பெண் குழந்தை மீதான பாலியல் வன்முறையே கதையின் மையம். இதே விஷயத்தைப் பல படங்கள் பேசியுள்ளன. ஆனால், இப்படம் போலியான பூச்சுகளற்று இருப்பதே பெரும் பலம்.
டீக்கடையில் வேலை செய்யும் நாயகன். அவரின் குழந்தை. இவர்களே உலகமென உள்ள நாயகி. இந்த எளிய குடும்பத்தினைச் சுற்றியிருப்பதும் பகட்டில்லா எளிய மனிதர்களே. அன்றாடத்தை கடத்துவதே சிரமமெனும் நிலையிலும் சக மனிதரின் துயரில் உடனிருக்க முனையும் மனிதர்கள் அவர்கள். இந்த குழுவில் உதவி கேட்கும் / உதவி செய்யும் என ஏதேனும் ஒரு குழுவில் நாம் இருப்போம்/ இருந்திருப்போம். ஆக, இந்த வட்டத்தை நேர்த்தியாக இயக்குநர் ஷான் வரைந்ததும் திரைக்கும் பார்வையாளருக்குமான இடைவெளி மெல்ல மெல்ல அகல்கிறது. அதன்பின் அவர் சொல்லும் கதை நமக்கு நெருக்கமாகிறது.
பாதிப்புக்குள்ளாகும் குழந்தையை ’சிறப்பு’ குணங்கள் அல்லாமல், கோடிக்கணக்கான சராசரி குழந்தையின் இயல்புகளோடு காட்சிப்படுத்தியிருப்பதே அவளோடு நாம் ஒட்டிக்கொள்ள முடிகிறது. மேலும், சஸ்பென்ஸ் எனும் பெயரில் பாலியல் வன்முறைக்கான சூழலை முதல் காட்சியில் இருந்தே கொடுத்து வராமல் செய்ததும் ஆறுதல்.
திடீரென்று நடத்தப்படும் அந்தப் பாலியல் வன்முறையைக் காட்சியாகவோ வசனமாகவோ வெளிப்படுத்துவதை முடிந்தளவு தவிர்க்கப்பட்டிருந்தது. சாதியமும் ஆணாதிக்கமும் இணைந்து குழந்தையின் உயிரையே காவு வாங்கத் துடிக்கையில் இடதுசாரிய தோழமையே அக்குழந்தையை மீட்டெடுக்கிறது.
சிறுமியிடம் வாக்குமூலம் வாங்கும் காட்சி ஒன்றுள்ளது. காட்சியமைப்பின் நேர்த்திக்கும் இயக்குநரின் திறமைக்கும் அதுவே பேரூதாரணம். எத்தனை கெட்டியான மனிதரையும் கலங்கடித்து விடக்கூடியது. உடைந்துவிடக் கூடாது என்று வைராக்கியமாக இருப்பவரை நெகிழ வைத்துவிடக் கூடியது. இத்தனைக்கும் பெரிய டிராமாவையெல்லாம் அக்காட்சியில் வைக்கவில்லை. மாறாக, சிறுமியின் குழந்தைமை இருந்தது. அந்தக் குழந்தைமையே மாபெரும் ஆயுதமாக மாறியிருந்தது. அதை எதிர்கொள்ளல் என்பது முடியவே முடியாத ஒன்று. அந்த நுட்பத்தை இயக்குநர் கண்டுணர்ந்தது பெரிய விஷயம்.
முடிந்தளவு இயல்போடு நகரும் படத்தில் எப்படியும் இறுதிக் காட்சியில் துறுத்திக்கொண்டு சினிமாத்தனம் வெளிப்படும் என்றே நினைத்தேன். ஆனால், சராசரி மனிதரால் எளிமையாகச் சாத்தியப்படுத்த இயலும் எனும் ஒரு விஷயத்தை வைத்தே முடித்திருந்தார். அந்தப் புத்திசாலித்தனம் கவர்ந்தது.
படத்தின் நாயகனாகக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார் யோகிபாபு. உணர்வுகளை அதீத உடல்மொழியால் வெளிப்படுத்தும் முறைமை சார்ந்தவரல்ல அவர். ஆனால், அவர் கண்களில் வெளிப்படுத்தும் தவிப்பும் தேடலும் வெகுளித்தன்மையும் இக்கதை மையத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகின்றன. அதேபோல, சிறுமி ஸ்ரீமதிக்கு எதிரில் கேமரா இருப்பது போன்ற உணர்வே இல்லாமல் நடித்திருந்தது ஆச்சரியமளித்தது.
குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்/வன்முறை அதிகரித்து வரும் இச்சூழலில் அவசியமான படமாக ‘பொம்மை நாயகி’ உள்ளது. மேலும், இம்மாதிரியான படங்களைப் பார்த்ததும் பெற்றோருக்கு ஏற்படுவது அச்சமே. ஆனால், இப்படம் விதைப்பது அச்சமில்லாமல் அதை எதிர்கொள்ளும் நம்பிக்கையை. அதற்கே இயக்குநர் ஷானுக்கு வாழ்த்துகள். மேலும், இம்மாதிரியான கதை கருவும், அதை அதிக சினிமாத்தனங்கள் இல்லாமல் உருவாக்குவதற்கும் பெரும் நம்பிக்கையைத் தந்திருப்பது நீலம் தயாரிப்பு குழு. இம்மாதிரியான முயற்சிகள் தொடர வேண்டும்.
Vishnupuram Saravanan முகநூல் பக்கத்திலிருந்து