தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பிஸியான நகைச்சுவை நடிகராகவும் அதேசமயம் செலக்டிவ்வான படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வெற்றிகரமாக இரட்டை குதிரை சவாரி செய்து வருபவர் நடிகர் யோகிபாபு.
இந்த நிலையில் யோகிபாபு நடிகர் என்பதைத் தாண்டி தற்போது புதிய அவதாரம் ஒன்றையும் எடுத்துள்ளார். ஆம். தான் கதையின் நாயகனாக நடிக்கும் படம் ஒன்றில் முதன்முறையாகத் தானே கதை, திரைக்கதை, வசனமும் எழுதி இருக்கிறார்.
‘வில் அம்பு’ படத்தை இயக்கிய ரமேஷ் சுப்ரமணியம்தான் இந்தப் படத்தை இயக்குகிறார். லெமன்லீஃப் கிரியேஷன் சார்பில் ஆர்.கணேஷ் மூர்த்தி தயாரிப்பில் புரொடக்சன் NO-3 ஆக தயாராகும் இந்தப் படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது. படத்தின் இசை அமைப்பாளர் இன்னும் முடிவாகவில்லை.
‘இந்தப் படத்தில் கதாநாயகியாக சம்ஸ்கிருதி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் பெப்சி விஜயன், கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, சிங்கம்புலி, சிங்கமுத்து, மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக லெமன்லீஃப் கிரியேஷன் நிறுவனம் தயாரிப்பில் புரொடக்சன் NO-1 ஆக உருவாகிவரும் ‘மலை’ படத்தில் யோகிபாபு மற்றும் லட்சுமி மேனன் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
மேலும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன் நிறுவனத்துடன் இணைந்து அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி பாண்டியன் மற்றும் திவ்யா துரைசாமி ஆகியோர் நடிப்பில் புரொடக்சன் NO-2 ஆக உருவாகி வரும் படத்தையும் லெமன்லீஃப் கிரியேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.