இன்று காலையிலிருந்தே மனம், ஸ்ரீதேவியைக் கொண்டாடிக்கொண்டே இருக்கிறது.
இத்தனைக்கும் நான் நன்றாக நினைவு தெரிந்து திரைப்படங்கள் பார்க்க ஆரம்பித்த காலத்தில் அவர் தமிழ்த் திரையுலகைவிட்டே விலக ஆரம்பித்த காலகட்டம். இருந்தாலும் தொலைக்காட்சியிலோ, தியேட்டர்களில் மறுபிரவேசம் செய்த திரைப்படங்களினாலா அல்லது வீடியோவிலா என்றெல்லாம் சொல்ல முடியாமல் மிகவும் பிடித்த தேவதை நடிகையாக இதமான நெருக்கமான நடிகையாகிப் போனார். இன்று வரை பிடித்த நடிகை என்றால் முதல் இடம் இவருடையதுதான்.
எந்தப் படத்தில் இவரின் நடிப்பு பிடிக்கும் என்று கேட்டால்…
‘மீண்டும் கோகிலா’வில் ‘சின்னஞ்சிறு வயதில்’ பாடலில் பாடலை மறந்து தவித்து, நெளிந்து பின் விட்ட இடத்தை கமல் ஆரம்பிக்கும்போது வெட்கத்துடன் கள்ளச்சிரிப்பு சிரிப்பாரே.. அதே படத்தில் கல்யாணத்திற்குப் பிறகு கழுத்தை இறுக அணைக்கும் கமலிடம் “என்ணன்னா… ப்ச்” என்று சலித்துக்கொண்டு திரும்பிப் படுப்பாரே.. பாவாடை ஜாக்கெட்டுடன் நிற்கும் தீபாவை அங்கலாய்ப்பாகப் பார்த்து மடிசார் கட்டி, பின் அதே தீபாவிடம் தன் கணவனை விடச் சொல்லி “புஸ்..புஸ்” என்பது வரை… அதுவும் அந்தக் குண்டுக் கன்னமும், குழந்தை சிரிப்பும், பாத்திரப் படைப்புக்கேற்ற குரலும்…
ஜானி தனக்காக ரோஜா தோட்டத்தையே தரும் ரஜினியிடம் காதல் சொல்லி, அதை மறுக்கும் அவரிடம் கோபித்து, மீண்டும் அவர் காதலை ஏற்றுக்கொண்டு.. “ஏன்..ஏன்… அப்படிச் சொன்னீங்க..?” என்று சொல்லும்போது முந்தானையின் தலைப்பு நுனியைப் பற்றிக்கொண்டே செல்லக் குரலில் “ம்..ம்.. அப்படித்தான் சொல்வேன்..” என்பாரே.. இதிலும் என் இனிய மனது பாடலின் இருளும் ஒளியுமான ஒளிப்பதிவில் பெங்களூர் சில்க் சேலையில் நீள முத்தாரத்தில் ஒற்றை முத்துக் கப்பலில் தெவிட்டாத தெய்வீகம் அது..
‘மூன்றாம் பிறை’யில் தன்னைக் காணாமல் தேடிக்கொண்டு வீட்டுக்குள் வரும் கமலை “சீனு..சீனு..” என்று தவிப்பும் துடிப்புமாக இறுக்கமாகக் கட்டி அணைத்து, அழுது முடித்து, கன்னத்தில் முத்தமிட்டு, “இப்ப டூ இல்லை.. பழம்” என்பாரே..
‘குரு’வில் பச்சை பிராக்கில் பிளைட்டில் பறந்து “ஹேய் யூ” என்று ஜானகியின் குரலுக்கு வாயசைத்து (அதென்னவோ ஜானகி குரல் படு பொருத்தம் இவருக்கு).. ‘எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்’ பாட்டில் தண்ணீரில் தவறி விழுந்து “தப்..தப்” என்று அடித்துக்கொண்டே கையை மேலே தூக்கி, “நான் வணங்குகிறேன்” பாட்டில் நிஜ தேவதையாகவே..
‘வாழ்வே மாயம்’ படத்தில் ‘மழைக்கால மேகம்’ பாட்டில் ஒரு டார்க் புளூ கலர் மிடியிலும், ‘தேவி..ஸ்ரீதேவி’ பாட்டில் மஞ்சள் சட்டையிலும், கறுப்பு குட்டிப் பாவாடையிலும் ரெட்டை ஜடையிலும் வருவாரே.. அதெல்லாம் வேறு எந்த நடிகைக்கும் பொருந்தாது. அதே போல் த்ரீ போர்த்தில் செம அழகாக இருந்த இரண்டு பேர் ஒருவர், வைஜெயந்தி மாலா.. இரண்டாமவர் இவர்தான்.. அதேபோல் டூ பீஸ் டிரெஸ் ஆபாசமாகத் தெரியவே தெரியாத உடலமைப்பும்.. ‘வந்தனம்.. என் வந்தனம்’ மனம் நொறுங்கி வாய் விட்டுச் சொல்ல முடியாமல் குமுறி இறங்கி வருவாரே..
‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் தன்னிடம் “எல்லாத்துக்கும் முன் அனுபவம்னு வேணும் தானே” என்று கேட்கும் கமலிடம் “ஆமாம்..” என்று சொல்லி “அப்ப கல்யாணத்துக்கும்” என்று கேட்கும் அவரிடம் வெட்கப்படுவாரே.. தியேட்டரில் முகத்தை நெருக்கமாகக் கொண்டுவரும் கமலிடம் காட்டும் விரும்பியும், விரும்பாத தர்ம சங்கட பாவமும்.. வெள்ளை கலர் மேக்ஸியில் ப்ரீகேரிலும்.. ‘நினைவோ ஒரு’ பாடலில் வெள்ளையில் புளூ சமுக்கி வைத்த சேவையிலும், புதுப் பெண்ணாக சிவப்பு கலர் பட்டுப் புடவையில்.. கடைசியாக அதே வெள்ளை கலர் புடவையில் வாயில் கைவைத்து “க்ரீச்” என்று கத்துவாரே..
‘தனிக்காட்டு ராஜா’வில் ‘சந்தனக் காற்றே’ பாடலில் வெள்ளை ஷிபானை சற்றே தூக்கிப் பிடித்துக்கொண்டு.
‘வறுமையின் நிறம் சிகப்பில்’ சாதாரணமான அல்லது அப்படி நம் கண்களுக்குத் தெரியும் மஞ்சள் புடவையில் வட்டக் கழுத்து ரவிக்கையில், பெரிய காது வளையத்துடன் சந்தம் பாடி காதல் சொல்லும் கமலிடம் சம்மதமாக கைவிரல்களை இறுக்கக் கோர்த்து, கண்களை மூடி முகம் புதைத்து நிமிர்த்தும் கமலிடம் வெட்கப்பட்டு இன்னும் இன்னும் உள்ளே புதைவாரே..
ஆஹா.. எதை விட.. எதைச் சொல்ல.. எப்போதும் கொண்டாடுவேன் .. என் எவர்கிரீன் தேவதைப் பெண்ணை…
விஜி முருகநாதன் முகநூல் பதிவிலிருந்து…