பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை அவர்கள் தன் நீண்ட கால நாடக அனுபவங்களை இங்கே சுவையாக நம் வாசகர்களுக்காகப் பகிர்ந்து கொள்கிறார்.
துரை நடிக்காததால்தான் ரசிகர்கள் டிக்கெட் பணத்தை ரீபண்ட் கேட்கிறார்கள் எனும் செய்தி என் முதலாளி கே.என். ரத்தினத்தின் காதில் விழுந்ததும் அவர் சிறிதும் கலங்காமல் மைக்கை நோக்கி வந்து, “ரசிகப் பெருமக்களே உங்கள் அபிமான நட்சத்திரம் சிறுவன் துரை இந்த நாடகத்தில் ஒரு பிராமணப் பையனாக நகைச்சுவை காட்சியில் நடிக்கிறான்” என ஒலிபெருக்கியில் அவர் சொன்னதும் ரீபண்ட் கேட்ட மக்கள் எல்லாம் மாரத்தான் போட்டிக்கு ஓடும் கூட்டம் போல் ஓடி தியேட்டருக்குள் நுழையவும், அண்ணா அவர்கள் காரில் வந்திறங்கவும் சரியாக இருந்தது.
எங்கள் முதலாளி அவரை வரவேற்று, அண்ணா நாற்காலியில் அமர்ந்ததும் நாடகம் தொடங்குவதற்கான மணி ஒலித்ததும் திரை விலகியது.
இசைக் குழுவினர் பின்னணி இசையை வாசிக்க நாடகம் தொடங்கியது. நாடகத்தை ஆவலோடு பார்க்கத் தொடங்கிய அண்ணா உரையாடலை மிகவும் ரசித்து கைதட்ட அவரோடு சேர்ந்து ரசிகர்களும் கைதட்ட சப்தம் அரங்கம் முழுவதும் ஒலித்தது.
15 நிமிடத்திற்குள் நான் மேடையில் என்ன பேச வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்தார்கள், பயிற்சியும் அளித்தார்கள், அக்கால நாடக ஹீரோக்கள்.
ஒரு குறிப்பிட்ட காட்சியில் பிராமணச் சிறுவனாக நான் மேடையில் தோன்றியதும் எழுந்த கைத்தட்டல் அடங்க பத்து நிமிடம் ஆகியது. அந்தக் காட்சியில் ஒருவர் பேப்பர் விற்றுக்கொண்டு வருவார். அவரிடம் நான் “என்னென்ன பேப்பர் இருக்கு?” என கேட்டதும் “தி ஹிந்து, தினமணி, சுதேசமித்திரன்” என்றதும் “ஏம்பா, அண்ணாவின் திராவிட நாடு இல்லையா” என்றதும் கைதட்டல் அடங்க நீண்ட நேரம் ஆகியது.
நாடகம் முழுவதையும் கண்டுகளித்த அண்ணா, தலைமை ஏற்றுப் பேச மேடைக்கு வந்த அவர், “பாட்டாளி பெற்ற பைங்கிளி என்ற இந்த நாடகத்தின் கதை, வசனத்தை எழுதிய பழனியப்பன் அவர்கள் கதை, வசனத்தை நான் மிகவும் ரசித்தேன், மகிழ்ந்தேன், வியந்தேன். இன்றைய சமுதாயத்திற்கு இந்த நாடகம் ஒரு பாடம்.
நடித்த ஒவ்வொரு நடிகர்களும் தன் திறமையை நன்கு வெளிப்படுத்தினார்கள். மிகப் பெரிய பேச்சாளர்கள் எல்லாம் கடைசியில் தான் பேசுவார்கள். அதைப்போல ஒரு நடிகனை நான் இப்போது கடைசியாகப் பாராட்டப் போகிறேன். இதில் ஒரு பிராமணச் சிறுவனாக வேடம் ஏற்று நடித்த சிறுவன் துரை இந்த நாடக கம்பெனியில் ஒரு மெயின் காமெடியன் என்று என்னிடம் சொன்னார்கள்.
அவன் மேடையில் தோன்றியதும் அடே அப்பா என்ன சிரிப்பு, கைதட்டல் அது நீண்ட நேரம் நீடித்ததால் அவனுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய புகழ் இருப்பதை நானும் பார்த்து அசந்து போனேன்.
எதிர்காலத்தின் இவன் உண்மையிலேயே ஒரு நல்ல நகைச்சுவை நடிகனாகப் பிரகாசிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அவனுக்கு என் இதயபூர்வமான பாராட்டுகள். துரை என்னில் கலந்தவன். நான் அண்ணா அவன் துரை.” என்றார்.
அன்று பேரறிஞர் அண்ணாவை நேரில் காணவும் அவரது சுவையான தமிழைக் கேட்கவும் ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள் கூட்டம் ஒரு ஜனசமுத்திரம் போல் காட்சியளித்தது.
அதனால் நாடகத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் டிக்கெட் மூலம் வசூல் ஆகியது. நாடக கம்பெனியில் உள்ள எல்லோருடைய பசி பட்டினியும் அகன்று ஒரு சுபிட்சமான வாழ்க்கை தொடங்கியது.
‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ எனும் அண்ணாவின் வார்த்தை பலித்தது. நாங்கள் எல்லாம் புத்துணர்வு பெற்று பூரிப்புடன் வாழ்கின்ற நிலை ஏற்பட்டது. அண்ணாவின் பாராட்டும், அங்கீகாரமும் அன்று எனக்குக் கிடைத்தது ஒரு பாக்கியம்தானே.
அது கிடைக்கக் காரணம் எனக்கு முதல் அங்கீகாரம் தந்த எனது குருநாதர் திரு கே.என். ரத்தினம் அவர்கள்தான். என்னை பரமபத ஏணி போல் உயர்த்தியது அவரது துணிச்சல் தான்.
கலைஞர் எழுதிய பராசக்தி, மந்திரி குமாரி, ஒரே முத்தம், சலகை பா.கண்ணன் எழுதிய நந்திவர்மன், ரா. வெங்கடாசலம் எழுதிய முதலாளி, எம்.எஸ். சோலைமலை எழுதிய நீதிபதி, அரு.ராமநாதன் எழுதிய வானவில், ஏ.பி. நாகராஜன் எழுதிய அன்னை பவானி, கொள்ளைக்காரன், நால்வர், நெல்லை வெங்கடாசலம் எழுதிய ராஜா தேசிங், லக்ஷ்மணன் எழுதிய நண்பன், கயிலை ராஜன் எழுதிய ஓவியன், கே.எஸ், கோபாலகிருஷ்ணன் எழுதிய போஸ்ட்மேன், கவி கா.மு.ஷெரிப் அவர்களின் பெண் தெய்வம், இதிகாச நாடகமான ராமாயணம், கிருஷ்ண லீலா போன்ற நாடகங்களை எல்லாம் சேர்த்து இதுவரை 5000 நாடகத்திற்கு மேல் நடித்துள்ளேன்.
ஆனால் புகழ் சோறு போடாது. பணம்தான் பசியைப் போக்கும் என்பது உண்மையானது. மழை பெய்ய வேண்டும் என்று வேண்டுவான் விவசாயி, மழை பெய்ய வேண்டாம் என்று வேண்டுவான் நாடகக்காரன்.
உலகில் எப்போதுமே இரண்டுவிதமான வேறுபாடுகள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அது இன்றும் நீடிக்கிறது.
ராத்திரியில் ராஜா வேஷம் போடும் நடிகன் பகலில் பட்டினி கிடப்பது என்பது அக்கால நாடக கம்பெனியில் சகஜம். ஒரு சில நாடக கம்பெனிகள் இதற்கு விதிவிலக்கு.
பணமும், சோப்பும் உபயோகிக்க உபயோகிக்க கரைந்துகொண்டு தானே இருக்கும்.
40 ஆயிரம் ரூபாய் பணம் தீர்ந்ததும் மேற்கொண்டு என்ன செய்வது என்று புரியாதபோது யோசிக்கத் தொடங்கினார் என் முதலாளி.
60 பேருடைய பசியைப் போக்க அவர் மீண்டும் சென்னைக்குப் பயணம் ஆனார். அங்கு சென்றதும், நடிப்பின் இமயமான சிவாஜி கணேசன் அவர்களைச் சந்திக்க சமயம் கேட்டபோது நிச்சயம் தருகிறேன் என்று சொல்லியவர், ஒரு நேரத்தையும் தீர்மானித்து அவரை வரும்படியும் சொன்னார் சிவாஜி.
என் முதலாளி அவர்கள் சிவாஜியை நேரில் சந்தித்தபோது ‘ஓவியன்’ என்ற நாடகத்திற்குத் தலைமை தாங்கி நடத்தித் தர வேண்டும் என்று கேட்டபோது, அவரும் வர சம்மதித்து ஒரு தேதியையும் நிச்சயம் செய்து கொடுத்ததோடு “நானும் நடிகன்தானே” என்றார். அப்போது அவர் முகத்தில் ஒரு பெருமிதம் தெரிந்தது.
நாடகத்தன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருக்கும் தன் நண்பர் ராயப்ப கவுண்டரின் வீட்டில் தங்கியிருந்து, இரவு 9 மணிக்கெல்லாம் அவரோடு புறப்பட்டு தியேட்டருக்கு வந்து விட்டார் நடிகர் திலகம்.
ஆனால் நாடகத்தில் கதாநாயகனாக நடிக்கும் நடிகர் ஊருக்குப் போனவர் இரவு 9 மணி ஆகியும் வரவில்லை. இது காலச்சக்கரத்தின் வேலை தானே?
முருகனை வேண்டிய எங்கள் முதலாளி ஒரு முடிவெடுத்து தன் தம்பி காளையை கூப்பிட்டு, “நீதான் இன்னைக்கு ஹீரோவா நடிக்கிற தயாராயிடு” என்றார்..
“எனக்கு எந்த வசனமும் தெரியாதே. நான் எப்படி தைரியமாக நடிப்பது” என்று கேட்டபோது, “அதைப் பற்றி நீ கவலைப்படாதே. துரை உனக்கு பிராம்டிங் பண்ணுவான். அதைக் கேட்டுக் கேட்டு நீ பேசு” என்றார்.
மக்களின் செவிகளுக்கெல்லாம் கேட்காத அளவிற்கு மிக மெல்லிய குரலில் வசனங்களை துரை சொன்னது எப்படியோ இமயத்திற்கு மட்டும் கேட்டு விட்டது…
(தொடரும்)