நடிகர் கிஷோர்குமார் கதாநாயகனாகவும் காவ்யா பெல்லு கதாநாயகியாகவும் நடிக்கும் சிங்கிள் ஷாட் திரைப்படம் ‘டிராமா’. இந்தப் படம் கொரோனாவுக்கு முன்பு எடுக்கப்பட்டு கொரோனா பொதுமுடக்க தடைக்குப்பின் பணிகள் நடந்து தற்போது திரைக்கு வருகிறது.
மலையாளத் திரை உலகில் ‘என்டே சினிமா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் அஜு கிழுமலா, இந்தப் படத்திற்குச் சிறப்பான திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்.
மின்வெட்டின் போது ஒரு மூத்த அதிகாரி ஸ்டேஷனுக்குள் கொல்லப்பட்டுகிறார். அதை ஒட்டி கொலையாளியைக் கண்டுபிடிக்க விசாரணை நடைபெறுகிறது. பில்டிங்கில் இருக்கும் அத்தனை பேரையும் விசாரிப்பதுதான் ‘டிராமா’ படத்தின் மையக் கருத்து.
படம் முக்கியமாக காவல் நிலையத்திற்குள் படமாக்கப்பட்டாலும், கதையும் கேமராவும் அந்தக் கட்டடத்திற்கு வெளியேதான் பயணிக்கிறது. படத்தில் கார் மற்றும் பைக் போக்குவரத்தும் உள்ளன. இந்த எல்லாமே ஒரு ஷாட்டிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் சிறப்பு.
‘இப்படி ஒரு தந்திரமான ஷாட்டை எப்படி எடுத்தீர்கள்’ என்று இயக்குநர் அஜு கிழுமலாவிடம் கேட்டபோது, “ஆறு மாதகால போஸ்ட் புரொடக்ஷனின் காரணமாக, பல ஒத்திகைகள் மற்றும் முழு குழுவினருடன் பயிற்சியுமே காரணம். இதற்காக சுமார் 80 பேர் மீண்டும் மீண்டும் பயிற்சி செய்தார்கள். படப்பிடிப்பின்போது ஃபிரேம்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும், நிழலைத் தவிர்க்கவும் கேமராக்கள் மூலம் பயிற்சி பெற்றோம். முழு படமும் சுமார் 8 மணி நேரத்தில் படமாக்கப்பட்டது.” என்றார்.
நடிகர் கிஷோரைப் பற்றி இயக்குநர் அஜு கிழுமலா சொல்லும்போது. “படத்திற்கான அவரது அர்ப்பணிப்பைப் பற்றிப் பேச வார்த்தைகள் இல்லாமல் நான் தவிக்கிறேன். நள்ளிரவில் கூட ஒத்திகை பார்க்க அவர் செட்டுக்கு வந்தார். ஒரு அனுபவமிக்க நடிகர் ஒரு பரிசோதனைப் படத்திற்காக இவ்வளவு மெனக்கெட்டது ஊக்கமளிக்கிறது. சார்லி சார் இந்தப் படத்திற்குத் தனது தளராத ஆதரவை அளித்தார்” என்றார்.
சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமான இதில் மூன்று பாடல்களை கவிஞர் ஏகாதசி எழுதியுள்ளார். அதில் மதுரையைப் பற்றி வரும் பாடல் சூப்பர் ஹிட் பாடல்.
பின்னணி இசையமைத்த பிஜிபால், ‘நீ யாரோ…?’ என்கிற பாடலுக்கு இசையமைக்க, ‘மல்லிகப்பூ’ என்கிற பாடலுக்கு ஜெயா கே. தாஸ் இசையமைத் திருக்கிறார், ‘சுண்டுவிரலில்’ என்கிற பாடலுக்கு ஜெஸின் ஜார்ஜ் இசையமைத்திருக்கிறார்.
படத்தின் ஒரு பகுதி பகலிலும் ஒரு பகுதி இரவிலும் நடக்கிறது. பல திருப்பங்கள் உள்ள இந்தப் படத்தில் நடிகர் சார்லி, ஜெய்பாலா, வின்சன்ட் நகுல், வினோத் முன்னா, மரியா பிரின்ஸ், பிரித்தி ஷா பிரேம்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். கேமரா ஷைனோஸ், எடிட்டிங் அகில் அலியாஸ், இசை பிஜிபால்.
சாதனை முயற்சியாகவும் விற்பனை நோக்கத்திலும் ரசிகர்களைக் கவரும் விதத்தில் பரபரப்பான திரைக்கதை அமைப்பில் சிங்கிள் ஷாட் படமாக எடுத்திருக்கிறார்கள். இதற்காக நடிகர்களுக்கு தளராமல் ஆறு மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சில காட்சிகளில் நடிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு நடித்தது படத்தில் அப்படியே பதிவாகியுள்ளது. சிறப்பான பயிற்சி காரணமாக ஒரே ஷாட்டில் எந்த இடையூறும் இல்லாமல் படமாக்கப்பட்டதால் படக்குழுவினர் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டனர்.
ரிலீசுக்குத் தயாராக இருக்கும் இந்தப் படம் தமிழ், மலையாள மொழிகளில் வெளியாகிறது.