தமிழ் சினிமாவுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பாக தரமான இயக்குநராக வெற்றிமாறன் அறிமுகமான படம்தான் ‘பொல்லாதவன்’. வெற்றிமாறனுக்கு மட்டுமல்ல, தனுஷுக்கும் நல்ல பெயர் வாங்கித் தந்த படம் அது. ஒரு பல்சர் பைக்கை வைத்துக்கொண்டு கதை சொல்ல முடியுமா எனப் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதோடு அந்தப் படத்தை யதார்த்தம் குறையாமல் தரமான கேங்ஸ்டர் படமாக இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க வைத்தார் வெற்றிமாறன்.
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வந்த விஜய், சூர்யா போன்ற சூப்பர் ஹீரோக்களின் படங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு சூப்பர் ஹிட்டானது பொல்லாதவன். இதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அறிமுகம் இயக்குநர் வெற்றிமாறன், ஜி.வி.பிரகாஷின் இசை கூட்டணியில் தனுஷின் புதிய பரிமாணம் என இப்படம் மாஸாக அமைந்தது.
இந்நிலையில், பொல்லாதவன் படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு பெற்ற கொண்டாட்டம் நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. வெற்றிமாறன், தனுஷ், ஜி.வி.பிரகாஷ்குமார், படத்தின் நாயகி ரம்யாவும் கலந்து கொண்டது தான் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக மாறியது.
வெற்றிமாறனுக்கு தனுஷ் அறிமுகம் எப்படி?
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் வெற்றிமாறன். பாலு மகேந்திரா தனுஷை வைத்து ‘அது ஒரு கனாக்காலம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது ஒரு கதையை தனுஷிடம் சொல்லி நடிக்க சம்மதம் பெறுகிறார் வெற்றிமாறன். ஏற்கெனவே தனுஷ் மாமனார் ரஜினி நடித்து முக்தா சீனிவாசன் இயக்கிய படம் பொல்லாதவன். அப்போது அந்தப் படம் சூப்பர்டூப்பர் அடித்த படம். ரஜி னநல்ல பேர் வாங்கிக்கொடுத்த படம். அதே தலைப்பை வாங்கி, வேறு பொல்லாதவன் கதையைச் சொன்னார் வெற்றி. தனுஷ் வெற்றிமாறன் கதை மீது நம்பிக்கை வைத்து நடிக்கச் சம்மதித்து படம் உருவானது பொல்லாதவன்.
பானுப்பிரியா, கிஷோர், கருணாஸ், சந்தானம், அஞ்சு, டேனியல் பாலாஜி எனப் பலரும் இடம் பெற்றிருந்தனர். பிரபு என்னும் நடுத்தர வயது இளைஞர் கதாபாத்திரத்தில் தனுஷ் சூப்பராக நடித்திருந்தார்.
இப்படத்தில் காதல் காட்சிகளை மிக இயல்பாக நம் அனைவரின் வாழ்க்கையில் நடந்ததைப் போல அமைந்திருந்தது. அதன் பிறகு வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களில் வெற்றிக்கொடியை நாட்டியது. தனுஷ் ஏகப்பட்ட விருதுகளையும் வெற்றிகளையும் அள்ளிக் குவித்தார்.
அன்றைய நல்ல பிணைப்பை ஏற்படுத்திய பொல்லாதவன் நினைவு நாள் இன்று. தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத நாள்.