சிவாஜி கணேசன் ‘பராசக்தி’ படத்திற்காகத் தேர்வு நடந்த காமக்கூர் வீடு சம்புவராயர் அடிச்சுவட்டை ஒட்டி கள ஆய்வு செய்யலாம் என்ற நோக்கில் ஆரணி நோக்கிப் பயணம் செய்தேன். ஆரணியில் எழுத்தாளரும் மொழி பெயர்ப்பாசிரியருமான ஜி. குப்புசாமி அவர்கள் அற்புதமான மாமனிதரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஆரணியின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்வதில் இவருடைய பங்கு முக்கியமானது. ‘அறம் செய்வோம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி ஆத்மார்த்தமான பல அறங்களைச் சத்தமில்லாமல் செய்துகொண்டு வருபவர். ‘ஆரணி டைம்ஸ்’ என்ற வட்டார இதழ் நடத்தி வருபவர். ஆரணியில் இலக்கிய கர்த்தாக்கள் செல்லக்கூடிய புத்தகக் கடையை நடத்தி வருபவர் சுதாகர். இந்த அற்புதமான மனிதரை வழிகாட்டியாக எனக்கு அறிமுகப்படுத்திவிட்டு குப்புசாமி சார் ஒதுங்கிக் கொண்டார்.
சுதாகர் உதவியுடன் ஆரணியைச் சுற்றிக் காண்பித்துவிட்ட பிறகு ஒரு வேண்டு கோள் வைத்தேன். காமக்கூர் முதுபெரும் புலவர் சுந்தர முதலியார் வம்சா வளியைச் சார்ந்தவர்களைப் பார்க்க வேண்டும் அழைத்துச் செல்லுங்கள் என்றேன். சுந்தர முதலியார் குறித்து திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகளில் குறிப்பிடுவார்.
தற்பொழுது சுந்தர முதலியார் பரம்பரையினர் அங்கு இல்லை. அவர்களது வம்சாவளியினர் ஆரணி நகருக்குச் சென்றுவிட்டதாக்க கூறினர். அச்சமயம் சுதாகர் அவர்கள் இந்த ஊர்தான் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியாரு டைய மாமனார் ஊர் என்றார். உடனே ஆர்வம் உண்டாகி சுந்தரமுதலியார் வம்சாவளியைத்தான் பார்க்க முடியவில்லை. பெருமாள் முதலியார் வீட்டை யாவது பார்க்கலாம் என்று அவரது வீட்டிற்குச் சென்றோம்.
அந்த வீட்டில் வசித்துவருபவர் ரவி மிகவும் அன்புடன் வரவேற்றார். பெருமாள் முதலியாரைக் குறித்து விசாரிக்க ஆரம்பித்தோம். பெருமாள் முதலியாருடைய மாமனார் இராமசாமி முதலியார் வீடு என்றார். பாரம்பரியமிக்க நெசவுத் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த வீடு.
‘பராசக்தி’ படத்திற்கு சிவாஜி கணேசனைத் தேர்வு செய்த வீடு இதுவே. நீண்ட கலந்தாலோசனைக்குப் பிறகு சிவாஜியைத் தேர்வு செய்தார் பெருமாள் முதலியார். அதற்காகத் தனது மாமனாரான ராமசாமி முதலியாரிடம் இந்த பையன் நன்றாக நடிப்பான் என்று வலியுறுத்தி மாமனாரை இணங்க வைத்தாராம். அச் சமயம் இந்த வீட்டின் தாழ்வாரப் பகுதியின் சுவரின் நீலவண்ணத் தூணில் சிவாஜி கணேசன் சற்று டென்சனுடன் காணப்பட்டார். வீட்டிற்குள் மிக நீண்ட விவாதம் நடந்து சிவாஜி கணேசனைத் தேர்வு செய் தார்களாம்.
அந்த நன்றிக் கடனுக்காகத் தன்னைத் தேர்வு செய்த இந்த வீட்டிற்கு சிவாஜி கணேசன் தான் மறையும் வரை ஒவ்வொரு தைப்பொங்கல் நாள் அன்று வேட்டி, துணி மற்றும் சீர் வாங்கிக்கொண்டு இந்த வீட்டிற்குச் சென்று ஆசிர்வாதம் வாங்குவது என்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் இறந்த பிறகும் நடிகர் பிரபு குடும்பத்துடன் இரண்டு வருடங்கள் இந்த வீட்டிற்குச் சென்றுள்ளார்.
பெருமாள் முதலியாருடைய மாமானார் ராமசாமி முதலியாரின் பெரிய மகள் சாந்தா நாயகி. அந்த அம்மாவின் ஞாபகார்த்தமாகத்தான் சிவாஜி கணேசன் தனது தியேட்டருக்கு சாந்தி என்று பெயரும் வைத்தார்.
சிவாஜி கணேசன் நின்று கொண்டிருந்த அந்த வீட்டின் தூணில் நானும் ‘அறம் செய்வோம்’ சுதாகர் அவர்களும் நின்று கணேசனை நினைத்துக் கொண்டோம்.
ரெங்கையா முருகன் முகநூல் பதிவு