

மலையாளத் திரையில் இன்னொரு சுடர் ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ மலையாளத் திரைப்படம். கடந்த ஆண்டுகளில் வந்த பல மலையாளப் படங்கள் விற்பனையை நோக்கமாகக் கொண்டு எடுக்காமல் கதைக்காகவே எடுக்கப்பட்டு வருவது பாராட்டுக்குரியது.
இந்தப் படத்தில் பெரிய ஹீரோ இல்லை, வில்லன் இல்லை, சண்டை இல்லை, கதாநாயகி நடனம் இல்லை, பேய் கதையும் இல்லை. ஆனால் பரபரப்பாகப் போகிறது கதை. படத்தில் கதாநாயகனாக நடித்தவர் நடிகரும், பாடகருமான வினீத் ஸ்ரீனிவாசன்.
படம் முழுக்க ஒரே முகபாவத்துடன் நடிக்கிறார். ஆனால் சலிப்பாக உணரமுடியவில்லை. அவர் உரையாடலுடன் பின் குரலிலும் பேசப்படுகிறது, மனசாட்சியைப்போல. தமிழில் எதிர்பார்க்க முடியாத படம். தற்போது மலையாளத்தில் வந்த ஒரு புதுமையை ஏற்படுத்தியிருக்கிறது.

சரி கதை என்ன?
விபத்துக் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக வரும் அப்பாவி மக்களை ஏமாற்றும் வக்கீல்கள் பற்றிய கதைதான் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்.
முகுந்தன் எனும் எல்.எல்.பி. படித்த, இளமையைத் தாண்டிய வயதுடைய ஒருவர் ஜூனியராக ஒரு மூத்த வக்கீலிடம் வேலை பார்க்கிறார். இவரது வளர்ச்சியால் அங்கு பணியாற்ற இவருக்கு விருப்பமில்லாமல் போகிறது. வேறு வழக்குக்காகத் தேடுகிறார். ஒன்றும் சிக்கவில்லை. இந்த நிலையில் அவரது தாயார் கீழே விழுந்து கால் முறிவு ஏற்படுகிறது. அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார். அறுவைக்கு பணம் போதவில்லை. அப்போதுதான் சாதாரண விபத்தையும் விபத்தாக மாற்றி பணம் பார்க்கும் கும்பலின் அறிமுகம் முகுந்தனுக்குக் கிடைக்கிறது.
இவர் வக்கீல் என்பதை உணராமல் இவருக்கு காப்பீட்டுத் தொகை பெற்றுத் தரப்படுகிறது. வழக்கே இல்லாமல் இருக்கும் முகுந்தனுக்கும் இந்த ஆசை தொற்றிக்கொள்கிறது. எப்படி போராடியும் இவருக்கு வக்காலத்தில் கையெழுத்திட எந்த நோயாளியும் முன்வரவில்லை. இந்த நிலையில் விபத்தில் மயக்கநிலையில் இருக்கும் ஒருவரின் கைவிரல் ரேகையை வைத்து வக்காலத்தை தயார் செய்து வழக்கை நடத்துகிறார்.
இதன் தொடர்ச்சியாக வேகமாக வளரும் முகுந்தன் கொலை, சதி, அரசு முத்திரையை மாற்றி போர்ஜரி, வஞ்சகம் செய்து பெரிய அளவில் சம்பாதிக்கிறார். தனக்கு எதிரானவர்களை தீர்த்துக் கட்டுகிறார். ஜாடிக்கேற்ற மூடியாக அவருக்கு ஒரு மனைவியும் அமைகிறாள்.

திரைப்படம் முழுவதும் தோன்றும் அவரது இடைவிடாத உள் குரல், அவர் வெற்றி பெறுவதற்கான முயற்சியில் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் அதிகபட்ச வெறியாக மாறுகிறது.
இந்தக் காலத்தில் மனிதன் மிகவும் இரக்கமற்றவனாகவும், பச்சாதாபம் இல்லாதவனாகவும் இருக்கிறான். அவன் தனக்கு நெருக்கமானவர்களுக்குக் கூட தீங்கு விளைவிக்கும் திறன் கொண்டவர்களாக மாறுகிறார்கள் என்பதை இந்தப் படம் பரப்பாகக் கொண்டு செல்கிறது. சக மனிதர்களைப் புரிந்துகொள்ள குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கவேண்டிய படம்.
இந்தப் படத்தின் அறிமுக இயக்குநர் அபினவ் சுந்தர்.
நடிகர்கள்: வினீத் ஸ்ரீனிவாசன், சுராஜ் வெஞ்சாரமூடு, தன்வி ராம், ரஞ்சித், சுதி கொப்பா, சலீம் குமார் மற்றும் தாரா அமலா ஜோசப்.
தயாரிப்பாளர்கள்: சுவின் கே.வர்கி, பிரசோப் கிருஷ்ணா, அஜித் ஜாய், இசை: சச்சின் வாரியர்.