பாரா சைக்காலஜி ஹாரர் ஜானரில் உருவாகியுள்ள ‘ஸ்ட்ரைக்கர்’

1 0
Spread the love
Read Time:13 Minute, 45 Second

ஜஸ்டின் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக வித்யா பிரதீப் நடித்துள்ள படம் ஸ்ட்ரைக்கர். முக்கிய வேடத்தில் ராபர்ட் மாஸ்டர், கஸ்தூரி, அபிநயாஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.

ASW கிரியேஷன்ஸ் மற்றும் JSJ சினிமாஸ் சார்பில் ஹென்றி டேவிட் மற்றும் ஜஸ்டின் விஜய் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஸ்ட்ரைக்கர்’. எஸ்.ஏ. பிரபு இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் பாடல்களுக்கான இசையை விஜய் சித்தார்த்தும் பின்னணி இசையை வி.டி.பாரதி மற்றும் வி.டி.மோனிஷ் ஆகியோரும் அமைத்துள்ளனர். ஒளிப்பதிவை மனீஷ் மூர்த்தி கவனிக்க, படத்தொகுப்பை நாகூரான் ராமச்சந்திரன் மேற்கொண்டுள்ளனர்.
இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் சுசீந்திரன், பேரரசு, சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், நடிகர் இமான் அண்ணாச்சி, பாரதமாதா மணிமாறன், நடிகர் ஆர்.எஸ்.கார்த்திக், விஜய் டி.வி. புகழ் நவீன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இயக்குநர் எஸ்.ஏ.பிரபு பேசும்போது, “இந்தப் படம் பாரா சைக்காலஜி ஹாரர் ஜானரில் உருவாகியுள்ளது. கதை பிடித்துப் போனதால் படத்தின் கதாநாயகன் ஜஸ்டின் தான் இந்தப் படத்திற்கான தயாரிப்பாளர்களை ஆர்வமுடன் தேடினார். யூடியூப்பில் பார்த்த அஸ்வின் என்கிற குறும்படத்திற்கு இசையமைத்திருந்த விஜய் சித்தார்த்தின் இசையால் ஈர்க்கப்பட்டு அவரை இசையமைப்பாளராகத் தேர்வு செய்தோம். என்னுடைய கல்லூரி காலத்திலிருந்து நண்பராகத் தொடர்ந்து வரும் ஹரிசங்கர் ரவீந்திரன் மூன்று பாடல்களையும் எழுதியுள்ளார். பெரிய பாடலாசிரியராக ஒப்பந்தம் செய்யலாமே என முதலில் தயாரிப்பாளர் தயங்கினாலும் ஹரிசங்கர் எழுதிய முதல் பாடலைப் பார்த்துவிட்டு அனைத்துப் பாடல்களையும் அவரே எழுதும்படி கூறிவிட்டார்.
சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் எனக்கு நீண்ட நாட்களாக நெருங்கிய பழக்கம் உள்ளவர் என்பதால் இந்தக் கதை குறித்து அவ்வப்போது அவரிடம் விவாதித்து அவரது ஆலோசனைகளையும் கேட்டுக்கொண்டேன். இந்தப் படத்திற்குப் பொருத்தமான டைட்டில் என்பதால், டோரா பட இயக்குநர் தாஸ் தான் அவரிடம் இருந்த இந்த ஸ்ட்ரைக்கர் டைட்டிலை எனக்காகக் கொடுத்தார்” என்று கூறினார்.

பாடலாசிரியர் ஹரிசங்கர் ரவீந்திரன் பேசும்போது, “கவிஞர் கண்ணதாசன் எழுதிய வசந்த கால நதியினிலே பாடல் போல, இந்த படத்தில் ஒரு பாடலை அந்தாதியில் எழுதியுள்ளேன். இதற்கு முன்னதாக பாசமலர், பொன்னூஞ்சல், வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் பாடல் எழுதியுள்ளேன். நீ வருவாய் என தொடரின் டைட்டில் பாடலை எழுதியது நான் தான். ஆனால் எதிலுமே என்னுடைய பெயர் இடம் பெறவில்லை. இந்த படத்தில் தான் முதல் முறையாக எனக்கு பாடலாசிரியர் என்கிற அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதை எனது வாய்ப்புக்கான மேடையாக நான் பயன்படுத்திக் கொள்கிறேன்” என்று கூறினார்.

படத்தின் நாயகன் ஜஸ்டின் விஜய் பேசும்போது, “என்னுடைய பயணத்தை ஒரு வி.ஜே. ஆகத்தான் ஆரம்பித்தேன். காஞ்சனா, மெட்ராஸ் திரைப்படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்தேன். எனது நடிப்பிற்கு லாரன்ஸ் மாஸ்டர் தான் பிள்ளையார் சுழி போட்டு துவங்கி வைத்தார். இந்தப் படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் விதமாக எடுத்துள்ளோம். பின்னணி இசை அமைத்தவர்களில் வி.டி. மோனிஷ் இந்த நேரத்தில் எங்களுடன் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது” என்று கூறினார்.
நடிகர் இமான் அண்ணாச்சி பேசும்போது, “படத்தின் நாயகன் ஜஸ்டினும் நானும் நீண்ட நாள் நண்பர்கள். ஆனால் என்னை இந்த படத்தில் நடிக்க அவர் கூப்பிடவே இல்லை.. இந்த படத்தின் பாடல்கள், ட்ரெய்லரை பார்க்கும்போது ஜஸ்டின் நிச்சயமாக முன்னணி ஹீரோவாக உயர்வார் என தெரிகிறது” என்று கூறினார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, “பிரபலமான கதாநாயகர்கள் எல்லாம் பத்து படங்கள் நடித்து ஒரு இடத்தை பிடித்த பிறகுதான் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களை தயாரிப்பாளர்களிடம் கதை சொல்ல அனுப்பி வைப்பார்கள். ஆனால் தனது முதல் படத்திலேயே ஒரு இயக்குனரை தயாரிப்பாளரிடம் கதை சொல்ல அனுப்பிய நடிகர் ஜஸ்டின் நிச்சயமாக ஒரு முன்னணி ஹீரோவாக வருவார். ஆங்கிலம் கலக்காமல் பாடல் எழுதிய ஹரிசங்கருக்கு வாழ்த்துக்கள். நானும் பாடல் எழுதிய புதிதில் இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று பல பேர் கேட்டார்கள். ஆனால் அடிப்படையில் நான் கவிஞன்.. அப்புறம் தான் கதாசிரியர்..
அதேபோல எம்.எஸ்.வி., இளையராஜா இவர்களுடைய காலகட்டங்களில் குறிப்பிட்ட அளவிலான பாடலாசிரியர்கள், பாடகர்கள் மட்டுமே இருந்து வந்தார்கள். ஏ.ஆர் ரகுமான் வந்தபிறகு அந்த நிலை மாறி இன்று பல படங்களில் புதுவிதமான பாடலாசிரியர்களும் பாடகர்களும் இடம் பெற்று வருகிறார்கள். இதுதான் ஆரோக்கியமான விஷயம்.  இந்த படத்தில் ஒரு பாடலில் ராபர்ட் மாஸ்டரின் நடிப்பைப் பார்த்தபோது இவருடன் இணைந்து நடிக்கும் ஹீரோக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று சொல்ல தோன்றுகிறது.
கலைஞர் கருணாநிதி காலத்தில் தமிழில் டைட்டில் வைத்தால் வரி விலக்கு உண்டு என்கிற ஒரு சட்டத்தை கொண்டு வந்தார். அப்போது வெளியான அனைத்து படங்களுமே தமிழில் டைட்டில் வைத்து வெளியாகின. அஜித்தின் காட்பாதர் படம் கூட வரலாறு என்று பெயர் மாற்றி வெளியானது. ஆனால் இப்போது பல படங்களுக்கு ஆங்கிலத்தில்தான் டைட்டில் வைக்கிறார்கள்.. நான் கூட இந்தப் படத்தின் ஸ்ட்ரைக்கர் என்கிற டைட்டிலை பார்த்ததுமே போராளி என்கிற படமாக இருக்குமோ என்று நினைத்து விட்டேன். அதனால் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழ்ப் படங்களுக்கு தமிழில் டைட்டில் வைக்க வேண்டும் என்கிற சட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும். தமிழகம் தமிழ்நாடு என்று சொன்னால் மட்டும் தமிழ் வாழ்ந்து விடாது.. அதை வாழ வைக்க வேண்டும்.
அதேபோல இன்று பலரும் இளைஞர்களுக்குப் பிடிக்கும் படம் என்று சொல்லி படம் எடுக்க வருகிறார்கள்.. அந்த படங்கள் எல்லாம் ஒரு உயரத்திற்கு மேலே போகாது.. குடும்பத்தினர், குழந்தைகள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு படத்தை எடுக்க முயற்சிக்க வேண்டும். பிரபு என்கிற பெயர் கொண்ட நபர்கள் தமிழ் சினிமாவில் எப்போதுமே வெற்றியாளர்களாகவே வலம் வருகிறார்கள். இந்த படத்தின் இயக்குனர் எஸ்.ஏ.பிரபுவும் அப்படி ஒரு வெற்றி இயக்குநராக உருவெடுப்பார்” என்று வாழ்த்தினார்.

சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும்போது, “அங்கீகாரத்திற்கு ஏங்கும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து முயற்சி செய்துள்ளது நல்ல விஷயம். இந்த படத்தின் இயக்குநர் எஸ்.ஏ பிரபு, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சமயத்தில் அவரிடம் ஒரு படத்தின் மேக்கிங் வீடியோவை எடுக்கும் பொறுப்பையே நம்பி ஒப்படைத்தார்கள்.. அந்த அளவுக்கு திறமையான நபர். பொதுவாக ஹீரோவுக்கு கதை பிடித்து போனபின் அதன் பிறகு அதில் மாற்றம் செய்தால் அது சரியாக இருக்காது. ஆனாலும் இயக்குநர் பிரபு என்னிடம் இந்தக் கதை பற்றி இறுதி நேரத்தில் சொன்னபோது அதில் முக்கியமான ஒரு சில ஆலோசனைகளைக் கூறினேன். ஆனாலும் தயங்காமல் அதை ஏற்றுக்கொண்டு சில மாற்றங்களைச் செய்து படமாக்கி உள்ளார்” என்று கூறினார்.

நடிகர் ஆர்.எஸ். கார்த்திக் பேசும்போது, “இங்கே புதியவர்களை சப்போர்ட் பண்ண ஆட்கள் இல்லை.. 15 இயக்குநர்கள் 15 நடிகர்கள் என தமிழ் சினிமா தேங்கி நிற்கிறது. தென்னந்தோப்பு, மாந்தோப்பு வைத்திருப்பவர்கள் அதை மட்டுமே நம்பியிராமல் இடையில் ஊடு பயிர் சாகுபடி செய்வார்கள்.. அதுபோல புதியவர்களுக்கும் வாய்ப்பளித்து ஆதரவளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, “என்னுடைய சித்தப்பா இதுவரைக்கும் என்னை எந்த விழாவிற்கும் அழைத்ததில்லை.. அப்படி அவர் அழைத்துதான் நான் இந்த விழாவுக்கு வந்தேன். ஆனால் இந்த நிகழ்வைப் பார்க்கும்போது எனக்கு வெண்ணிலா கபடி குழு படத்தின் விழா போல தோன்றுகிறது. அந்த அளவிற்கு புதியவர்கள் பலரும் ஒன்று சேர்ந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்கள். நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும்” என்று வாழ்த்தினார்.

படத்தின் தயாரிப்பாளர் ஹென்றி டேவிட் பேசும்போது, “இது எனக்கு முதல் படம். இந்தப் படத்தின் கதையைக் கேட்டதுமே பிடித்தது. நிச்சயமாக அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும். குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாக இது உருவாகியுள்ளது. புதியவரான ஹரிசங்கர் பாடல்கள் எழுதுகிறார் என இயக்குநர் கூறியபோது நம்பிக்கை இல்லாமல் முதலில் தயங்கினேன். ஆனால் முதல் பாடலைப் பார்த்ததுமே அவர் மீது நம்பிக்கை வந்தது. அந்த அளவிற்கு நல்ல பாடல்களாக்க கொடுத்துள்ளார்” என்று கூறினார்.
இந்த நிகழ்வில் நேரில் கலந்துகொள்ள முடியாத சூழலில் படத்தின் நாயகி வித்யா பிரதீப், சிறப்பு அழைப்பாளர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் வீடியோ மூலமாகப் படக்குழுவினருக்குத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். பலகு ரலில் பேசக்கூடிய விஜய் டி.வி. புகழ் நவீன் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்சேதுபதி ஆகியோரின் குரலில் படக்குழுவினரை வாழ்த்தியதை விழாவிற்கு வந்தவர்கள் அனைவரும் ரசித்து வரவேற்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!