‘வணங்கான்’ படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளதாக ஒரு கடிதம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார் இயக்குநர் பாலா. இது தொடர்பான அறிவிப்பு சூர்யா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
‘வணங்கான்’ கதை தேர்வாகி நடிகர் சிவகுமார் முன்னிலையில் பேச்சுவார்த்தைகள் நடந்து இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் அறிவிப்பு வெளியானது. இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘2டி என்டர்டைன்மெண்ட்’ சார்பில் சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க இருந்தார்.
இப்படத்தின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க அறிவிக்கப்பட்டார். இப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருந்தார். அதற்குள் லிங்குசாமி இயக்கத்தில் வாரியர் படத்தில் அறிமுகமானார். ஆனால் திடீரென படத்தின் ஷூட்டிங் வரை சென்ற வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகிக்கொண்டார் என பாலா தெரிவித்திருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இயக்குநர் பாலா பலமுறை சர்ச்சைகளுக்கு ஆட்பட்டவர். அஜித்தை மிரட்டியதாக ஒரு பிரச்சினை ஏற்பட்டு அது முடிவுக்கு வந்தது. பிறகு விக்ரம் மகன் கதாநாயகனாக நடித்த தெலுங்குப் படத்தின் ரீமேக்கை சரியாகச் செய்யவில்லை என்று முழு படத்தையும் எடுத்த நிலையில் நிறுவனம் அந்தப் படத்தையே வெளியிடாமல் முடங்கியது. அது இந்திய சினிமாவிலேயே பெரிய அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.
தற்போது கதை விவாதித்து நடிகர்கள் தேர்வாகி ஷூட்டிங் வரை போன பிறகு தற்போது நாயகன் சூர்யா விலகிக்கொண்டார் என இயக்குநர் பாலா அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சினிமா கலைஞர்கள் மத்தியிலும் பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் பாலா கடிதத்தில் என்ன குறிப்பிட்டிருந்தார் என்று பார்ப்போம்.
வணக்கம். என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.
என் மீதும், இந்த கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.
எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.
நந்தாவில் நான் பார்த்த சூர்யா பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் மற்றபடி வணங்கான் பணிகள் தொடரும்” என்று கூறியுள்ளார்.
வணங்கான் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வணங்கான படப்பணிகள் தொடரும் என பாலா கூறியிருப்பதால் அவருக்கு பதிலாக வேறொரு நடிகர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.