‘நான் மிருகமாய் மாற’ வன்முறை நிறைந்த குடும்பப் படம் || -சசிகுமார்

1 0
Spread the love
Read Time:10 Minute, 37 Second

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சத்தியசிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் வரும் நவம்பர18 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில்  படத்தின் குழுவினர் நேற்று (15.11.2022)  பத்திரிகையாளர்களச் சந்தித்து கலந்துரையாடினர்.
படத்திலிருந்து  பிரத்யேகமாக, ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து படக் குழுவினர் உரையாடத் தொடங்கினர்.

படத்தின் ஒலிப்பொறியாளர் KNACK ஸ்டுடியோஸ் உதயகுமார் பேசுகையில்:
“இந்தத் திரைப்படம் ஒலியைச் சார்ந்து எடுக்கப்படுகிறது என்பதை அறிந்ததும் மிகவும் மகிழ்ச்சியுற்றேன்.  தொடக்கத்தில், சசிகுமார் எவ்வாறு இந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருந்துவார் என்ற சந்தேகம் இருந்தது. எனினும் அவர், ஒரு ஒலிப்பொறியாளரின் வாழ்க்கையை மிகவும் இயல்பாக தனது தத்ரூபமான நடிப்பின் மூலம் வெளிக்காட்டி வியப்பில் ஆழ்த்தியுள்ளார். படத்திற்குக் கூடுதல் பலமாக ஜிப்ரானின் பின்னணி இசை அமைந்துள்ளது.”

படத்தின் தொகுப்பாளர் NP ஸ்ரீகாந்த் பேசுகையில்:
“நான் கல்லூரியில் படித்த காலத்தில் சசிகுமாரை தூரத்தில் இருந்து பார்த்துள்ளேன். தற்பொழுது அவருடன் பணியாற்றுகிறேன் என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தில் புதியதாக ஒரு தொகுப்பு முறையை நாங்கள் பின்பற்றியுள்ளோம்.” 

படத்தின் இசை அமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில்:
“இயக்குநர் சத்தியசிவாவின் தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் இந்த்த திரைப்படத்தின் பின்னணி இசையில் ஒரு புதுமையை கையாள எண்ணினார். அதாவது இசைக்கருவிகளைப் பயன்படுத்தாமல் நாம் அன்றாடம் கேட்கும் சத்தங்களை வைத்து மட்டுமே இசையை உருவாக்க வேண்டும் என நிர்ப்பந்தம் வைத்தார். இதனைப் புரிந்துகொள்ள தொடக்கத்தில் சிரமம் இருந்தாலும், பின்னர் அவர் கூறிய வண்ணமே இசை அமைத்துக் கொடுத்தேன். படத்தின் தொகுப்பாளர் ஒரு வித்தியாசமான முறையை இப்படத்தில் கையாண்டுள்ளார். ஆரம்பம் முதலே படத்தில் ஒரு வேகம் இருக்கும். நானும் சசிகுமாரும் குட்டி புலி திரைப்படத்திற்கு பின் இப்பொழுது ஒன்றிணைகிறோம். படத்தின் வெளியீட்டிற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன்.”

படத்தின் இயக்குநர் சத்யசிவா பேசுகையில் :
“இந்தத் திரைப்படத்தில் புதியதாகச்  சிலவற்றை நாங்கள் பின்பற்றியுள்ளோம்.  படமாக நீங்கள் அதனைப் பார்க்கும்பொழுது, நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். படத்தில் ஒரு வடிவம் இருக்கும். ஆரம்பத்தில், அதனை நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு எடுத்துரைப்பதில்  சிறிது சிரமம் இருந்தபோதிலும், படம் தற்பொழுது உருவாகியுள்ள விதத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்தபோதிலும் மக்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
இந்தப் படத்தின் கதையைத் தொலைபேசியின் வாயிலாக கொரோனா ஊரடங்கின் போது சசிகுமாருக்கு எடுத்துரைத்தபொழுது, வித்தியாசமாக இருக்கிறது, நிச்சயம் நான் நடிக்கிறேன் என்று உடனே சம்மதித்தார். தனக்குள் இருக்கும் இயக்குநரை மறந்து ஒரு நடிகராக இந்தத் திரைப்படத்தில் அவர் வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
இசையமைப்பாளர் ஜிப்ரானிடம், திரைப்படத்தில் பாடல்கள் இல்லை என்று கூறியவுடன் மிகவும் மகிழ்ச்சியுற்றார். அவர் பின்னணி இசையமைப்பதில்
கைதேர்ந்தவர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே!  இத்திரைப்படத்திலும் அதனை நிரூபித்துள்ளார் ஜிப்ரான்.
ஒளிப்பதிவாளர் ராஜாவைப் பாராட்டித்தான் ஆக வேண்டும். படத்தின் முக்கால்வாசி காட்சிகள் ஒன்று இரவு  நேரத்தில் அல்லது மழையில் படமாக்கப்பட்டது. இயலாது என முகம் சுளிக்காமல் முழு ஈடுபாட்டுடன் இந்தப் படத்தில் அவர் பணிபுரிந்தார்.
நாயகி ஹரிப்ரியாவிடம் ஒரு குழந்தைக்குத் தாயாக நடிக்க வேண்டும் என்று கூறியவுடன் சற்றும் தயங்காமல் கதையின் ஆழம் மற்றும் தன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, உடனே சம்மதித்தார். இந்தத் திரைப்படத்தில் அவர் நாயகி என்பதனைத் தாண்டி, சசிகுமாரின் மனைவியாக மட்டுமே நம் கண்களுக்குத் தெரிவார். பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் நான் எதிர்பார்த்தவற்றைச் சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்குப் பின் விக்ராந்த், சரத் அம்பானி, சங்கரைப் பார்த்தால் நிச்சயம் ஒரு விதமான பயம் ஏற்படும்.

சசிகுமார் மீது சிவப்புச் சாயம் கொண்ட ஒரு வாலியை ஊற்றுவது போன்ற ஒரு காட்சி படத்தில் உண்டு! அது அவருக்கு மிகவும் சிரமமாக இருக்கும் என்ற காரணத்தினால் ஒரே நாளில் காட்சி அமைக்கலாம் என திட்டம் தீட்டினோம். எட்டு முதல் பத்து நாட்கள் வரை இதற்காக ரிகர்சல் செய்தோம். இப்படி உருவானதே அந்த சண்டைக்காட்சி.”

படத்தின் நாயகி ஹரிப்ரியா பேசுகையில்:
“செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கடைசியாக 2010ல் ‘வல்லக்கோட்டை’ திரைப்படத்தில் நடித்தேன். அதன்பின் பல்வேறு கன்னடப் படங்களில் நடித்துள்ளேன். மீண்டும் தமிழில் நடிக்க ஒரு சரியான கதை மற்றும் குழுவிற்காகக் காத்திருந்தேன். அப்பொழுதுதான் இயக்குநர் சத்தியசிவா, எனது கன்னடத் திரைப்படமான
‘பெல்பாட்டம்’ படத்தினைப் பார்த்து இந்தத் திரைப்படத்திற்காக அணுகினார். கதை மிகவும் பிடித்துப் போக உடன் சம்மதித்தேன்.

இந்தப் படத்திற்குத் தமிழ்நாட்டு மட்டும் இல்லாமல் கர்நாடகத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.  ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் சசிகுமாரின் மனைவியாக நடித்துள்ளேன். முதலில் என்னை அணுகும் பொழுது படத்தில் எனக்கு ஆறு வயது குழந்தை இருப்பதாக்க கூறினார்கள். எப்பொழுதும் புதிதாக ஒன்றை முயற்சி செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். எனவே இந்த்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்தேன்.

இறுதியாகப் பேசிய சசிகுமார் தான் படம் நடித்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்பதனைத் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில் :
“காமன் மேன் என்று இந்தத் திரைப்படத்திற்கு முதலில் பெயர் வைக்கப்பட்டது. பின்னர் அந்தத் தலைப்பு மாற்றப்பட்டு ‘நான் மிருகமாய் மாற’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தப் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கும்.  எனினும் குழந்தை, மனைவி என்று கதையில் ஒரு சராசரி மனிதனின் உணர்ச்சிகள் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்குக் கூடுதல் பலம் அளித்துள்ளது. பாடலே இல்லாத திரைப்படத்தில் முதன்முறையாகப் பணியாற்றியுள்ளேன். படத்தில் நடனம் இல்லை என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

எப்பொழுதும் ஒரு கிராமத்துக் கதாநாயகனாக வயலில் வேட்டியுடன் சுற்றித் திரிந்த எனக்கு ஒலிப்பொறியாளர் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. இந்தக் கதாபாத்திரத்திற்காக ஒலிப்பொறியாளர்கள் லட்சுமி நாராயணன் மற்றும் உதயகுமார் அவர்களைக் கூர்ந்து கவனித்தேன். படத்தில் அனைத்துமே புதியதாக இருக்கும். இதற்காக அனைவரும் கடினமாக உழைத்து உள்ளோம்.  படக்குழுவினர் அனைவரும் தங்களது முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாகப் பங்களித்து பணியாற்றியுள்ளனர்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!