது
கடல் உன்னிடம்
இனிப்பெடுத்துக் கொள்வது.”
“நிர்வாணமாக இருக்கிறது நீர்
நீ குளிப்பதாயிருந்தால்
கண்ணை மூடிக்கொள்.”
“உன் கண்ணாடியை
அந்தப் புத்தகத்திற்குப்
போட்டுவிடு
உன் கண்களைப் படிக்கட்டும்.”
உன் கவிதைகளில் வரும் ‘நீ’, ‘நான்’கள் எந்த இடத்திலும் ஆண்பால், பெண்பால் பேதம் காட்டவில்லை என்பதுதான் அவற்றின் மிகப்பெரும் பலமே.
“புல்லும் முள்ளும் மண்டிக் கிடக்கும் என் காதல் தோட்டத்தைக் கொஞ்சம் சீர்செய்ய வேண்டும், தயவுசெய்து என்னை அங்கே கொஞ்சம் இறக்கிவிட முடியுமா?” என்றே உன் தொகுப்பைப் படித்து முடிக்கிற, நடுவழியில் இறக்கிவிடப்பட்ட எந்தவொரு காதலும் எவரிடமாவது தன் இடது கைக் கட்டைவிரலைக் காட்டி ‘லிப்ட்’ கேட்கக் கூடும்.
ஆனாலும் நண்பா,
“ஒரு வியாபாரி
அவள் கண்களை
விற்றுக் கொண்டிருந்தான்
கேட்டால் பொய் சொல்கிறான்
அவற்றை மீன்கள் என்று.”
“நீ நகம் கடித்துத் துப்புகிறாய்
அங்கே அழுது கொண்டிருக்கிறது
பிறை நிலவு.”
“நானெப்படிக் கிழித்துப் படிக்க
உதடு தடவி
நீ ஒட்டிய கடிதம்.”
போன்ற ஹைதர் காலத்துப் பழைய காதலையும் இன்னுமா நீ உனக்குள் ஒளித்து வைத்திருக்கிறாய்?
– மா. காளிதாஸ்
நூலின் விவரக் குறிப்பு
நூல் : அவளுக்கும் நிலாவுக்கும் 6 வித்தியாசங்கள்
ஆசிரியர் : ஏகாதசி
வெளியீடு : சமம் வெளியீடு
அட்டை வடிவமைப்பு : லார்க் பாஸ்கரன்
பக்கங்கள் : 100
விலை: ரூ.100
நூல் தேவைப்படுவோர் 7299901838 என்ற எண்ணுக்கு 100 ரூபாய் மட்டும் Gpay (or) Phone pe செய்துவிட்டு இதே எண்ணிற்கு உங்கள் முகவரியை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.