எம்.ஜி.ஆர். ஏன் அப்படிச் செய்தார்?

1 0
Spread the love
Read Time:11 Minute, 41 Second

தமிழகத்தின் தலைசிறந்த கதாநாயகர்களான எம்.ஜி.ஆர். – சிவாஜி கணேசன் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் ‘கூண்டுக்கிளி’. மறைந்த எழுத்தாளர் விந்தன் கதை, வசனம் எழுத, டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி.ஆர், சிவாஜி கணேசன், பி.எஸ்.சரோஜா, டி.டி.குசலகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இசை அமைப்பாளர் கே. வி. மகாதேவன்.

கோ.ஜனார்த்தனன்

இந்தப் படம் 1954 ஆகஸ்டு 26ல் திரைக்கு வந்தது. டி.ஆர்.ராமண்ணா இயக்கி, சகோதரி நடிகை டி.ஆர்.ராஜகுமாரியுடன் இணைந்து தயாரித்தார். 1954, ஆகஸ்டு 26 அன்று ‘கூண்டுக்கிளி’ படம் திரைக்கு வந்து இன்றுடன் 68 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி சென்னையில் வசிக்கும் எழுத்தாளர் விந்தனின் மகன் கோ. ஜனார்த்தனனிடம் பேசினோம். கூண்டுக்கிளி படம் பற்றியும் டி.ஆர்.ராஜகுமாரி, எம்.ஜி.ஆர்., சிவாஜி குறித்தும் விந்தன் பற்றியும் அவர் அளித்த பதில் இதோ…

“கூண்டுக்கிளி திரைப்படத்திற்கு மிகப்பெரிய பேக்கிரவுண்டு உண்டு. நடிகை டிஆர் ராஜகுமாரிதான் அப்பாவுக்கு முதல் படம் எழுத வாய்ப்புத் தந்தார். அந்தப் படம்தான் ‘வாழப் பிறந்தவள்’. அந்தப் படம் சரியாகப் போகவில்லை. அதன்பிறகு அப்பா வசித்த தெருவில் சினிமா காஸ்டியூமர் நடேசன் என்பவர் இருந்தார். அவர் அப்பாவிடம் ஒரு கதை எழுதித் தரச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தார் அவரது தயாரிப்பில் சிவாஜி கணேசன் – பத்மினி நடித்த ‘அன்பு’ என்கிற படத்தின் கதை, வசனம் அப்பா எழுதினார். அந்தப் படம் வெளியாகி  100 நாட்கள் ஓடியது. அப்பா கதை எழுதிய 7 படங்களில் 100 நாட்கள் ஓடிய படம் அன்பு. சாதாரண நிலையிலிருந்த நடேசன் பெரிய பணக்காரராக ஆனார்.

விந்தன்

அதன்பிறகு டி.ஆர்.ராஜகுமாரி அப்பாவைக் கூப்பிட்டு “விந்தன் ஒரு பெரிய பிராஜக்ட் படம் பண்ணணும். அதுக்கு ஒரு கதை எழுதணும்” என்றார். அந்தப் படம்தான் ராஜகுமாரியின் ஆர்.ஆர்.பிக்ஸர்ஸ் தயாரித்த கூண்டுக்கிளி. படம் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் வெளியானது. படம் முதல் ரிலீசில் தோல்வி. ஆனால் இரண்டாவது ரிலீசில் ஓகோன்னு ஓடியது.

டி.ஆர்.ராஜகுமாரி

அந்தப் படத்துக்கு சம்பளமாக அப்பாவுக்கு ராஜகுமாரி அந்தக் காலத்தில் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார். அந்தப் பணத்தில் அப்பா ‘மனிதன்’ என்கிற பத்திரிகையைத் தொடங்கினார். அந்தப் பத்திரிகையில் திரைவிருந்து என்று ஒரு தொடர் எழுதினார். அது சினிமாகாரர்களை விமர்சனம் செய்து எழுதிய தொடர். அதில் முழுக்க தயாரிப்பாளர் கிருஷ்ணா பிக்சர்ஸ் லேனா செட்டியாரை காரசாரமாக விமர்சனம் செய்திருந்தார். அதில் அப்பாவுக்கு நிறைய எதிர்ப்பு கிளம்பியது. அந்த நேரத்தில் இவருக்கு ஒப்பந்தமாகியிருந்த 12 படங்கள் ஒரே நேரத்தில் ஒரே இரவில் கேன்சல் ஆகிவிட்டது.

கூண்டுக்கிளி தோல்விக்குப் பிறகு அப்பாவுக்குப் பட வாய்ப்புகள் இல்லை. இதில் சினிமாகாரர்கள் எதிர்ப்பு வேறு.

விந்தன் தொடர்ந்து பத்திரிகைகளில் பொதுவெளியில் மக்களுக்கு எதிராக நடவடிக்கைகள் செய்வோரையும் தந்திரமாகச் செயல்படுபவர்களையும் சுட்டிக்காட்டி பத்திரிகையில் எழுதினார்.

ராஜாஜி எழுதிய ‘பஜகோவிந்தம்’ பாடலை எதிர்த்து ‘பசி கோவிந்தம்’ எழுதினார்.

மு.வரதராசனாரை எதிர்த்து ‘மனிதன் மாறவில்லை’. நாவல்… எல்லோருக்கும் நல்லவர் என்கிற சிறுகதை எழுதினார்.

அகிலன் எழுதிய சினேகிதி என்ற நாவலுக்கு எதிர்ப்புக்குரலாக ‘அன்பு அலறுகிறது’ என்கிற நாவலை எழுதினார்.

இப்படி 1955லிருந்து 1960க்குள் எல்லாரையும் நேரடியாக விமர்சனம் செய்து எழுதி பகைத்துக்கொண்டார்.

அதன் பிறகு சில படங்கள் வந்தது. ஜெமினி, சாவித்திரி நடித்த ‘மணமாலை’ என்கிற படம். ‘சொல்லு தம்பி சொல்லு’ என்று ஒரு படம். கல்கி எழுதிய ‘பார்த்திபன் கனவு’ என்கிற படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் விந்தன் எழுதினார். கல்கியால் எழுத்தாளராக அடையாளப்படுத்தப்பட்ட விந்தன் எழுதினால்தான் சரியாக இருக்கும் என்று அப்பாவை எழுதச் சொன்னார்கள். இவர் எழுதிய கடைசிப் படம்தான் ‘குழந்தைகள் கண்ட குடியரசு’. இதோடு விந்தன் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது.

கூண்டுக்கிளியில் அப்பா கதை, வசனம், நான்கு பாடல்களை எழுதினார். அதில் ஒரு பாடல்தான் ‘மயக்கும் மாலை பொழுதே நீ போ போ’ என்கிற பாடல். அந்தப் பாடல் கூண்டுக்கிளி படத்தில் இடம்பெறவில்லை. பின்னால் எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி படத்தில் வைத்துவிட்டார் டி.ஆர்.ராமண்ணா. அந்தப் பாடல் கூண்டுக்கிளியில் இடம்பெறாமல் போனதற்குக் காரணம் எம்.ஜி.ஆர்.தான். அந்தப் பாட்டு கனவுப் பாடல்.

டி.ஆர்.ராமண்ணா

இந்தக் கதைப்படி சிவாஜி பணக்கார வீட்டுப் பையன். இவர் காதலித்த பெண் ஏழைப்பெண் என்பதால் கல்யாணம் செய்துகொடுக்க மறுத்துவிடுகிறார் அவர் அப்பா. சிவாஜி அப்பா கல்யாணத்துக்கு மறுத்ததும் அந்தப் பெண்ணை எம்.ஜி.ஆருக்குக் கல்யாணம் செய்துகொடுத்துவிடுகிறார்கள்.

எம்.ஜி.ஆரும் சிவாஜியும் ஏற்கெனவே நண்பர்கள். சிவாஜி அந்தப்பெண் கிடைக்காததால் ரயிலில் தலைவைத்து தற்கொலை செய்துகொள்ளப் போகிறார். அப்போது எம்.ஜி.ஆர். காப்பாற்றுகிறார்.

எம்.ஜி.ஆர். அந்தப் பாடல் இந்தப் படத்தில் வரக்கூடாது என்றதற்குக் காரணம் சிவாஜி காப்பாற்றப்பட்டபின் அந்தப் பெண்ணை நினைத்து பாடுவதாக இந்த மயக்கும் மாலை பாடல் வருகிறது.

எனக்கு அந்தப் பெண் மனைவியான பின் சிவாஜி எப்படி இன்னொருவர் மனைவியை கனவு கண்டு பாடுவது முறை என்று மறுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

டிஆர் ராஜகுமாரி இந்தப் பாடலை இந்தப் படத்தில் வைக்க தீவிரமாக இருந்தார். “ஏற்கெனவே சிவாஜிதான் உங்க கேரக்டரில் நடிக்க வைக்கவேண்டும் என்று விந்தன் சொன்னார். சிவாஜிதான் நல்லவன் கேரக்டரில் நடிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆனால் நீங்கள் இந்தக் கேரக்டரில் நடிக்கிறீர்கள்” என்று எம்.ஜி.ஆரிடம் சொல்லிப் பார்த்தார். எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார்.

இதற்கிடையே டி.ஆர்.ராமண்ணா படத்தையே முடித்துவிட்டார். ஒரு பாடல் நீக்கியது, கேரக்டரை மாற்றியது, இதெல்லாம் விந்தனுக்குத் தெரியாது. படம் ரிலிசான பிறகுதான் ராமண்ணாவுக்குப் போன் செய்து கேட்கிறார். ‘ஒரு பாட்டையும் காணோம். கேரக்டரையும் மாற்றியிருக்கிறீர்களே’ என்று. டி.ஆர்.ராமண்ணா “இல்லப்பா இதில்ல வைக்க முடியலை. அடுத்த படத்தில கண்டிப்பா வைச்சிடுறேன்” என்றார்.

அடுத்த ஆண்டு 1955ல் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த படம் ‘குலேபகாவலி’. டி.ஆர்.ராமண்ணாதான் இயக்கம். படத்திற்கு இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி. பாடல்கள் தஞ்சை ராமையா தாஸ். பாட்டுப் புத்தகத்தில் மட்டும்தான் பாடல் விந்தன் என்று இருக்கும். வானொலியில் ஒலிக்கும்போது தஞ்சை ராமையாதாஸ் என்று கூறுவார்கள்.

கூண்டுக்கிளியில் அப்பா எழுதிய இன்னொரு பாடல் ‘சரியா தப்பா’ என்கிற பாடல். இந்தப் பாடல் படத்தின் மொத்த கதையையும் அப்படியே சொல்லும். அந்தப் பாடலில் இடம்பெற்ற ஒரு வார்த்தைக்காக சென்சார் மூணு முறை கட் செய்து சொப்பிவிட்டார்கள்.

கொஞ்சும் கிளியான பெண்ணை

கூண்டுக்கிளி ஆக்கிவிட்டு

கெட்டிமேளம் கொட்டுவது சரியா தப்பா?

என்ற பாடலில் ‘கெட்டிமேளம் கொட்டுவது சரியா தப்பா’ என்பது வரக்கூடாது என்று கட் செய்தார்கள். அப்புறம் ‘காலமெல்லாம் சுற்றியது சரியா தப்பா’ என்று அப்பா மாற்றிக் கொடுத்தார். சின்ன பாடலான அது பெரிய பாடலாக ஆகிவிட்டது. அந்தப் பாட்டு டி.எம்.சௌந்தரராஜன் பாடினார். அவருக்கு அந்தக் காலத்தில் பெரிய பேர் வாங்கிக்கொடுத்தது.

விந்தன் தன் சிந்தனையால் தனக்குச் சரி என்று பட்டதை எழுதினார். யாருடைய தயவுக்காகவும் தன் பேனாமுனையை வளைத்தது கிடையாது. அப்படி வளைத்திருந்தால் அன்று அவர்தான் முன்னணியில் இருந்திருப்பார். அதை அவர் விரும்பவில்லை. அவர் சிந்தனைக்கு உண்மையாக இருந்தார். அவர் அஜஸ்ட்மென்ட் என்பதைச் சுற்றி கூண்டுக்கிளியாக இருக்க விரும்பவில்லை. சிந்தனைச் சிறகுகளை விரித்துப் பறக்கும் சுதந்திரப் பறவையாக இருந்தார். அதற்கு அடையாளம்தான் இந்தக் ‘கூண்டுக்கிளி’.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
50 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
50 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!