‘அங்காடித்தெரு’ திரைப்படத்தின் மூலம் ரங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளி மாளிகைக் கடைகளில் தமிழ் இளம் இளைஞர்களும் இளைஞிகளும் குளிர்சாதன அறைகளில், அலங்கரிக்கப்பட்ட, நடமாடும் பொம்மைகளாகத் தம் இளமையான, இனிமையான வாழ்வைத் தொலைத்துவிட்டு எப்படி வாழ்கிறார்கள் என்று தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டி உலகத் தமிழர்களின் பாராட்டைப் பெற்றவர் இயக்குநர் வசந்தபாலன். இவர் ஆல்பம், வெயில், அரவான், காவியத்தலைவன் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். இவர் சினிமாவின் தரம், கமர்ஷியல், கலைப்படம் குறித்தான விமர்சனப் பார்வையை இங்கே வைக்கிறார்.
கதை மெதுவாக நகர்கிறது என்கிற விமர்சனத்தை பொதுவாக இணையம் முழுக்க பல விமர்சனங்களில் குறையாகச் சுட்டிக்காட்டுவதை நான் கண்டிருக்கிறேன்.
ஒருவேளை ஃபாரஸ்ட் கம்ப், பியானோ, லைப் இஸ் பியூட்டிபுல், கலர் பர்ப்பிள், ஜோக்கர், ஷஷாங் ரெடம்சன், கிரீன் மைல், டாக்சி டிரைவர், குட் வில் ஹண்டிங், சில்ரன் ஆப் ஹெவன், ஃபரன், கலர் ஆஃப் பேரடைஸ் ஆகிய படங்கள் தமிழில் வெளியாகி இருந்தால் அந்தப் படத்திற்கும் கதை மெதுவாக நகர்கிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருக்கும்.
எல்லா கதைகளும் ஏன் விறுவிறுப்பாக நகர வேண்டும்?
ஒருவனின் வாழ்க்கையை அதன் மேடு பள்ளங்களை விவரிக்கிற கதை எப்படி விறுவிறுப்பாக நகரும்? அதன் போக்கில் அதன் அழகுகளை விவரித்தபடி நகர்வது தானே அதனுடைய பேரழகு.
இப்படி எடுத்துக் கொள்ளலாம் தமிழில் வெளியான சில கிளாசிக் திரைப்படங்கள் (உ-ம்) 16 வயதினிலே, முள்ளும் மலரும், மூன்றாம் பிறை, சிப்பிக்குள் முத்து, நாயகன், சலங்கை ஒலி, சங்கராபரணம், மெளன ராகம், முதல் மரியாதை, மகாநதி, ஆட்டோகிராப், உதிரிப்பூக்கள், 96, தவமாய் தவமிருந்து போன்ற திரைப்படங்களைக் குறிப்பிடலாம். இவை தமிழ் வாழ்வின் அற்புதங்களை, கதாபாத்திரங்களின் அழகிய முரண்பாடுகளை, தமிழ் மண்ணின் மணத்தை, கலாச்சாரத்தின் அழகை விவரித்தபடி நகரும் திரைப்படங்கள்.
இவையெல்லாம் மெதுவாக நகரும் கதை அமைப்பைக் கொண்டவை தானே.
ஒருவேளை விறுவிறுப்பான கதையம்சம்தான் முக்கியம் என்று இந்த இயக்குநர் கள் எண்ணியிருந்தால் இந்த கிளாஸிக் திரைப்படங்களில் அதிக எண்ணிக்கை யில் நடித்திருக்கும் கமலஹாசன் என்ற மாபெரும் கலைஞனை நாம் இழந் திருக்கக்கூடும்.
சகலகலா வல்லவன் தொடங்கி தூங்காதே தம்பி தூங்காதே, கல்யாணராமன், உயர்ந்த உள்ளம், காதல் பரிசு, காக்கி சட்டை, விக்ரம் என்ற கமர்சியல் படங்களின் நாயகனாக மட்டுமே தொடர்ந்து நடிக்க வைத்திருப்பார்கள்.
சப்பாணியையோ, வேலு நாயகனையோ, சிப்பிக்குள் முத்து கதாபாத்திரத்தையோ இழந்திருப்போம்.
பந்தய மைதானத்தில் ஓட்டத்திற்கு எதிர்த்திசையில் கமல் ஓடத் தொடங்கிவிட்டார். கமர்சியல் நாயகனில் இருந்து நாயகன் பிரிந்து விஸ்வரூபம் எடுத்து விட்டார்.
அதனால்தான் அப்பு கமல், மைக்கேல் மதன காமராசன் 4 கமல், ஹே ராம், விருமாண்டி, பம்மல் கே. சம்பந்தம், அவ்வை சண்முகி என பல நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கமல்ஹாசன்கள் நமக்குக் கிடைத்தார்.
கிரைம், ஆக்சன், திகில் படங்களுக்கு மட்டுமே உண்டான கதை அமைப்பு என்பது விறுவிறுப்பான கதை சொல்லல் அல்லது ஹாலிவுட்டின் கமர்சியல் திரைப்படங் களுக்கான பொதுவான பாணி.
ஹாலிவுட் திரைப்படங்களின் பொதுவான நோக்கம் உலகம் முழுக்க அந்தத் திரைப்படங்கள் எல்லா மொழிகளிலும் வெளியாக வேண்டும்.
அதற்கு உலகத்தில் உள்ள அனைத்துத் திரைப்பட ரசிகர்களையும் அது கவர வேண்டும் என்பதுதான் முக்கியமான குறிக்கோள். ஆகவே கலாச்சாரம், பண்பாட்டு, மொழி, இன, மத அடையாளங்களைத் தவிர்த்துவிட்டு உலகளாவிய பொது அடையாளத்துடன் வெறும் வெற்றுக் கதாபாத்திரங்களுடன் விறுவிறுப்பான கதையை அவர்கள் இரண்டு மணி நேரத்தில் சொல்ல வேண்டும் என்ற புதிய விதியுடன் இயங்குகிறார்கள். புது வகையான மிருகம் வரும். செவ்வாய்கிரக மனிதர்கள் வருவார்கள். உலகை அழிவில் இருந்து காப்பாற்றும் கதாநாயகன் வருவான். 007 வருவார்.
கமர்சியல் ஹாலிவுட் படங்களின் விறுவிறுப்பு ஏதோ ஒரு காரணத்தால் திரைப்பட விமர்சனம் எழுதுபவர்களையும் விறுவிறுப்பான கதை என்ற சொல்லாடல் ஈர்த்து விட்டது என்று தோன்றுகிறது
அதை நம் திரைப்படங்களின் கதை விவாதங்களிலும் படம் உருவாக்கத்திலும் விமர்சனத்திலும் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது அதன் காரணமாகவே கதாசிரியர் தொடங்கி ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் என அனை வரும் விறுவிறுப்பாக கதை சொல்லப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஒரு காட்சியில் தெரிகிற சூரியக்கீற்றை, ஒரு நிலக்காட்சியின் 100% அழகை முழுவதுமாகத் திரையில் வைக்க இயலாமல் நறுக் நறுக்கென்று கட் செய்து கதையை நகர்த்துகிறார்கள். கேமரா நிற்காமல் ஓடுகிறது. ஒரு அழகான இயற்கையின் அழகையோ அல்லது அழகான கதாநாயகியின் முக அழகையோ நாம் ரசித்து கிரகிப்பதற்குள் கட் செய்யப்படும்.
எந்த உணர்ச்சிகளையும் கோராமல் விறுவிறுப்பு, கதையின் திடீர் திருப்பங்கள், திடுக்கிடும் வில்லன், சண்டை என கிளைமாக்ஸ் வரை திரைப்படம் நகர்ந்து விடும்.
விறுவிறுப்பான கதை சொல்லல் மட்டும்தான் முக்கியம் என்று நாம் நினைத்து விட்டால் நதி போன்ற வாழ்க்கையின் அழகைச் சொல்லும் உன்னதத்தைச் சொல்லும் திரைப்படங்கள் வருவது குறைந்துவிடும்.
இந்த நேரத்தில் மலையாளத் திரைப்படங்களை எண்ணிக் கொள்கிறேன்.
அதிகபட்சமாக மலையாளத்தில் வெளியாகும் மெஜாரிட்டியான திரைப்படங்கள் மெதுவான கதை சொல்லலைக் கொண்ட படங்களே. ஆனால் அங்கே இருக்கும் 90 சதவிகித ரசிகர்களும் ஏதோ ஒரு விதத்தில் அதை ரசிப்பதற்கு, அதைக் கொண் டாடுவதற்கு, கதை தாமதமாக நகருவது என்பதைக் குறையாக எண்ணாமல் கலையின் அம்சமாக எண்ணுகிற மனப்பக்குவம் கொண்டவர்களாக இருக்கிறார் கள்.
கேரளாவில் பல திரைப்பட கிளப்புகள் ஊர் ஊராகத் தோன்றி உலகின் சிறந்த திரைப்படங்களை இடையறாது திரையிட்டுக் காண்பித்ததன் விளைவாக மலையாள ரசிகர்களின் பார்வை, திரை ரசனை ஒரு படி மேலே வளர்ந்துள்ளது.
ஆகவே அங்கே ஹரிஹரன், ஐ.வி.சசி, பரதன், பத்மராஜன், லோகிதாஸ், பாசில், சி.பி.மலையில் திரைப்படங்கள் பெரிய வெற்றி கண்டன. இன்றைய காலகட்டத்திலும் மகேஷ்ன்டே பிரதிகாரம், கும்பைளைக்கி நைட்ஸ், தொண்டிமுதலும் திரிக்சக்ஷியும் போன்ற திரைப்படங்களில் மெதுவாக கதை நகர்த்து கவிதையாக கதை முடியும். மலையாளத்தில் அது பற்றி விமர்சனங்களில் எவ்விதப் புகாரும் இல்லாததால் வாழ்க்கையும் பண்பாடும் நிலப்பரப்பும் அங்கே கவிதையாக மலர்கின்றன.
வேகவேகமாக நகரும் திரைப்படங்களில் நடிப்புத் திறமையை வெளிக்கொணரும் காட்சிக்கோ, நடிகனுக்கோ, மெல்லிசைப் பாடல்களுக்கோ இடமில்லை.
மெதுவாக கதைசொல்லல், கதை மெதுவாக நகர்கிறது என்று மெஜாரிட்டியாக விமர்சனங்களில் சொல்லப்படுவது பொது மக்களின் திரை ரசனையை ஏதோ ஒரு விதத்தில் வைரஸ் போல பாதிக்கிறது. ஆழ்மனத்தில் படம் விறுவிறுன்னு போலயோ என்ற எண்ணம் ஏற்படத் தூண்டுதலாக இருக்கிறது. அது இன்று நல்ல கதையை நல்ல திரைப்படத்தை விஷம் வைத்துக் கொள்கிற வார்த்தைகள். இன்று முதல் 3 நாட்கள்தான் சினிமா என்று மாறி விட்ட காரணத்தினால் இன்ஸ்டெண்ட் விமர்சனங்களின் விளைவைத் திரைப்பட வெற்றி – தோல்விகளில் பார்க்க முடிகிறது.
நான் விறுவிறுப்பான கமர்சியல் சண்டைப் படங்களுக்கு எதிரியல்ல. முதலீடு செய்யப்பட்ட பணம் திரும்ப எடுக்கப்பட்டே ஆக வேண்டும் என்ற திரைப்பட வியாபாரத்தின் இயங்குவிதியை நான் அறிவேன். தயாரிப்பாளர்கள் தொடங்கி திரையரங்கு உரிமையாளர்கள் வரை லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதையும் அறிவேன்.
நல்ல விமர்சனங்கள் வாயிலாக கலையும் பொது ரசனையும் கைகோர்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.
கலை மேம்பட வேண்டும், அதன் வாயிலாகத் திரைப்பட வியாபாரமும் சிறப்பாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.