காலச் சக்கரம் சுழல்கிறது என்கிற தலைப்பில் நாடக சினிமா பழம்பெரும் நடிகர் பிஆர் துரை தன் நாடக-சினிமா வாழ்க்கை அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.
கலை உலகில் சாதனையாளர்கள் என நான் என்றென்றும் போற்றிப் புகழப்படவேண்டியவர்கள் பற்பலர்.
‘பராசக்தி’ படத்தைப் படைத்த முத்தமிழ் அறிஞர் கலைஞரைத்தான். இதிகாச காப்பியங்களை எல்லாம் இணையற்ற தன் அழகு தமிழால் அலங்கரித்து அதனைத் திரைப்பட உலகிற்கு அர்ப்பணித்த அருட்செல்வர் ஏ.பி நாகராஜனைத்தான்.
சுதந்திரத்தின் பெருமைகளையும் அதற்காக உழைத்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளை எல்லாம் தன் உரையாடல் மூலமாகவும், பாடல்கள் மூலமாகவும் முன்னிலைப்படுத்திய தேசிய கவிஞர் எஸ்.டி. சுந்தரத்தைத்தான்.
தேனினும் இனிய தமிழைத் தென்றல் தவழும் சாளரம் போல் தன் சொற்பொழிவாலும், உரையாடலாலும், கட்டுரையாலும் நான்கு திசைகளிலும் உள்ள ரசிகப் பெருமக்களுக்கு விருந்து படைத்த பெருமைக்குரிய பேரறிஞர் அண்ணாவைத்தான்.
கரித்துண்டு, கள்ளோ காவியமோ போன்ற நாவல்கள் மூலமாக மனிதனுடைய நாடி நரம்புகளை எல்லாம் நன்கு உயிர்ப்பித்த உன்னத மனிதர் டாக்டர் மு.வரதராசனாரைத்தான்.
தமிழ்ச்சுவையில் உயிர் நீத்த மன்னன் நந்திவர்மனை நாடக வடிவமாக்கி தமிழ் மொழியின் சிறப்பைத் தன் உரையாடல் மூலம் தந்த ஜலகண்டாபுரம் பா. கண்ணனைத்தான்.
நடிகர் திலகத்தைத் தன் தமிழால் களம் கண்ட கவிஞனாக உலா வரச் செய்த தன்னிகரற்ற எழுத்தாளனாகத் தரணியெங்கும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை தந்த தஞ்சைவாணனைத்தான்.
எழுத்தைத் தொழிலாகக்கொண்ட எல்லோருமே போற்றிப் புகழும் மாமனிதராகிய கவிஞர் கா.மு.ஷெரிப்பைத்தான்.
சோகத்தையும், சுவை குன்றாத நகைச்சுவையையும் சமமாகத் தந்து திரைப்பட உலகில் தன் திறமையைப் பயன்படுத்திய பண்பாளர் எம்.எஸ். சோலைமலையைத்தான்.
நாடக உலகிலும் சரி, திரைப்பட உலகிலும் சரி பெண்மையை முன்னிலைப்படுத்தியே தன் திரைக்கதை உரையாடல் மூலம் கொடிகட்டிப் பறந்த இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனைத்தான்.
பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், தேரோட்டி மகன், போலீஸ்காரன் மகள் போன்ற படைப்புக்களை எல்லாம் எழுதி புகழ் உச்சியில் இருந்த பி.எஸ்.ராமைய்யாவைத்தான்.
நாலு வேலி நிலம், டாக்டருக்கு மருந்து, வடிவேல் வாத்தியார் போன்ற நாடகங்களை எல்லாம் எழுதி நாடக மேடையின் உயிர் நாடியாகவும் இருந்த கி.ஜானகிராமனைத்தான். ‘வானவில்’ நாடகம் மூலமாக வளம்வந்த இவர், ராஜராஜ சோழனை நாடகமாக்கம் செய்து இலக்கிய உலகிற்குப் புகழ் சேர்த்த பிரம்மாண்ட இலக்கியப் படைப்பாளியாகிய அரு.ராமநாதனைத்தான்.
சுயம்வரம் எனும் ஒரு நகைச்சுவை படைப்பை எழுதிய இவர்தான். பைத்தியக்காரனையும் படைத்து அதில் நடித்து, படத்தை வெற்றி பெறச் செய்த பண்பாளர் என் குருநாதர் எஸ்.வி.சகஸ்ரநாமத்தைத்தான்.
ஒய் நாட், யாருக்கும் வெட்கமில்லை, முகமது பின் துக்ளக், எங்கே பிராமணன் போன்ற படைப்புகளைத் தந்து நாடக மேடையின் பெருமையை உயர்த்திய பெருமைக்குரிய சோ அவர்களைத்தான்.
கம்பரை முதன்மைப்படுத்தி கவிச்சக்கரவர்த்தி எனும் நாடகத்தை எழுதிய தரமான இலக்கியவாதி கு.அழகிரிசாமியைத்தான்.
தரமான கதை அம்சத்தோடு பல நல்ல நாடகங்களை எழுதி ‘தண்ணீர் தண்ணீர்’ மூலமாக பரமபத ஏணி போல் உயரத்திற்குச் சென்ற கோமல் சுவாமி நாதனைத்தான்..
ஜீவநாம்சம் நாடகம் மூலமாக கலை உலகில் கால் பதித்து சவாலே சமாளி என சூளுரைத்த மல்லியம் ராஜகோபாலைத்தான்,
மோட்டார் சுந்தரம் பிள்ளை திரைப்படத்திற்குத் தன் உரையாடல் மூலம் உயிர் தந்த விசால மனிதர் வேப்பத்தூர் கிட்டுவைத்தான்.
முக்கனியின் சுவை போன்ற இலக்கிய படைப்புகளை எல்லாம் தன் இனிய தமிழால் படைத்த பண்பாளர் மூத்த கவிஞர் முகவை ராஜமாணிக்கத்தைத் தான்.
தமிழ் சினிமா உலகிற்கு சம்சாரம் அது மின்சாரம் என்ற படம் மூலம் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத்தந்த நவரச எழுத்தாளர் விசுவைத்தான்.
YGP நாடக்க குழுவிற்காக ‘Flight 172’ எனும் நாடகத்தை எழுதிய இவர் தன் குழுவிற்காக ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது போன்ற தரமும், நகைச்சுவையும் நிறைந்த எண்ணற்ற நாடகங்களை எழுதிய மௌலியைத்தான்.
நல்ல பல கருத்துக்களை நாடகமாக எழுதி நாடக மேடையின் தரத்தை உயர்த்திய வெங்கட்டைத்தான்.
சோகத்தையும், சுவைகுன்றாத நகைச்சுவையையும் சமமாகத் தந்து திரைப்பட உலகில் தன் திறமையைப் பயன்படுத்திய பண்பாளர் M.S. சோலைமலையைத்தான்.
Film Institute-ல் Principal ஆக பதவி வகித்த பண்பாளர், பசும்பொன், மானுடத்தில் மகாகவி, கற்கண்டு போன்ற படைப்புகளை எல்லாம் சுவையுடன் எழுதிய C.M.V. ரமணனைத்தான்.
பத்திரிகை ஆசிரியராக இருந்துகொண்டே சுயம்வரம் கதையை நாடகமாக்கம் செய்தவர் தொலைக்காட்சிக்காக ஜன்னல் எனும் Telefilmயும் எழுதி இயக்கிய தாமரை மணாளனைத்தான்.
சிறு வயதிலேயே நாடக உலகில் கால் பதித்த இவர் எழுதிய படைப்புகள் அனைத்துமே சிரிப்பதற்காக மட்டுமே. சாதுமிரண்டால், மெட்ராஸ் டு பாண்டிச்சேரி, சோப்பு சீப்பு கண்ணாடி, டெல்லிக்கு போறோம் வாரியலா, ரோஜாவின் ராஜா, தெய்வீக ராகங்கள் போன்ற தரமான படைப்புகள் அனைத்தையும் தந்து ரசிகப் பெருமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விலாநோகச் சிரிக்க வைத்த என் இனிய சகோதரர் ஏ.வீரப்பனைத்தான்.
கவிஞனின் காதலி, ராகம் தானம் பல்லவி போன்ற நாடகங்களை எழுதியதோடு எண்ணற்ற திரைப்படப் பாடல்களையும் எழுதிய காவியக் கவிஞர் வாலியைத்தான்.
முத்தான பாடல்களை எல்லாம் சத்தாகத் தந்து திரை உலகிற்குப் பெருமை சேர்த்த முன்னாள் அரசவை கவிஞர் முத்துலிங்கத்தைத்தான்.
சங்கமித்திரை, சிலப்பதிகாரம், பாவம் சலோமி போன்ற படைப்புகளை எல்லாம் நாடகமாக்கம் செய்த நீதி அரசர் நைனார் சுந்தரத்தைத்தான்.
திரை உலகில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி நெஞ்சில் ஓர் ஆலயமாக திகழ்ந்த இயக்குநர் ஶ்ரீதரைத்தான்.
நாடக உலகிலும் திரைப்பட உலகிலும் நகைச்சுவையைத் தன் உயிர்மூச்சாகக் கொண்டு வலம்வந்த சித்ராலயா கோபுவைத்தான்.
தேன்கூடு நாடகத்தை எழுதி நடிகர் திலகத்தையே இயக்கிய இவர் திரைக்கதை அமைப்பதில் நம்பர் ஒன்னாக இன்றுவரை பேசப்படும்
ஜி.பாலசுப்ரமணியத்தைத்தான்.
குங்குமச்சிமிழ், நகையே உனக்கொரு நமஸ்காரம் போன்ற நல்லதொரு நாடகங்களை எழுதிய எனது அருமை நண்பர், பண்பாளர் பழனி கோபுவைதான்..
எண்ணற்ற மாற்று மொழி படங்களுக்கும், பாசமலர் போன்ற நூற்றுக்கணக்கான தமிழ் திரைப்படங்களுக்கும் கதை வசனம் எழுதி கலைமகளின் அருளை பெற்ற அற்புத மனிதர் ஆரூர் தாஸ் அவர்களைத்தான்..
புதுமையான படைப்புக்களை எல்லாம் தன் எழுத்து மூலமாக நாடக மேடைக்கு அர்ப்பணித்த அருமை நண்பர் அகஸ்டோ வைத்தான்.
கதையோ கவிதையோ எதுவானாலும் தன் இனிய தமிழால் படைத்து சகலரையும் கவர்ந்த C.V. சந்திரமோகனைத்தான்
எரிமலையில் வசந்தம் கடல் நீர் இனிக்கும் எனக் கூறிய இவர் நாடகத்தின் கதைகளை மட்டுமல்ல தலைப்பையும் புதுமையாக கையாண்டவர் என் இனிய நண்பர் லியோ பிரபுவைத்தான்…
தொடரும்…