அரங்குக்குள் அடைப்பட்டிருந்த தமிழ் சினிமாவை பொதுவெளிக்குக் கொண்டு வந்து பொதுமக்களையும் பங்கேற்பாளர்களாக ஆக்கிய பெருமை இயக்குநர் இமயம் பாரதிராஜாவையே சாரும். அவர் ஒரு ட்ரென்ட்செட்டர். அவர் இயக்கி முதல் படம் ’16 வயதினிலே’ இந்தத் திரைப்படம் திரைக்கு வந்து 45 ஆண்டுகள் ஆகிறது.
45 ஆண்டுகள் ஆனாலும் அந்தக் கிராமத்தின் மணத்தையும் அங்கு வாழ்ந்த மக்களையும் அவரின் கற்பனையைத் தாண்டி இன்றும் வாழ்ந்துகொண் டிருப்பதாகவே அவரது ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு ஒரு காவிய படைப்பை தந்தவர்தான் பாரதிராஜா.
அந்தக் காலங்களில் பொதுமக்கள் கூடும் தெருக்கள், டீக்கடைகள் போன்ற இடங்களைக்கூட செட்போட்டு தான் படப்பிடிப்பு நடத்தப்பட்ட காலம் அது. வெளிப்புறப் படப்பிடிப்பு என்பதே அந்தக் காலத்தில் ஓரிரு காட்சிகளில் இருந்தால் அதிசயம்.
பிரம்மாண்டமான காட்சியாக இருந்தாலும் பெட்டிக்கடை காட்சியாக இருந்தாலும் எல்லா காட்சிகளுக்குமே ஸ்டூடியோக்குள் செட் போட்டு கேமராவுக்குத் திரை போட்டிருந்த காலத்தில் சினிமா துறையின் மொத்த யூனிட்டையுமே குக்கிராமத்துக்கு அழைத்துச்சென்று படப்பிடிப்பு நடத்தி வெற்றி பெற்றவர் பாரதிராஜா.
ஏ.சி. கார், ஸ்டூடியோ அரங்கு, பாதுகாப்பான தனி இடம் என ஒதுக்கியிருந்த திரை நட்சத்திரங்களை மக்களோடு மக்களாக நடக்கவிட்டு, நடிக்கவிட்டு ஒரு குடைக்குள் அடக்கப்பட்டிருந்த தமிழ் சினிமாவை வெட்டவெளிக்கு கட்டாந்தரையில் நிற்கவைத்த பெருமை பாரதிராஜாவையே சாரும்.
16 வயதினிலே படத்தில் நடத்த நடிகை, நடிகர்கள் எல்லாருமே பாத்திரத்தை உணர்ந்து நடித்தனார் அதனால் ஒட்டுமொத்த நட்சத்திரப் பட்டாளமும் புகழின் உச்சிக்குப் போனார்கள்.
பரட்டையாக நடித்த ரஜினி, சப்பானியாக நடித்த கமல்ஹாசன், மயிலுவாக நடித்த ஸ்ரீதேவி, பரட்டையின் கையாள் கவுண்டமணி, மயிலு அம்மாவாக நடித்த காந்திமதி என அனைவரது வாழ்க்கையும் 16 வயதினிலே படத்திற்குப் பிறகு அவர்கள் சினிமா மார்க்கெட் பிய்த்துக்கொண்டு போனதில் ஆச்சரியமில்லை.
45 ஆண்டுகள் தன் படைப்பின் வலிமை குறையாமல் எப்போது பார்த்தாலும் ஒரு கிராமத்தின் தோற்றமும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையும் கள்ளமும் கபடும் நிறைந்த சில கதாபாத்திரங்களின் குணமும் கண்முன்னே நிழலாடும்.
திருவிழாவில் காந்திமதியின் இளமை மனசு, ரஜினியின் வாலிப வயசு, சப்பானியாக கமல்ஹாசனின் வெற்றிலை போட்டு குழறிய பேச்சு, டாக்டரின் படித்த மிடுக்கு எல்லாம் செதுக்கப்பட்ட சிற்பங்கள் அல்ல, நடமாடும் மாணிக்கங்கள்.
அப்படிப்பட்ட 16 வயதினிலே திரைப்படம் 45 ஆண்டுகள் அல்ல 100 ஆண்டுகளைக் கடந்தும் புத்தம் புதிதாகவே இருக்கும். அதன் மூலம் அந்தக் கதாபாத்திரங்கள் காலத்தால் அழியாது. அதைப் படைத்த பாரதிராஜா ஒரு காலதேவனாக தமிழ் சினிமா உள்ளவரை, தமிழ் சினிமாவின் காவலனாகவே இருப்பார்.
வாழ்க அவர் புகழ்.