‘பொன்னியின் செல்வன்’ வெற்றி விழா கொண்டாட்டம்

0 0
Spread the love
Read Time:10 Minute, 2 Second

‘பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று’ வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனையைப் படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிகை மட்டும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் லைகா குழும தலைவர் சுபாஸ்கரன், பிரேமா சுபாஸ்கரன், இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் சீயான் விக்ரம், இரா. பார்த்திபன், கார்த்தி, ஜெயம் ரவி, லைகா நிறுவனத்தின் தமிழக தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே.எம். தமிழ்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சீயான் விக்ரம் பேசுகையில், ”பொன்னியின் செல்வன் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு எங்களை நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. பத்திரிகைகளும், ஊடகங்களும் இப்படத்தின் தொடக்கத்திலிருந்து பெரும் பாலமாக இருந்துள்ளீர்கள். வேறு எந்தப் படத்திற்கும் இல்லாத வகையில், இந்தப் படத்தின் படத்தைப் பற்றிய விமர்சனத்திற்காக ட்விட்டர், ஃபேஸ்புக் என எல்லா சமூக வலைதள பக்கத்தையும் பார்வையிட்டேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு புதுவிஷயத்தை பதிவிட்டிருந்தார்கள். இது எனக்கு ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது. ‘பொன்னியின் செல்வன் பிரமிப்பிலிருந்து வெளியே வந்து, அடுத்த படத்தில் கவனம் செலுத்துங்கள்’ என்று என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் செல்லமாக கட்டளையிடும் அளவிற்கு இதில் மூழ்கி இருந்தேன்.

இந்த நாவலை வாசித்து பல ஆண்டுகளாக அந்த கதாபாத்திரங்களைப் பற்றி தங்களது மனதிற்குள் ஒவ்வொரு வகையில் வரைந்து வைத்துக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஆதித்ய கரிகாலன், வந்தியத்தேவன், குந்தவை, அருள்மொழிவர்மன்.. என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும், ஒரு கற்பனை இருந்திருக்கும். அவர்கள் அத்தனை பேருக்கும் ஒரு முகமும் இருந்திருக்கும். அந்த முகங்கள் அனைத்தும் தற்போது எங்களின் முகமாக மாறிவிட்டது. தற்போது அந்த கதாபாத்திரங்களை பற்றி எண்ணும்போது, எங்களது முகம் உங்களது நினைவிற்கு வருகிறது. இதற்காக படைப்பாளி மணிரத்னத்திற்கு எங்களின் தாழ்மையான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நடிகர்களான நாங்கள், எத்தனையோ வேடத்தில் தோன்றியிருக்கிறோம். ஆனால் வாசகர்களின் கற்பனையில் நீண்டகாலமாக இருந்த ஒரு முகமாக நாங்கள் மாற்றம் பெற்றிருப்பது என்பது புதிது.. நடிகர்களுக்கு எப்போதும் பார்வையாளர்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அதனை இந்தப் படத்தின் மூலம் எளிதாக சென்றடைந்திருக்கிறோம் என எண்ணும் போது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. சரித்திர கதைகளில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் மீது ரசிகர்கள் காட்டும் அன்பு, இன்று எங்களை வந்தடைந்திருக்கிறது. இதற்கு நன்றி என்ற ஒற்றை சொல் போதாது.

நாற்பது ஆண்டுகளாக திரையரங்கத்திற்கே செல்லாதவர்கள், இந்த படத்திற்காக மீண்டும் திரையரங்கத்திற்கு வருகை தந்திருக்கிறார்கள் எனும் போது மகிழ்ச்சி மேலும் இரு மடங்காகிறது இந்தப் படத்தை பார்த்த இளைய தலைமுறையினர் பலரும், ‘இந்த படத்தை பார்த்து விட்டோம். இருந்தாலும் பொன்னியின் செல்வன் நாவலின் ஐந்து பாகங்களையும் மீண்டும் ஒரு முறை  படிக்க வேண்டும்’ என்பார்கள். இந்தப் படத்தை பார்த்துவிட்டு, எல்லோரும் வாசிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறார்கள், இது மிகப் பெரிய விசயம். இதற்கான எல்லாப் புகழும் இயக்குநர் மணிரத்னத்திற்கும், தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கும் தான் சேரும்.” என்றார். 

இயக்குநர் மணிரத்தினம் பேசுகையில், ”எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அமரர் கல்கிக்கு முதல் நன்றி. இந்த நாவலை படித்த ஒவ்வொரு வாசகர்களுக்கும், ஒவ்வொரு கனவு இருக்கும். இதனை படமாக உருவாக்க வேண்டும் என பேராசைப்பட்டேன். இதனை அனுமதித்து, அங்கீகாரம் கொடுத்த அனைவருக்கும் நன்றி. சுபாஸ்கரன் அவர்களை சந்தித்து, ‘பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க விரும்புகிறேன்’ என்று சொன்னேன். ரெண்டே நிமிடத்தில் சரி என்று சொல்லிவிட்டார். அவர் இல்லையென்று சொன்னால், இந்த படைப்பு உருவாகி இருக்காது. அதனால் அவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் ஒரு குடும்பமாக தங்களின் ஒத்துழைப்பை அளித்தனர். அவர்கள் பங்களிப்பு செய்யவில்லை என்றால் இது நடைபெற்றிருக்காது. அதுவும் கொரோனா காலகட்டத்தில், உடல் எடையை அதிகரித்துக் கொள்ளாமல், சீராக பேணி பராமரித்து ஒத்துழைப்பு கொடுத்தது மறக்க இயலாது. இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியில் வந்து பார்க்கும்போதுதான் எத்தனை பேர் கடினமாக உழைக்கிறார்கள் என தெரிந்தது. சில தருணங்களில் இதுவே எனக்கு பயத்தையும் தந்தது. ஒவ்வொருவரும் என்னை நம்பி பணியாற்றும்போது, அதற்கான பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என நினைத்துக் கொள்வேன். இந்தப் படத்தின் வெற்றிக்கு பேருதவி புரிந்த பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் பேசுகையில், ”இதுபோன்ற பிரம்மாண்டமான படைப்பை தயாரிப்பதற்கு வாய்ப்பளித்ததற்காக முதலில் மணிரத்தினத்திற்கு நன்றி. மணிரத்தினம் ஒரு லெஜன்ட். நான் சிறிய வயதில் மணிரத்னம் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தளபதி’ படத்தை பார்த்திருக்கிறேன். இன்று வரை அவர்கள் இருவரும் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். இந்தப் படத்தின் ப்ரீ ப்ரொடக்சன் மற்றும் போஸ்ட் ப்ரொடக்சஷன் பணிகளை நேர்த்தியாக கையாண்டார். இந்தப் படத்திற்காக பணியாற்றிய ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், சீயான் விக்ரம் உள்ளிட்ட நடிகர், நடிகைகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் லைகா குழுமத்தின் சார்பாக நன்றியை பதிவு செய்து கொள்கிறேன்” என்றார்.

இதனிடையே ‘பொன்னியின் செல்வன்’ நாவலை எழுதிய அமரர் கல்கியை போற்றும் வகையில், அவரது பெயரில் செயல்படும் அறக்கட்டைளைக்கு லைகா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியிருக்கிறது. இதனை லைகா குழும அதிபர் சுபாஸ்கரன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் சென்னையிலுள்ள அமரர் கல்கியின் மகன் கல்கி ராஜேந்திரனின் முன்னிலையில், அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான சீதாரவியிடம் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!