எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்து கடந்த 1974ஆம் ஆண்டில் வெளியான ‘சிரித்து வாழ வேண்டும்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. எஸ்.எஸ்.பாலன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக லதா நடித்திருந்தார். நவீனத் தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ள இப்படத்தை எம்.ஜி.ஆரின் பிறந்த தினமான ஜனவரி 17 ஆம் தேதியன்று வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
எம்.ஜி.ஆர்.-லதா ஜோடியுடன் எம்.என்.நம்பியார், ஆர்.எஸ்.மனோகர், தேங்காய் சீனிவாசன், ஐசரிவேலன், எஸ்.வி.ராமதாஸ், வி.எஸ்.ராகவன், எல்.காஞ்சனா ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் பாடல்களை வாலியும், புலமைப்பித்தனும் எழுத மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார்.
’உலகம் என்னும்..’ என்று தொடங்கும் பாடலைப் புலமைப்பித்தன் எழுத எம்ஜி.ஆருக்காக ஷேக் சலாமத், டி.எம்.சவுந்தரராஜன் ஆகிய இரு
பாடகர்கள் அந்தப் பாடலுக்கு குரல் கொடுத்திருந்தார்கள்.
’எண்ணத்தில் நலமிருந்தால்..’ மற்றும் ‘ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்’ ஆகிய இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இன்னொரு பாடல் ’பொன்மனச் செம்மலை புண்படச் செய்தது யாரோ’ என்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
‘இதயம் பேசுகிறது’ மணியன், வித்வான் வே.லட்சுமணனுடன் இணைந்து உதயம் புரோடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்த இப்படத்தை இயக்கியவர் எஸ்.எஸ்.வாசனின் மகனான எஸ்.எஸ்.பாலன்.