வானொலிக் கலைஞர், தொலைக்காட்சி இயக்குநர், திரைப்பட இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முக ஆற்றலாளர் எஸ்.வி.ரமணன். இவரது தந்தை கே.சுப்பிரமணியம் சினிமா இயக்குநர், தங்கை நாட்டியத் தாரகை. இவரது குடும்பம் கலைக்குடும்பம். கலைத்துறையில் பல சாதனைகள் படைத்த எஸ்.வி.ரமணன் வயது முதிர்வு காரணமாக தன் 87வது வயதில் காலமானார்.
பிரபல தயாரிப்பாளரும், டைரக்டருமான கே.சுப்பிரமணியத்தின் இரண்டாவது மகன் எஸ்.வி.ரமணன். இவர் பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் சகோதரர். மேடை நாடகங்களில் நடித்து கலை உலகுக்கு வந்த எஸ்.வி. ரமணன் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான பல நாடகங்களையும், ஆவணப்படங் களையும் இயக்கி உள்ளார்.
அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பான ஆயிரக்கணக்கான விளம்பரப் படங்களுக்குப் பின்னணி குரல் கொடுத்து பிரபலமானார்.
இவரது எடுப்பான குரல் வளம் மற்றும் தனித்துவமான திரைக்கதை பாணி மிகப்பெரிய அளவிலான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேடியோ விளம்பரங்களைத் தயாரித்துள்ளார். ‘எங்கே அவள்?’ என்பது அவரது முதல் தொலைக்காட்சித் தொடர். திருமலை திருப்பதி விளக்கப்படம், ரமண மகரிஷி, ஷீரடி சாய்பாபா போன்ற ஆன்மிக நிகழ்ச்சி களைத் தயாரித்து மிகப்பெரிய அளவில் விளக்கப் படமாக எடுத்துள்ளார்.
ஜெய்ஸ்ரீ பிக்சர்ஸ் என்கிற நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் குறும் படங்கள், தொடர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வானொலி மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களைத் தயாரித்தார்.
1983-ம் ஆண்டு ஒய்.ஜி.மகேந்திரன், சுஹாசினி நடிப்பில் வெளியான ‘உருவங்கள் மாறலாம்’ என்ற திரைப்படத்தை இயக்கி, இசையமைத்திருந்தார் எஸ்.வி. ரமணன். இப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமல்ஹாசன், ஜெய்சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர். தெலுங்கில் ‘துரைபாபு ஷோபனம்’ என்ற படத்தையும் இவர் இயக்கினார். அது வெளியாகவில்லை. 1966-ல் ஜெயகாந்தன் இயக்கத்தில் வெளியான ‘யாருக்காக அழுதான்’ படத்துக்கு இசையமைத்திருந்தார்.
எஸ்.வி.ரமணனுக்கு திருமணமாகி லஷ்மி, சரஸ்வதி என இரு மகள்கள் உள்ளனர். இதில் லஷ்மியின் மகன்தான் இசையமைப்பாளர் அனிருத்.