சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்த சிம்புவுக்கு வெங்கட் பிரபு இயக்கிய ‘மாநாடு’ படம் கம்பேக் கொடுத்தது. அந்தப் படம் மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து சிம்பு மீண்டும் கோலிவுட்டில் பிஸியானார். அடுத்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்குப் பிறகு சிம்பு தற்போது ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க, ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களை இயக்கிய என்.கிருஷ்ணா இயக்குகிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான். 2017-ஆம் ஆண்டு கன்னடத்தில் சிவ ராஜ்குமார் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘மஃப்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்தப் படத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார்.
சிம்புவுடன் கவுதம் வாசுதேவ் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதைப் படக்குழு அறிவித்திருந்தனர். இதையடுத்து நடிகர் கவுதம் கார்த்திக்கும் நடிகை பிரியா பவானி சங்கரும் தங்களது டப்பிங் பணிகளை முடித்ததாகத் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், ‘பத்து தல’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
‘பத்து தல’ திரைப்படம் வருகிற மார்ச் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கடுத்து சிம்பு கொரோனா குமார், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக நடித்துவருகிறார்.
ஆக் ஷன் படங்களில் மெச்சூரிட்டியான கேரக்டர்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் சிம்பு.