சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிளாப் அடித்து தொடங்கி வைத்த படம் ‘சாருகேசி’. இந்தப் படத்தை ஒய்.ஜி.மகேந்திரா இயக்கி, நடிக்கிறார்.
நடிகர் ஒய் ஜி மகேந்திராவின் பிரபல நாடகமான சாருகேசி திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளது. இது குறித்த அறிவிப்பை சென்னை வாணி மஹாலில் நடைபெற்ற சாருகேசி நாடகத்தின் 50வது காட்சியில் வெளியிட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், திரைப்படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
அறிவிப்பை வெளியிட்டு ரஜினிகாந்த் பேசுகையில், “1975-ல் ரகசியம் பரம ரகசியம் நாடகத்தைப் பார்க்க நான் சென்றபோது, என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனால் இப்போது சாருகேசி நாடகத்தின் 50வது காட்சி விழாவில் சிறப்பு விருந்தினராக வந்து இருக்கிறேன். இது எல்லாமே காலத்தின் செயல். நாகேஷ், ஜெயலலிதா, சோ, விசு போன்றவர்கள் யு.ஏ.ஏ. நாடகக் குழுவில் இருந்து வந்தவர்கள். இது மிகவும் கட்டுக்கோப்பான குழு. இதில் படித்தவர்கள், பல துறை வல்லுநர்களாக இருந்தனர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் இந்த நாடகம் இன்னொரு வியட்நாம் வீடாக இருந்திருக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.
“இந்த ட்ராமாவைப் பொறுத்தவரை கதை, திரைக்கதை, கதாபாத்திரங்கள், அவர்களது குணத்திற்கு உண்டான வசனங்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளன. ஒய்.ஜி.மகேந்திரா போன்ற ஒரு நடிகரை சினிமா சரியாகப் பயன்படுத்தவில்லை.
இந்த நாடகம் படமாக எடுக்கப்படும்போது மிகப்பெரிய வெற்றி அடையும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. வசந்த் திரைக்கதை எழுதவுள்ளார், அது இன்னும் சிறப்பானதாக இருக்கும்” என்று அவர் தெரிவித்தவர்,
“என் திருமணம் நடைபெறுவதற்கு முக்கியமான காரணம் ஒய்.ஜி.மகேந்திரா தான். மது, அசைவ உணவுப் பழக்கம் போன்றவை ஒரு காலத்தில் என்னோடு ஒட்டி இருந்தன. வெஜிடேரியன்ஸை பார்த்தால் எனக்குப் பாவமாக இருக்கும். என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா தான்,” என்று சூப்பர் ஸ்டார் கூறினார்.
புகை, மது போன்ற உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை விட்டுவிடுமாறு அனைவரையும் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டார்
ஒய்.ஜி.மகேந்திரா பேசுகையில், “ஒரே ஒரு மக்கள் திலகம், ஒரே ஒரே நடிகர் திலகம், ஒரே ஒரு மெல்லிசை மன்னர், ஒரே ஒரே கவிஞர் கண்ணதாசன், ஒரே ஒரு ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டாராக இருக்கு முடியும்,” என்று கூறினார்.
சாருகேசி நாடகத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை வெங்கட் எழுதியுள்ளார். ‘சாருகேசி’க்கான பொறி காலம் சென்ற கிரேசி மோகனிடமிருந்து வந்ததாகும். இந்த நாடகத்தை ஒய்.ஜி.மகேந்திரா இயக்கியுள்ளார்.
அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இசை கலைஞனின் வாழ்க்கையைச் சுற்றி கதை நடக்கிறது. இந்த நாடகத்தை திரைப்படமாக எஸ்.ஏ.ஆர்.பி. பிக்சர் ப்ரொடக்சன்ஸ் (ஸ்ரீ அக்ரஹாரம் ராஜலக்ஷ்மி ப்ரொடக்சன்) தயாரிக்கவுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்த் எஸ்.சாய் இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைக்க உள்ளதோடு கிரியேட்டிவ் இயக்குநராகவும் பங்காற்ற உள்ளார். ஒய்.ஜி.மகேந்திரா முதன்மை வேடத்தில் நடித்து இயக்குகிறார். இதர நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.