அமெரிக்காவில் நடந்துகொண்டிருக்கும் அர்பா இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் மாமனிதன் சிறந்த திரைப்படமாகத் தேர்வாகிவுள்ளது.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி ஜோடியாக நடித்து கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்த ‘மாமனிதன்’ திரைப்படம் பிரபலங்களின் பாராட்டை பெற்று சர்வதேச அளவிலும் விருதுகளைக் குவித்து வருகிறது.
அமெரிக்காவில் நடைபெறும் 25வது அர்பா சர்வதேச திரைப்பட விழாவில், ‘மாமனிதன்’ திரைப்படம் ‘சிறந்த திரைப்படம்’ எனும் போட்டிப் பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான படைப்புகள் இவ்விழாவில் இடம் பெற போட்டியிட்டன. இறுதிப் போட்டியில் இடம் பெற்ற ஐந்து திரைப்படங்களில் ’மாமனிதன்’ இடம் பெற்றது மிகவும் பெருமைக்கு உரியதாகும். வெள்ளி விழா கொண்டாடும் அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் ‘மாமனிதன்’ இடம் பெற்றது மிகவும் சிறப்புக்கு உரியது.
ஏற்கெனவே டோக்கியோ திரைப்பட விழாவில் மாமனிதன் படம் திரையிடப்பட்டு சிறந்த ஆசிய படத்துக்கான தங்கப் பதக்கம் விருதை வென்றது. இந்த நிலையில் பூட்டான் நாட்டில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் மாமனிதன் படம் திரையிடப்பட்டது. இந்தத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகர், சிறந்த டைரக்டர், சிறந்த சர்வதேச படம், சிறந்த குடும்பத் திரைப்படம் ஆகிய நான்கு பிரிவுகளில் மாமனிதன் படம் விருதுகளை பெற்றுள்ளது. இந்த தகவலை டைரக்டர் சீனுராமசாமி தெரிவித்து உள்ளார்.
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நான்காவது முறையாக விஜய்சேதுபதி இணைந்த படம் ‘மாமனிதன்’. பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரித்த இந்தப் படத்திற்கு அவரும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து இருந்தனர். ஆனால் நீண்ட நாட்களாக இந்தப் படம் கிடப்பிலேயே இருந்தது. அதன் பின்னர் பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் மாமனிதன் படத்தை வாங்கி 2022 ஜூன் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட்டார்.
படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதனைத் தொடர்ந்து ஓடிடி தளம் மாமனிதன் வெளியிடப்பட்டது. ஓடிடியில் சக்கை போடு போட்டது. இதற்காக ஆஹா ஓடிடி வெற்றியை விழா எடுத்துக்கொண்டாடியது. தொடர்ந்து பட விழாக்களுக்கு அனுப்பப்பட்ட ‘மாமனிதன்’ அங்கும் பல விருதுகளை வென்று வருகிறது.
மாமனிதன் படம் சர்வதேச அளவில் விருது பெற்று வருவது விஜய்சேதுபதி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இம்மாதம் 20ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.
தொடர்ந்து மாமனிதன் திரைப்படம் பல விருதுகளை வென்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.